சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள் சித்திரை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது

சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள் சித்திரை மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது. சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாதத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக புராணம் சொல்கிறது.
சித்திரை மாதத்து சுக்ல பட்சத்து வெள்ளிக்கிழமைகளில் பார்வதியை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சித்ரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும். சித்ராபவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் ஆயுள் பலன் கூடும். சித்திரை மாத பரணி நட்சத்திர நாளில் பைரவரை நினைத்து விரதம் இருந்தால் காரிய தடைகள் விலகும். அன்று பைரவருக்கு தயிர் சாதம் நிவேதனம் படைத்தால் எதிரி பயம் நீங்கும். சித்திரை மாத மூல நட்சத்திர தினத்தன்று லட்சுமி நாராயணரை வணங்கினால் நினைத்தது நடக்கும். சித்திரை மாத சுக்லபட்ச திரிதியை அன்று சிவபார்வதியை வணங்கி, தானங்கள் செய்தால் சிறப்பாக வாழ்ந்து நிறைவில் சிவலோகம் அடையலாம். சித்திரை முதல் நாளன்று கேரளாவில் கோவில்களில் பக்தர்களுக்கு ஒரு ரூபாய் நாணம் வழங்குவார்கள். இதற்கு கை நீட்டம் என்று பெயர். மீனாட்சி திருக்கல்யாணத்தை நேரில் பார்த்து தரித்தால் களத்திர தோஷ பாவமும், நாகதோஷங்களும் விலகும். மீனாட்சி திருக்கல்யாணத்தை ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் கண்டால், அவரது தலைமுறைக்கே தோஷ நிவர்த்தி கிடைத்து விடும். சித்திரை மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தால் வழக்குகளில் வெற்றி உண்டாகும்.
சிலப்பதிகாரத்தில் பூம் புகாரில் இந்திர விழா, சித்ராபவுர்ணமி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சித்திரை மாதத்தில் தாகத்தில் இருப்பவர்களுக்கு மோர் குடிக்கக் கொடுத்தால் ஜென்மாந்திர பாவங்கள் விலகும். சர்க்கரை கலந்து பானகம் குடிக்கக் கொடுத்தால் வைகுண்ட வாசம் கிடைக்கும் என்று புராணம் சொல்கிறது. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது. எனவே அன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருந்து இஷ்ட தெய்வங்களை வணங்குவது நல்லது.
சித்திரை திருவிழா மதுரை தவிர திருவல்லிக்கேணி, ஸ்ரீபெரும்புதூர், குருவாயூர், திருப்பதி, ஸ்ரீரங்கம், திருப்புகனூர், வேதாரண்யம், திருவையாறு, காஞ்சீபுரம் ஆகிய ஊர்களிலும் சிறப்பாக நடத்தப்படுகிறது. சித்திரை மாதத்தில் பிறப்பவர்கள் கல்வி அறிவு உடையவர்களாகவும், நல்ல செயல் செய்பவர்களாகவும், சுவையான உணவு மீது நாட்டம் கொண்டவராகவும், இருப்பார்கள் என்றும், மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி பெற்றவர்கள் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
சித்திரை முதல்நாள் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறும். இரவில் உற்சவர் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சித்திரை குப்தரை வழிபட்டால், கேது, தோஷம் நீங்கும். பூர்வ ஜென்ம தோஷம், களத்திர தோஷம், புத்ர தோஷம், கல்வி தோஷம் ஆகிய தோஷங்கள் நிவர்த்தியாகும்
. சித்திரை மாத அமாவாசையை அடுத்த சுக்ல பட்ச திருதியை அட்சய திருதியை எனப் போற்றப்படுகிறது. அன்று தானங்கள் செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும். சித்திரை மாதம் திருதியை அன்று பகவான் விஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார். ஆகவே, அன்று மத்ஸ்ப ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. சித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்கிறது. அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்
. சித்திரை மாத சுக்ல அஷ்டமியில் அம்பிகை பிறந்த தாகக் கூறப்படுகிறது. அன்று புனித நதிகளில் நீராடுவது சிறப்பாக சொல்லப்படுகிறது. எமதர்மனின் கணக்காரன சித்ர குப்தன் தோன்றியது சித்திரை மாத பெளர்ணமி நாளில்தான். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது. ஸ்ரீரங்கத்தில் கஜேந்திர மோட்ச விழா சித்திரை மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ் வருடப்பிறப்பு
.. மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்பு. தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன… ஏன் என்றால், இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும். சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.
சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும். இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாக புதுவருடப் பிறப்பு இருப்பதால் இது ஒரு தேசியப் பெருவிழாவாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.
சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. ஐக்கியம், சமய, சமூக, கலாசார உறவுகள், பண்பாட்டுக் கோலங்கள் என்பவைகளை எடுத்துக் காட்டும் வகையிலும் நல்லெண்ணம், நல்லுறவு, ஐக்கியம், அன்புப் பரிமாற்றம், குதூகலம், விருந்தோம்பல் போன்ற மனிதப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கொண்டாடப் படும்
சமுக விழாவான புது வருடத்தில் இறைவழிபாடு, தானதர்மம், ஆசிபெறுதல் என்பவைகளையும் நாம் கடைப்பிடிப்பது வழக்கம். சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, சாணத்தால் மெழுகி, அழகிய மாக்கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும். அத்தோடு மஞ்சள், குங்குமம் ஆகியவை நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும்.
புதுவருட தினத்தில் நம் நலம் காக்கவே இந்நடைமுறை வழக்கத்துக்கு வந்தது. மருத்து நீர்… இந்த புண்ணிய காலத்தில் சகலரும் மருத்து நீர் தேய்த்து சிரசில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து ஸ்நானம் செய்தல் வேண்டும். மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது. இம்மருத்துநீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சப்படும். மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும். ஆடை… பச்சை நிறப் பட்டாடை அல்லது வெள்ளைக்கரை அமைந்த புதிய பட்டாடையையும், மரகதம் வைரம் பதித்த ஆபரணங்களையும் அணிந்து ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்தல் வேண்டும் என வாக்கிய பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கணித பஞ்சாங்கத்தில் வெண் மஞ்சள் பட்டாடை அல்லது மஞ்சள் கரைவைத்த வெள்ளைப் புத்தாடையையும் வைரம் பதித்த ஆபரணங்களையும் அணிந்து ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்தல் வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்யவேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். சில தோஷங்களையும் நீக்கி கொள்ளலாம்.
