பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்… திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!

பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்… திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு..!
திருப்பதி மலையில் 7,500 அறைகள் உள்ளன. அவற்றில் 40,000 பக்தர்கள் தங்க இயலும். சாதாரண பக்தர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக 85 சதவிகித அறைகள் உள்ளன.
ஏப்ரல் 9ஆம் தேதி முதல் நடந்து மலையேறும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் (திவ்ய தரிசன) பரிசோதனை திட்ட அடிப்படையில் வழங்கப்படும் என அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.
திருப்பதி மலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி, “ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை கோடை விடுமுறையை முன்னிட்டு அளவிற்கு அதிகமான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வருவார்கள். நடந்து மலை ஏறும் பக்தர்கள் வசதிக்காக, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து தினமும் பத்தாயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு தினமும் 5,000 டோக்கன்களும் என திவ்ய தரிசனத்திற்காக ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி முதல் பரிசோதனை அடிப்படையில் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் கோடை விடுமுறையை முன்னிட்டு அதிக அளவில் பக்தர்கள் வருகை இருக்கும் என்பதால் சாதாரண பக்தர்களுக்கு சாமி கும்பிட முன்னுரிமை அளிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே கோடை விடுமுறை காலத்தில் புரோட்டகால் தகுதி வாய்ந்த பக்தர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசன அனுமதி அளிக்கப்படும். எனவே முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனத்திற்காக பரிந்துரை கடிதங்களை பக்தர்களிடம் கொடுத்து அனுப்பக்கூடாது என்று கேட்டு கொண்டிருக்கிறோம்
இது தவிர தலா பத்தாயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தில் வழங்கப்படும் ஸ்ரீவானி அறக்கட்டளை தரிசன டிக்கெட் எண்ணிக்கை மற்றும் பல்வேறு மாநில சுற்றுலா அபிவிருத்தி கழகங்களுக்கு வழங்கப்படும் 300 ரூபாய் தரிசன டிக்கெட் எண்ணிக்கை ஆகியவற்றையும் கோடைக் காலத்தில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி மலையில் 7,500 அறைகள் உள்ளன. அவற்றில் 40,000 பக்தர்கள் தங்க இயலும். சாதாரண பக்தர்கள் பயன்படுத்துவதற்கு வசதியாக 85 சதவிகித அறைகள் உள்ளன. கோடைக் காலத்தில் அன்னதானக் கூடம் மற்றும் திருப்பதி மலையில் உள்ள இரண்டு மற்றும் நான்கு ஆகிய பல்வசதி மண்டபங்களில் செயல்படும் அன்னதான கூடங்கள், சாமி தரிசன வரிசைகள் ஆகியவற்றில் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும். கோடைக் காலம் முழுவதும் திருப்பதி மலையில் உள்ள அனைத்து மொட்டை போடும் மண்டபங்களிலும் 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் பக்தர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் லட்டு பிரசாத விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என கூறினார்.