தமிழ் என்றும் அமிழ்தே

தமிழ் என்றும் அமிழ்தே
குறுந்தொகையில், இந்தப் பாடலை எழுதியவர்:புலவர் கங்குல் வெள்ளத்தார்
தனது தோழிக்கு மாலைப் பருவம் துன்பம் தருவதாக உள்ளது என தலைவி கூறியது.
” எல்லை கழிய முல்லை மலரக் கதிர் சினந் தணிந்த கையறு மாலையும் இரவரம் பாக நீந்தின மாயின் எவன் கொல் வாழி தோழி கங்குல் வெள்ளங் கடலினும் பெரிதே”.
பகல் நீங்க,முல்லைக் கொடிகள் மலர, சூரியனது வெப்பம் குறைய செயலறுதற் குரிய மாலைக் காலத்தையும், இராப்பொழுது எல்லையாக எண்ணி அது வரும் மட்டும் கடந்தோமாயின் அதன் மேல் வரும் அவ்விரவின் மிகுதி கடலைக் காட்டிலும் பெரியது.
இந்த பாடலை இயற்றியவரின் இயற்பெயர் தெரியவில்லை. எனவே இந்தப் பாடலில் வரும் கங்குல் வெள்ளம் எனும் சொற்களை வைத்தே இவரது பெயர் “கங்குல் வெள்ளத்தார்” என பின்னாளில் தமிழ் அறிஞர்கள் வைத்திருக்கலாம்
சிறப்புக் குறிப்பு: செயலற்று வருந்தும் மாலைக்காலத்தைக் கடலாகவும், மாலைக்காலம் முடிந்தபின் தொடங்கும் இரவு, அதைவிடப் பெரிய “கங்குல் வெள்ளம்” என்றும் தலைவி கூறுகிறாள். காதலரைப் பிரிந்து வாழும் மகளிர்க்கு மாலைக்காலம் மிகுந்த துன்பத்தைத் தரும் காலம். மாலைக்குப் பின்னர் வரும் இரவில், உறங்காமல் வருந்துவதால், இரவில் தான் அடையும் துன்பம் மாலைக்காலத்தில் அடையும் துன்பத்தைவிட மிகப் பெரியது என்று தலைவி கூறுகிறாள்.
பகிர்வு

.