கட்டுரை

விபத்துகளின்போது மூளைச் சாவை அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலு

விபத்துகளின்போது மூளைச் சாவை அடையும் நபர்களின் குடும்பத்தினர் சம்மதித்தால் 9 பேருக்கு அந்த நபர் வாழ்க்கை தர இயலும்.

கண்களின் கார்னியா மூலம் இருவருக்கு பார்வை கிடைக்கும். இரண்டு சிறுநீரகங்களை இருவருக்குப் பொருத்தலாம். நுரையீலையும், கல்லீரலையும், மண்ணீரலையும் தலா இரண்டு நோயாளிகளுக்குப் பயன்படுத்தலாம். தவிர இதயத்தையும் மாற்ற முடியும்.

நவீன மருத்துவ முன்னேற்றத்தின் விளைவாக இதயத்தின் வால்வுகள், எலும்புகள், லிகமண்ட்ஸ், தோல் இவற்றையும்கூட இன்னொருவருக்கு பயன்படுத்த இயலும்.

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு. 2018ம் வருடத்தில் 887 நபர்களிடமிருந்து பெறப்பட்ட உறுப்புகள் 4,938. இதுவே 2019ம் வருடத்தில் தானமாக பெறப்பட்டு பயன்படுத்தப்பட்ட உறுப்புகள் 7,783.

தவிரவும்..

மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் கல்விக்காக மனித உடல்கள் மிகவும் அவசியப்படுகின்றன.

ஆனால் சடங்கு, சம்பிரதாயங்கள், ஆத்ம சாந்திக்கான வழிமுறைகள் என்கிற நம்பிக்கைகளுடன் வாழ்பவர்கள் அதிகம் உள்ளதால் இறப்புக்குப் பிறகுதான் என்றாலும் மக்களுக்கு தம் உடலை தானம் செய்வதில் மிகுந்த தயக்கம் உண்டு.

ஒரு மனிதர் தன் சொத்துக்களை தனக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து உயில் எழுதுவது எப்படி இயல்பான, நியாயமான விஷயமோ அப்படி தன் உடலையும் ஒரு சொத்தாக மதித்து அதை என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிற பரிபூரண உரிமையும் உண்டு. இதில் உறவினர்கள் என்ன சொல்வார்கள் என்று யோசிக்க அவசியமில்லை.

நடிகர் கமல்ஹாசன் உடல்தானம் செய்வதாக பல வருடங்கள் முன்பே அறிவித்தார். திருச்சியில் என் மாமனார் பலவருடங்கள் முன்பே உடல் தானம் செய்ய பதிவு செய்தார். அப்போதிருந்தே எனக்கும் அதே எண்ணம் இருந்துவந்தது.

ஆனால் சமீபத்தில் எழுத்தாளர் சவிதாவும், என் ரசிகர் கமலக்கண்ணனும் தங்கள் பிறந்த நாள் அன்று உடல் தானம் செய்வதாகப் பதிவு செய்த செய்தி அறிந்த பிறகு இந்த எண்ணம் தீவிரமானது. (இதைப்பற்றி விரிவான கட்டுரை இந்த இதழ் மின்மினியில் இடம்பெற்றுள்ளது)

சென்னை மருத்துவக் கல்லூரியில் முறையாக விண்ணப்பித்து, என் மனைவி மற்றும் இரண்டு மகள்கள், இரண்டு மருமகன்களின் சம்மதத்துடன் என் உடலை தானம் செய்ய பதிவு செய்திருக்கிறேன்.

இதில் குடும்பத்தினரின் சம்மதமே மிக முக்கியம். ஏனென்றால் இந்த விருப்பத்தை நிறைவேற்றப்போவது அவர்கள்தானே?

இதை பெருமைக்காக பதிவு செய்யவில்லை. இதேபோல பலருக்கும் எண்ணம் இருந்தும் சில தயக்கங்கள் காரணமாக செயல்படுத்தாமல் இருக்கலாம். அவர்களுக்கு முடிவெடுக்க ஒரு தூண்டுதலாக அமையும் என்கிற நோக்கத்தில்தான் பகிர்கிறேன்.

by Pattukkottai Prabakar Pkp

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button