மலையாள எழுத்தாளர் ராஜலக்ஷ்மி

இந்தியாவில் 1965 இல் முப்பத்தைந்து வயது மலையாள எழுத்தாளர் ராஜலக்ஷ்மி தற்கொலை செய்து கொண்டார்.
இன்றுவரை அவரது மரணத்தின் மர்மம் விடுவிக்கப் படவில்லை.
இவர் தற்கொலை செய்து கொண்டபிறகு மாத்ருபூமி ஆசிரியர் எம் டி வாசுதேவன் நாயர் உள்ளிட்ட பிரபலங்கள் இவரைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள்.
அவர் நாட்களில் மிகவும் கொண்டாடப் பட்ட எழுத்தாளர் இவர். அவரது எழுத்து நடை வாசகர்களை மிகவும் வசீகரித்திருக்கிறது.
அவரின் ஆரம்ப எழுத்துகளிலிருந்தே தற்கொலை கூடவே வந்திருக்கிறது. திருமணம் செய்யாமல் வாழ்ந்த ராஜலக்ஷ்மி தற்கொலை செய்து கொள்வதற்குமுன் அவர் வேலை செய்து கொண்டிருந்த கல்லூரியில் தற்கொலை பற்றி பொதுவாகப் பேசி இருக்கிறார். அவர் அப்போது NSS கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக இருந்திருக்கிறார்.
கவிதாயினிகள் பொதுவாக இது மாதிரி சில்வியா ப்ளேத் எபெக்ட் (‘Sylvia Plath effect,’) டால் பாதிக்கப் பட்டிருப்பார்கள் என்கிறார்கள். இவர் நிறைய கவிதை எழுதியதில்லை என்றாலும் மன்னிப்பு, தற்கொலை போன்ற இவரின் புகழ் பெற்ற சிறுகதைகள் இவரது மனத்தை வெளிப்படுத்தியே வந்திருக்கின்றன. வாசகர்கள், இவரின் எழுத்தை ரசித்த அளவு அவரின் மனநிலையைக் கவனிக்கத் தவறி விட்டார்கள் போலும்.
திருமணமே செய்து கொள்ளவில்லை ராஜலக்ஷ்மி. இவரின் படைப்புகளை, “இது என் கதை, இது அவளின் கதை” என்று கூப்பாடு போட்டு, பிரச்னையாக்கி நிறுத்த அப்போது ஒரு கூட்டமே இருந்திருக்கிறது.
நடுவில் இரண்டு மூன்று வருடங்கள் எழுதுவதையே நிறுத்தியும் இருந்திருக்கிறார். இவரின் ஒரு நாவல் இதே காரணத்தினால் பாதியிலேயே நிறுத்தப் பட்டிருக்கிறது. பாதியிலேயே நிறுத்தப் பட்ட இவர் நாவல் ‘உச்சி வெயிலும் இளம் நிலவும்’
அவருடைய கவிதை ஒன்று. இது அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு வருடங்கள் முன்பு மாத்ருபூமியில் எழுதியது.
“சாவே,
அங்கு நான் வாழ்க்கையைத்
தொடங்க விரும்புகிறேன்.
நான் என்ற இந்தக் குமிழ்
உன் காலடிகளில்
மிதிபட்டு அழியாதிருக்குமாக!
என்னில் அமைந்த
இயலாமைகள்
சந்கோஷங்கள்
சின்னச்சின்ன அபிலாஷைகள்
ஆனந்தங்கள்
மேலோங்கிய சிந்தனைகள்
வேதனைகள் –
துச்சமான வேதனைகள்
இரக்கங்கள்
சுகம் நாடும் தவிப்புகள்
எல்லாம்
அங்கு என்னுடன் இல்லாதிருக்குமாக”
இவரின் ‘ஒரு வழியும் சில நிழல்களும்’ வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று, தனிப் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.
-ஸ்ரீராம்