டி.எம்.செளந்தராஜன் நூற்றாண்டு விழா

!🔥
டி.எம்.செளந்தராஜன் நூற்றாண்டு விழா இன்று💐
எந்நிலையிலும் என்றும் தமிழர்களால் மறக்கமுடியாத, மறக்கக்கூடாத ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மாபெருங் கலைஞன் டி.எம் . சௌந்தரராஜன் என்றால் மிகையில்லை. 1922 பங்குனி 24 இல் தமிழர்களின் காதுகளுக்கு தேன்வார்க்கப்பிறந்தவரே நம் குரலரசர் பாடகர் திலகம் டி எம் எஸ் என்று தமிழர்கள் இனிமையாக அழைக்கும் ஒப்பாரும் மிக்காருமில்லா பாடகர்திலகம் டி . எம் . சௌந்தரராஜன். வானத்தினுள் இறைவன் மறைத்து வைத்து தமிழுலகுக்கு எடுத்து வழங்கிய பொக்கிசப் பரிசு டி எம் எஸ் என்னும் மகா இசைமேதை. அவரின் இன் குரலால் ஆனந்தமடைந்து இன்சுகம் கண்டவர்கள் கோடி அவர். இன்று 100 வயதை எட்டியுள்ளார். மறைந்த நிலையிலும் அவரை தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவோம்.
இப்போது 40-களில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பால்யத்தில் கண்விழிக்கும்போது பக்திப் பாடல்களைக் கேட்டபடியே துயில் எழுந்தவர்களாக இருப்பார்கள். கிராமங்களில் சிறு நகரங்களில் அந்தப் பாடல்கள் அதிகாலையில் சத்தமாக ஒலிக்கவிடப்படும். கோயில்களில், தெருமுனைக் கடைகளில், வானொலிப் பெட்டிகளிலிருந்து அந்தப் பாடல்களின் ஒலி, ஓர் அலைபோலப் புறப்பட்டு வரும். அவற்றைக் கேட்பதற்காக அது ஒலிக்கும் இடங்களுக்கு அருகில்போய் அமர்ந்துகொள்பவர்களும் உண்டு. அந்தக் குரல் அவர்களுக்குள் பெரும் நிம்மதியையும் உணர்வுப் பெருக்கையும் நிகழ்த்த அந்தக் காலைகள் அவர்களுக்கு மிகவும் அழகானதாக விடியும். சுப்ரபாதங்களும் சகஸ்ரநாமங்களும் ஓங்கி ஒலித்த இடங்களிலெல்லாம் எளிய தமிழிலான பக்தி இசை பரவித் தன் செல்வாக்கை நிறுவியிருந்த காலகட்டம். இந்த மாற்றத்தைக் கொண்டுவந்து தமிழிசை வரலாற்றில் தன் பேரை நீங்காத ஒன்றாக எழுதியவர் டி.எம்.எஸ் எனப்படும் டி.எம்.சௌந்தரராஜன்
தமிழ்த் திரைப்படங்கள் பேசவும் பாடவும் தொடங்கிய முப்பதுகளிலேயே பின்னணிப் பாடகர்களும் அறிமுகமாகிவிட்டார்கள் என்றாலும், ஐம்பதுகளில்தான் அவர்கள் பெரும்புகழ் பெறத் தொடங்கினார்கள். 1950-ல் ‘கிருஷ்ணவிஜயம்’ படத்தில் பின்னணி பாடத் தொடங்கியவர் டி.எம்.சௌந்தரராஜன். 1954-ல் வெளிவந்த ‘தூக்குத் தூக்கி’ அவரைப் புகழின் உச்சிக்குத் தூக்கிச் சென்றது. ஐம்பதுகளில் தொடங்கிய அவரது இசை சாம்ராஜ்யம் எண்பதுகள் வரையில் நீடித்தது. அவர் அதிகம் பாடியது சிவாஜிக்கு. இரண்டாவதாக எம்ஜிஆர். மூன்றாவதாக ஜெய்சங்கர். ஏறக்குறைய 40 ஆண்டு காலம் 851 திரைப்படங்களில் டி.எம்.எஸ். பாடிய 2,053 பாடல்களாக்கும்
புரட்சியும் எழுச்சியுங் கொண்ட ஈழத்தமிழர் வாழ்வில் புத்துணர்ச்சி பெற, புதுவேகமேடுக்க ஐயா டி எம் எஸ் பாடிய புரட்சிப்பாடல்கள் எழுச்சியை தந்து உத்வேகத்தை அதிகரிக்கின்றது.
வெற்றிகளிலும் மாறுதல்களிலும் மனம் மகிழவும் நம்மை நாம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் எம்முடன் கூட வருவது டி எம் எஸ் பாடல்கள்.
“துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது தம்பி..” என்று அவர் பாடும் பாட்டை கேட்டால் சுருங்கிக்கிடக்கும் இதயங்கள் வீறுகொள்ளும் வீராவேசப்படும்.
இப்படியாக பல டி எம் எஸ் பாடல்கள் எழுச்சியையும் தெம்பையும் தருவனவாகும்.
செங்கதிர் உதிக்கும் இளங்காலை பொழுதினிலே எழுச்சிதரும் குரலுக்கு டி எம் எஸ் தவிர வேறு எவரையும் நினைத்தும் பார்க்கமுடியாது.
