ஐன்ஸ்டீனைவிட அறிவுத்திறன் அதிகம் – ஆட்டிசம் பாதித்த சிறுமி முதுநிலை பட்டம் பெற்று சாதனை

ஐன்ஸ்டீனைவிட அறிவுத்திறன் அதிகம் – ஆட்டிசம் பாதித்த சிறுமி முதுநிலை பட்டம் பெற்று சாதனை
அதாரா பெரஸ்
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் ஆட்டிசம் பாதித்த 11 வயது சிறுமி, பொறியியலில் முதுநிலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
மெக்சிகோ நகரைச் சேர்ந்த 11 வயது சிறுமி அதாரா பெரஸ் சான்செஸ். இவருக்கு 3 வயது இருக்கும்போது ஆட்டிசம் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் இந்த சிறுமியால் மற்றவர்களுடன் சகஜமாக பழக முடியவில்லை. மற்ற குழந்தைகளுடன் இவர் விளையாடும்போது, அதாராவை மற்ற சிறுமிகள் ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு விளையாடியுள்ளனர். பட்டப் பெயர்கள் வைத்தும் கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் மன அழுத்தத்துக்கு ஆளான அதாரா, பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை என தனது தாய் நல்லேலி சான்சேஸிடம் கூறியுள்ளார். வகுப்பில் அதாரா எப்போதும் தூங்கி விழுவதாகவும், படிப்பில் அவருக்கு ஆர்வம் இல்லை எனவும் ஆசிரியைகள், புகார் தெரிவித்துள்ளனர். இது அதாராவின் தாய் சான்சேஸ்க்கு மிகுந்த மனவேதனையை அளித்தது. ஆனால், தனது குழந்தையிடம் வழக்கத்துக்கு மாறான அறிவுத்திறன் இருப்பதை சான்சேஸ் அறிந்தார்.
அவர் ஒரு மனோதத்துவ நிபுணரிடம், தன் மகள் அதாராவை அழைத்துச் சென்றார். திறன் வளர்ப்பு மையத்தில் அதாராவை சேர்க்கும்படி அவர் பரிந்துரை செய்தார். அதன்படி திறன் வளர்ப்பு மையத்தில் அதாரா சேர்க்கப்பட்டார்.
அதன்பின் அவரது படிப்பு திறமை அதிசயிக்கும் அளவில் இருந்தது. 5-வது வயதில் 8-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். அடுத்த ஓராண்டில் உயர்நிலை பள்ளி படிப்பையே முடித்துவிட்டார்.
அவரது அறிவுத் திறன் (ஐ.க்யூ) 162 என்ற அளவீட்டில் இருந்தது. இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற மேதைகளுக்கு இருந்த அறிவுத்திறனைவிட அதிகம். 10 வயதுக்குள் மெக்சிகோ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இன்டஸ்ட்ரியல் பொறியியல் பட்டத்தை முடித்தார். தற்போது தனது 11 வயதில் சிஎன்சிஐ பல்கலைக்கழகத்தில் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் முதுநிலை பட்டத்தை அதாரா பெற்றுள்ளார். தற்போது அவர் பேச்சாளராகவும் மாறி, பல நிகழ்ச்சிகளுக்கு சென்று உரையாற்றுகிறார்.
மெக்சிகோ விண்வெளி நிறுவனத்தில் தற்போது பணியாற்றும் அதாரா, ஒரு நாள் நாசாவில் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
நன்றி: இந்து தமிழ் திசை