நினைவுகள் அழிவதில்லை

நினைவுகள் அழிவதில்லை/அவரது ‘பிரும்மம்’ தமிழ் அடையாளத்தோடு இருக்கும் உலகச் சிறுகதை
*
இன்று எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் பிறந்த நாள். கே.கே. நகர் சரவண பவனில் அவருடன் காபி சாப்பிட்டபடி விட்டேத்தியாய்ப் பேசிக்கொண்டிருந்தாலும் காஃகாவோ செகாவோ புதுமைப்பித்தனோ எளிதாய் அந்த உரையாடலில் நுழைந்துவிடுவார்கள். காலை மாலை என்றல்ல எந்த நேரமும் அவருக்கு காபி சாப்பிட உகந்த நேரம்தான்.
எத்தனையோ நிகழ்ச்சிகளில் அவரோடு கலந்து கொண்டு இருக்கிறேன். எல்லாம் அழியாச் சித்திரங்கள்.
அவரது ‘பிரும்மம்’ தமிழ் அடையாளத்தோடு இருக்கும் உலகச் சிறுகதை. ‘மரி என்கிற ஆட்டுக்குட்டி’ முட்செடியின் நடுவே பேரழகான ஒரு மலரின் தரிசனம். ‘கருணையினால்தான்’ அன்பில் கனிந்த துப்பாக்கி ரவை.
எத்தனை வகையான சிறுகதைகள்? எல்லாம் மானுடம் வெல்லும், வானம் வசப்படும் என வாழ்வுக்கு நம்பிக்கை தரும் உலக இலக்கியங்கள்.காரிருளல் தைரியம் தரும் கைவிளக்குகள். இதுவரை படிக்காத அவரது ஏதாவது ஒரு சிறுகதையை இன்று படிப்பேன். அவரது மென்விரல்களைப் பற்றுவேன். ஓய்வின்றி எழுதியவர் ஓய்வெடுக்கட்டும். அவரது இந்தப் பிறந்தநாளை ஒரு காபியை அவரோடு பகிர்ந்து அவரது ஏதாவது ஒரு சிறுகதையைப் படித்து நாம் கொண்டாடுவோம்.
*
அவர் நினைவில் ஒரு கவிதையும் ‘முக்கோண மனிதன்’ தொகுதியில் எழுதினேன்.
*
அன்று அவர் எம்மோடு இருந்தார்
சாலையோரத் தேநீர்க் கடை திறந்திருந்தது
நண்பர்களைச் சந்தித்தோம் உரையாடினோம்
நிழல் தரும் மரங்களுக்குக் கீழே கதிரவன் ஒளிக்கோலம் போட்டிருந்தான்
தெருக்களில் மனிதர்கள் நடமாடியபடியும் வாகனங்களில் விரைந்தபடியும் இருந்தனர்
எல்லோரோடும் கைகுலுக்கி நேசம் கொள்ளமுடிந்தது
புதிது புதிதாய் நட்பு விரிந்தது
இன்று அவர் ஒரு நினைவு
எங்கள் சந்திப்பும் ஒரு நிழல் சித்திரம்
யாரைச் சந்திக்கவும் அச்சம்
யாரோடு கைகுலுக்கவும் பயம்
நெருங்கிய நண்பர்களிடமிருந்தும்
விலகிக்கொள்கிறோம்
அடிபட்ட பறவை கூட்டில் அடைபட்டிருப்பது போல்
வீட்டில் இருக்கிறோம்
சாளரம் வழியே தெரியும் வெளியிலும் வெறுமை
சின்னதாய்த் தெரியும் சதுர வானிலும் வெற்று வெள்ளை
மின் கம்பிகளின் அமர்ந்திருக்கும் காக்கை கூட
இறக்கை மறந்து அசையாமல் அமர்ந்திருக்கிறது
கண்ணுக்குத் தெரியாத கிருமி ஒன்று ஊரை அடங்க வைத்துவிட்டது
என்று வாசல் திறக்கும் என ஏங்கிக் கிடக்கிறோம்
எங்கள் கால்களைக் கட்டிப் போட்டிருக்கும் இனம் புரியாத இந்தக் கொடிய காலத்தின் பெயர்
கொரானா.
*
பிருந்தா சாரதி
