இலக்கியம்

ரா. பி. சேதுப்பிள்ளை காலமான தினமின்று

ரா. பி. சேதுப்பிள்ளை காலமான தினமின்று🥲

ரா. பி. சேதுப்பிள்ளை ஒரு தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே . 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய சேதுப்பிள்ளை தம் எழுத்தாலும் பேச்சாலும் தமிழுக்குப் பெருமையும் தமிழ் உரைநடைக்குச் சிறப்பையும் சேர்த்தார்.

அந்நாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சித் துறைத் தலைவராகப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை பணியாற்றி வந்தார். வையாபுரிப்பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப்பணி நிறைவேற சேதுப்பிள்ளை துணை நின்றார். வையாபுரிப்பிள்ளையின் ஓய்வுக்குப்பின் இவர் தலைமைப் பதவியை ஏற்றார். அப்போது பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் துணைநின்று உதவினார். இவரின் முயற்சியினால், திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும் நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அக்காதமியின் பரிசு வழங்கப்பட்டது. இலக்கிய அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின் தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த பாரதியார் இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை” என்று அழைத்துப் பாராட்டினார்.

மேலும் உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும் என்பார்.அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் மூன்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்த சேதுப்பிள்ளையின் பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் 1950ம் ஆண்டு ‘சொல்லின் செல்வர்’ என்னும் விருது வழங்கியது.

சேதுப்பிள்ளையின் நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார். இவர் தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ‘முனைவர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. மேலும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் கால் நூற்றாண்டு காலம் பணியாற்றியதைப் பாராட்டி “வெள்ளிவிழா” எடுத்தும், “இலக்கியப் பேரறிஞர்” என்ற பட்டம் அளித்தும் சிறப்பித்தது. சேதுப்பிள்ளை ஏப்ரல் 25, 1961ல் தம் 65 -ஆம் வயதில் இறந்தார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button