எப்பேர்பட்ட மனிதர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்!

நேற்று மாலைப் பொழுது இனிதாகிவிட்டது!
பத்திரிகையுலகத் தேனீ மணாவின் மகன் அகிலன் திருமண வரவேற்பு நிகழச்சி எம்.ஜி.ஆர்- ஜானகி கல்லூரியில் கோலாகலமாக நடந்தது! தமிழக ஊடகத் துறையில் அனைத்து தரப்பினரும் சங்கமிக்கும் நிகழ்வாக இது அமைந்துவிட்டது!
பட்டியல் போட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு பலதரப்பட்ட பத்திரிகையாளர்கள், எழுத்தளர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்! இப்படி பாகுபாடின்றி பத்திரிகை துறையில் அனைவரையும் நட்பாக்கிக் கொண்டிருப்பதே மணாவின் தனிச் சிறப்பு எனலாம்.
அத்துடன் திரையுலகத்தைச் சேர்ந்த சிலரும் கூட வந்திருந்தனர்! அதில் மூப்பில்லா மூத்த திரைக் கலைஞர் அன்பு அண்ணன் சிவகுமார், சார்லி, எஸ்.பி.முத்துராமன்..போன்றோர் வந்திருந்தனர். இந்த நிகழ்வுக்கு வந்திருந்த திரையுலக முன்னோடியான கலைவாணரின் மகன் நல்லதம்பியை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார், எம்.ஜி.ஆர் பேரன் குமார் ராஜேந்திரன்.
நல்லதம்பி என்னிடம் கொஞ்ச நேரத்திலேயே மிக நெருக்கமாக பேச ஆரம்பித்துவிட்டார்! வந்திருந்த ஏராளமான நண்பர்களிடம் கைகுலுக்கி பேசிய வண்ணம் அவ்வப்போது நல்லத்தம்பியிடமும் விட்ட இடத்திலிருந்து உரையாடல் தொடர்ந்தது.
”அப்பா இறக்கும் போது எனக்கு எட்டு வயது! குடும்பத்திற்கு என்று எந்த சேமிப்பும் இல்லாமல் மலை போல சம்பாதித்த பணத்தை எல்லாம் மனம் போல அப்பா தானதர்மம் செய்து கரைத்து விட்டிருந்தார்! நாங்க பெரிய பங்களா வீட்டில் இருந்து சிறிய வாடகை வீட்டுக்கு குடி பெயர்ந்தோம்.
‘கொடுத்து பழக்கப்பட்ட குடும்பம் பிறரிடம் யாசகம் கேட்டுவிடக் கூடாது’ என அம்மா திரைப் படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு போன போது, எம்.ஜி.ஆர் துடித்துப் போனார். ”நீங்க இனியும் சினிமாவுக்கு வந்து கஷ்டப் படக் கூடாது. இனி இந்தக் குடும்பத்தின் எல்லா செலவுகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன்” என நாங்கள் தலை எடுத்து சம்பாதிக்கும் வரை பார்த்துக் கொண்டார். என் அக்காமார்களின் திருமணத்தை எல்லாம் சீரும், சிறப்புமாக நடத்தி வைத்தார். இவை யாவற்றையும் உள்ளார்ந்த அன்புடன் பிறருக்குத் தெரியாமல் செய்தார்.
எம்.ஜி.ஆர் ஒரு சாதராண துணை நடிகராய் இருக்கும் காலகட்டத்தில் அவரது அம்மா உடல் நிலை சரியில்லாத நிலையில், கலைவாணர் தன் மனைவியின் தங்க வளையல்களை கழட்டித் தந்து செலவுக்கு உதவினாராம். அந்த ஒரு உதவிக்காக வாழ் நாளெல்லாம் நன்றி பாராட்டிக் கொண்டே இருந்தாராம் எம்.ஜி.ஆர்!
கேட்கக் கேட்க சிலிர்ப்பாக இருந்தது! யேங்கப்பா..! எப்பேர்பட்ட மனிதர்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்!
நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் மணாவின், ‘எழுத்தும் , வாழ்வும்’ என்ற வெகு சுவாரஷ்யமான நூல் வந்தவர்களுக்கு எல்லாம் தரப்பட்டது. இந்த நூலை காலையிலேயே வாசிக்கத் தொடங்கிவிட்டேன். மிகச் சிறப்பு! மணாவின் தேர்ந்தெடுத்த எழுத்துக்களை நூலாக்கி உள்ளனர். அத்தனையும் தேன்!
இந்த திருமண வரவேற்பு நிகழ்வை இந்த நூல் மறக்க முடியாத நினைவாக மாற்றிவிட்டதென்று தான் சொல்ல வேண்டும். திருப்பத்தூர் பரிதி பதிப்பகம் வெளியிட்டு உள்ளனர். நூலில் விலையே குறிப்பிடவில்லை! இதை விற்பனைக்கும் கிடைக்கும்படி செய்யலாமே!
– சாவித்திரி கண்ணன்