எல்லாவித மனித உணர்வின் பரிமாணங்களுக்கும் தன்குரலால் வளம் சேர்த்தவர் டி எம் எஸ் மட்டுமே,
அதுமட்டுமின்றி உருகாத உள்ளங்களை இறையிசையால் உருகச் செய்பவரும் அவரே. கணீரென்று பாடும் அவர் குரல் கரைந்துமுருகும் எழுச்சியுமூட்டும் நெகிழ்ச்சியுங்காட்டும் இறைவன் அளித்த பரிசு அது என்று அவரே தன்னடக்கத்துடன் கூறியிருக்கின்றார்.
முருகனே தனது தெய்வம் என்று வாழும் அதியுன்னத முருக பக்தர் , தனது திறமைகள் அத்தனையையும் முருகன் திருவடிகளுக்கே சமர்பித்து வாழும் மாபெரும் பாடகர்.
திரையிசைப்பாடல்களில் அவர் காட்டாத பாவங்கள் ஏற்ற இறக்கங்கள் வளைவுகள் சுழிவுகள் கெஞ்சல்கள் கொஞ்சல்கள் இல்லை, அவரின் திறமைகளில் மகத்தானது.
எந்த கதாநாயகனுக்கு பாடுகின்றாரோ அக்கதாநாயகனுக்கு இசைவாக அதே குரலில் பாடுவதே கேட்ட மாத்திரத்தில் இது இன்ன நடிகருக்கான பாடல் என்று அவரின் இரசிகர்கள் நுட்பமாக கண்டுபிடித்துவிடுவார்கள்.
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத குரலினிமை அவருக்கே வாய்த்த கொடை , தொழில் கடுமையான கவனம் கதாபாத்திரத்தின் தன்மை பாடல் இடம்பெறும் சூழ்நிலை படப்பிடிப்பு நடைபெறும் இடங்கள் மற்றும் பல விடயங்களை உள்வாங்கி அதற்கு கற்பனை கொடுத்து தன்குரலால் நடித்தே கொடுத்தார். அதன் சிறப்பே இன்றும் எத்தனையோ பாடகர்களின் பாடல்கள் வந்தும் அவர்பாடல்களே முந்தியிருந்துகொண்டிருக்கின்றது.
சிறிய குழந்தைகளும் தொலைக்காட்சிகளில் இடம்பெறும் பாடல் போட்டிகளில் அவர்பாடிய பாடல்களையே பெரியபாணங்களாய் எடுத்து பாடியடிக்கின்றார்கள்.
முடிந்தால் இப்பாட்டுக்கு நிகராய் பாடு என்று சொல்லாமல் சொல்லுவதுபோலிருக்கின்றது அவர்கள் சிரத்தையெடுத்து பாடும்விதம், படிப்பறிவில்லா பாமரர்களுக்கு தனது பாடல்களால் தமிழைக்கற்றுக்கொடுத்த ஆசான் டி எம் எஸ் என்றால் மிகையில்லை.
இசையமைப்பாளர் நன்று என்று சொன்ன பின்பும் தனக்கு திருப்தி வரவில்லை என்றதால் மீண்டுமொருமுறை சந்தர்ப்பம் வேண்டி பாடிய பாடலே இன்று நாங்கள் கேட்டு மகிழும் எழுசிப்பாடலான ” நான் ஆணையிட்டால் ” என்ற பாடலாகும்.
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் தான் பாடி படமாக்கப்பட்ட பின்பு காட்சியை பார்த்துவிட்டு பொருந்தாது என்று மறுத்து அண்ணன் டி எம் எஸ் பாடவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து சிவாஜியின் வாயசைவுக்கு ஏற்ப திரையை பார்த்து பாடிய பாடல் ” பாலூட்டி வளர்த்தகிளி ” என்ற பாடல் என்று மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசைவிழாவொன்றில் டி எம் எஸ் ஐயாவை புகழ்ந்தார்.
அப்படி வாயசைப்பை உள்வாங்கி உணர்வை கூட்டி பாடுவது மிகவும் நுணுக்கமான வேலை அதை ஒரு போட்டியாக எடுத்து சாதித்திருக்கின்றார் டி எம் எஸ் என்றே நினைக்கின்றேன்.
கலையுலகில் பெரும் புகழுக்குரியவர்களாக இருந்த சிலரில் டி எம் எஸ் பெயரும் என்றும் நினைக்கத்தக்கது போற்றத்தக்கது, வைணவக் குடும்பத்தில் பிறந்தபோதும் காலம் முழுவதும் தன்னை முருகபக்தனாகவே அடையாளப்படுத்திக்கொண்டு அப்படியே வாழ்ந்து மறைந்தவர் டி.எம்.எஸ். அவர் காலத்தில் வாழ்ந்த சமயப் பெரியவர்களான மகாபெரியவா, புட்டப்பர்த்தி சாயிபாபா ஆகியோர் இவரைக் காணவிரும்பி அழைத்து அவருக்கு ஆசி வழங்கி கௌரவித்தனர்.
டி.எம்.எஸ்ஸின் பல பக்திப் பாடல்களுக்கு அவரே இசையும் அமைத்திருக்கிறார். அப்படி அவர் இசையமைத்துப் பாடிய பாடல்களில் ஒன்று `கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்…’ என்னும் பாடல். தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த இந்தப் பாடலில் சரணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ராகத்தில் அமைந்த ராகமாலிகா வகையைச் சேர்ந்தது. அந்த ராகத்தின் பெயரும் அந்தச் சரணத்தில் வரும்.
தன் தனித்துவமான குரலால் தமிழ் பக்தி இசை மரபுக்கு அவர் செய்த கொடை மிகவும் அதிகம். தமிழ் இசை உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய டி.எம்.எஸ்ஸை இந்த வையகம் உள்ளவரை மறக்க இயலாது
🎬From The Desk of கட்டிங் கண்ணையா