நாகூர் ஹனிபா

நாகூர் இஸ்மாயீல் முஹம்மத் ஹனீஃபா (25 டிசம்பர் 1925- 8 ஏப்ரல் 2015) தமிழக அரசியல்வாதி மற்றும் பிரபல இஸ்லாமியப் பாடகரும் ஆவார். திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் இறுதி வரை முக்கிய பங்கு வகித்தார். இவர் “இசை முரசு” என்றும் அழைக்கப்படுகின்றார்
சினிமாவில் நிறைய பாடவேண்டும் என்ற ஆசை ஹனிபாவுக்கு இருந்தது. ஆனால் அவரால் சில பாடல்கள் மட்டுமே பாட முடிந்தது. முதன்முதலாக இவருக்கு சினிமாவில் பாட வாய்ப்பு வந்தபோது இவருடைய பெயரை ஹனிபா என்பதற்குப் பதிலாக குமார் என்ற புனைப்பெயரில் பாடச்சொன்னதால் அந்த வாய்ப்பை நிராகத்தார் ஹனிபா. அதேபோல ரேடியோக்களில் பாடி புகழ்பெற்ற ஹனிபா அகில இந்திய வானொலியை ஆகாசவாணி என்று மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேடியோவில் பாடுவதையே நிறுத்தினார். அந்தளவிற்கு கொள்கைப் பிடிப்பு கொண்டவராக இருந்தார். பின்னாட்களில் எல்லோரும் கொண்டாடுவோம், உன் மதமா என் மதமா என்று அவர் சினிமாவில் பாடிய சில பாடல்களும் தமிழகத்தில் மதம் கடந்து பலரின் விருப்பத்துக்குரிய பாடலாக இருந்தது.
அவருக்கு கைகூடாத இன்னொரு விஷயம் தேர்தல் அரசியல். அவர் போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் தோல்வியே தந்தது. 1974-ம் ஆண்டில் கருணாநிதி நாகூர் ஹனிபாவை மேல்சபை உறுப்பினராக்கினார். ‘எனக்குப் பேசவே வராது. என்னைப்போய் மேல்சபை உறுப்பினராக நியமிக்கிறீர்களே’ என்று ஹனிபா கேட்க, ‘பேச வராது என்றால், பாடுங்கள்!’ என்றார் கருணாநிதி. அந்த ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, அதன் சிறப்பான அம்சங்களைப் பாடலாக்கி மேல்சபையில் பாடினார் ஹனிபா. கருணாநிதிக்கும் ஹனிபாவுக்கு சிறுவயதில் இருந்தே நட்பு இருந்தது. இருவரும் திருவாரூரில் ஒன்றாக சுற்றியிருக்கிறார்கள். தான் கட்டிய வீட்டிற்கே ‘கருணாநிதி இல்லம்’ என்று பெயர் வைக்கும் அளவிற்கு இருவரும் நண்பர்களாயிருந்தனர். ஹனிபா மறைந்த போது “ஹனிபா பாடிப்பாடி மக்களைக் கவர்ந்த காட்சியை, அந்த மக்களில் ஒருவனாக நான் ரசித்து இருக்கிறேன். என் ஆருயிர் சகோதரனை இழந்து தவிக்கிறேன்.” என்று கண்ணீர் வடித்தார் கருணாநிதி. கருணாநிதிக்காக ஹனிபா பாடிய கல்லக்குடி கொண்ட கருணாநிதி பாடல் இன்றைக்கும் தி.மு.க மேடைகளில் தவறாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
நன்றி: tamilnadunow.com