எழுத்தாளர் பிரபஞ்சன் – பிறந்தநாள் நினைவுக் கூடுகை

எழுத்தாளர் பிரபஞ்சன் – பிறந்தநாள் நினைவுக் கூடுகை அவரது பிறந்த நாளான நேற்று (ஏப்ரல் 27) சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் பத்திரிகையாளர் Pns பாண்டியன் , டிஸ்கவரி வேடியப்பன் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, எழுத்தாளர்கள் பாரதிபாலன், முருகேச பாண்டியன், இயக்குனர் கவிதா பாரதி, பேராசிரியர் பா. ரவிக்குமார், கவிஞர்கள் உமாமோகன் , சீனு. தமிழ்மணி, மு. பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டு நினைவுகளையும் படைப்புகளையும் பகிர்ந்து கொண்டார்கள்.
படைப்புகளால் மட்டும் அல்ல… மனிதராகவும் எத்தனை பேர் நினைவுகளில் வாழ்கிறார் பிரபஞ்சன்?
இந்த உலகில் நாம் இல்லாமல் போகும்போது எத்தனைக் காலம் வாழப்போகிறோம் என்பதுதான் உண்மையான ஆயுள். அந்த விதத்தில் பிரபஞ்சனுக்கு மரணமில்லை என்பது நேற்றும் உறுதியானது.
மனிதரின் குணச்சித்திரங்களை வரைந்து வரைந்து அவர்களைக் காலத்தினுள் வாழவைக்கும் எழுத்தாளனை வரலாறு நிரந்தரமாக வாழவைக்கும் என்பதற்கு பிரபஞ்சன் நம் காலத்தைய சான்றாக இருக்கிறார். என்றென்றும் இருப்பார்.
கதைகள் தாண்டி அவரது கட்டுரைகளிலும் உரைகளிலும் வெளிப்பட்ட அறச்சீற்றம் ஓர் எழுத்தாளனுக்குள் இருக்கவேண்டிய துணிவுக்கு – அரிமா நெஞ்சுக்கு – எடுத்துக்காட்டு.
மென்மையான மனிதனுக்குள் இருக்கும் வலிமையான இதயத்துக்கு அவரது கட்டுரைகள் சான்றுகள். ஏரிக்கு நடுவே எரிமலை பீறிடுவது போல் அவ்வப்போது அவற்றை வெளிப்படுத்தினார்.
அவர் புகழை அவரது அன்பர்கள் பகிர்ந்து கொண்டனர். உண்மையில் அது ஒரு பிரபஞ்ச கானம்.
நிகழ்ச்சி முடிந்தது அரங்கை விட்டு வெளியே வந்ததும் வேடியப்பன், ‘ ஒரு காபி சாப்பிடலாமா சார் ‘ என்றபோது அங்கு பிரபஞ்சன் பிரசன்னமாகி இருந்தார். அரூபமாக எங்கள் தோள்களை அவரது மென்கரங்கள் தீண்டன. அங்கு அவரது ‘பிரும்மம்’ கதை முருங்கை மரத்தின் பூக்கள் உதிர்ந்து கொண்டு இருந்தன.
*
*
அன்புடன்,
பிருந்தா சாரதி
