அயோத்தி திரைப்படக் கதையின் மீது எவர் உரிமை கோரினாலும் அதை நான் உறுதியாக மறுக்கிறேன்

”நாளிதழ்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்த கதையை நான் உருவாக்கினேன். படத்திலும் இந்த கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று போடுகிறார்கள். எனவே எனது அயோத்தி திரைப்படக் கதையின் மீது எவர் உரிமை கோரினாலும் அதை நான் உறுதியாக மறுக்கிறேன்” என பிபிசி தமிழிடம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அயோத்தி பட கதை சர்ச்சை குறித்து பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசிய எஸ்.ரா, “ஒரு வட இந்திய குடும்பம் விபத்தில் சிக்கிய போது உதவி செய்த தகவல்களை எனக்கு தந்தார் மதுரையைச் சேர்ந்த நண்பர் ஒருவர். அவர் கொடுத்த விரிவான தகவல்களைக் கொண்டே இக்கதையை எழுதினேன். அயோத்தி படத்தில் அவருக்கு முறையாக நன்றி சொல்லியிருக்கிறார்கள். படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.
இயக்குநர் திரைக்கு ஏற்றபடி மாற்றம் செய்ய விரும்பிய போது கதையில் நிறைய மாற்றங்கள் செய்து கொடுத்திருக்கிறேன். அதன் இறுதி வடிவமே இன்றுள்ள திரைப்படம். வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கும் ஒரு படத்தை வைத்து தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, என் நற்பெயரை கெடுக்கும் உள்நோக்கத்துடன் அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
“செய்தி வேறு, கதை வேறு. கதையில் உண்மையுடன் கற்பனை கதாபாத்திரங்கள் இணைந்து படைப்பாளியின் கலைத்திறனால் புனைவாகிறது. இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு போல சாலை விபத்து மற்றும் குற்ற செய்திகளுக்கு யாரோ உரிமை கோரினால் எந்தப் படைப்பாளராலும் எதையும் எழுத முடியாது” என்றும் அவர் பிபிசி தமிழிடம் கூறினார்.
அயோத்தி பட சர்ச்சை குறித்து கருத்து கேட்பதற்காக அப்படத்தின் இயக்குநர் மந்திர மூர்த்தியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது, ”இது குறித்து தற்போது எதுவும் பேச விரும்பவில்லை. ஒரு வாரத்திற்கு பின் தானே முன்வந்து நடந்த விஷயங்களை ஊடகங்களிடம் கூறுவதாகவும்” தெரிவித்தார்.
நன்றி: பிபிசி தமிழ்