Uncategorizedகட்டுரை

திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் (T.K. சண்முகம்)

திருவனந்தபுரம் கண்ணுசாமி சண்முகம் (T.K. சண்முகம்) அவர்களின் பிறந்த நாள் இன்று (26.04.1912 ).

இவர்களைப் பற்றி இன்றைய பதிவு.

திருவனந்தபுரம் அடுத்த புத்தன் சந்தை என்னும் இடத்தில் கண்ணுசாமி சீதையம்மாள் தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் சண்முகம்.

இவரது மூத்த சகோதரர்கள் டி. கே.சங்கரன் மற்றும் டி. கே.முத்துசாமி ஆகியோர். இளவல் டி.கே. பகவதி அவர்கள்.

டி கே சண்முகம் அவர்கள், ஆறு வயதிலே நாடக
மேடை ஏறினார்.

இவர் தனது பத்தாவது வயதில் மனோகராவாக நடித்ததை பார்த்த ”நாடகத்தின் தந்தை” என்று அழைக்கப்படும் பம்மல் சம்பந்த முதலியார் இவரது நடிப்பை வியந்து பாராட்டினார்.

மேலும் இவரது நாடகங்களைப் பார்த்தவர்கள் டி. கே.சண்முகத்தின் வசன உச்சரிப்பும் தோற்றப் பொலிவும் சேர்ந்து அந்த கதாபாத்திரத்தையே கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் என்று பாராட்டப்பட்டனர்.

இவரது சகோதரர்களுடன் சேர்ந்து 1925-ல் பாலசண்முகானந்தா சபா என்ற நாடகக் குழுவை தொடங்கினார். இக்குழு பின்னாளில், டி.கே.எஸ் நாடக குழு என்ற பெயரில் புதிய நாடகங்களை தயாரித்து மேடையே ற்றினார்கள்.

நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு மக்கள் விழிப்புணர்வு பெற தேசப்பற்றுள்ள நாடகங்களையும் தயாரித்தார்.

இவரது ”தேசபக்தி” ”கதரின் வெற்றி” ஆகிய நாடகங்களை ஆங்கிலேய அரசால் தடை செய்தது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இவர் சுப்ரமணிய சிவா வேடமிட்டு நடித்தவர்.

அக்காலத்தில், பொதுவாக பெண்கள் நடிப்புத் துறையில் இல்லை. இதனால் நாடகங்களில் ஆண்களே பெண் வேடம் போட்டு நடித்து வந்தனர்.

இவரது நாடகக் குழுவில் என்.எஸ் கிருஷ்ணன்,,கே ஆர் ராமசாமி, எஸ். எஸ் இராஜேந்திரன், எம். என் ராஜம் மற்றும் இயக்குனர் A. P. நாகராஜன் போன்ற பிரபலங்கள் நடித்து பின்னர் திரைப்படத்துறைக்கு வந்தனர்.

இவர் தனது 112 நாடகங்களில் டி. கே. சண்முகம் அவர்கள் 94 வகையான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்தார்.

குறிப்பாக திரு டி.கே.சண்முகம் அவர்கள், “அவ்வையார்” வேடத்தில் நடித்தது சிறப்பு அம்சமாகும். நாடகம் பார்த்தவர்கள் அவ்வையாரே நேரில் பார்த்தது போல் நினைத்தனர்.

இந்த நடிப்பால் டி.கே. சண்முகம் அவர்கள்,பிற்காலத்தில் அவ்வை சண்முகம் அழைக்கப்பட்டார். சென்னையில் அவ்வை சண்முகம் சாலை இவர் பெயரால் அமைக்கப்பட்டது.

இவரது நாடகத்தில் நடித்த கமலஹாசன் அவர்கள், பிற்காலத்தில் பெண் வேடம் போட்டு நடித்த படத்திற்கு, அவ்வை சண்முகி என்றும் பெயர் வைத்தது நாம் எல்லாம் அறிந்ததே.

அவ்வை சண்முகம் அவர்கள், நல்ல இசைஞானம் கொண்டவர். சங்கரதாஸ் சுவாமிகளின் கீர்த்தனைகள், பாரதியார் பாடல் களை நாடகங்களில் பாடி நடித்தார்.

1968 ல் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டார்.

50 ஆண்டுகளுக்கு மேல் நாடகத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமையாகத் திகழ்ந்தவர் அவ்வை டி. கே.சண்முகம் அவர்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button