தமிழ் என்றும் அமிழ்தே –

குறுந்தொகையில் இந்த பாடலை இயற்றியவர்: புலவர் “குன்றியன்
தமிழ் என்றும் அமிழ்தே –
குறுந்தொகையில் இந்த பாடலை இயற்றியவர்: புலவர் “குன்றியன்”அவர்கள்.
கூற்று: வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்தனர். களவொழுக்கம் தொடர்வதால், ஊரில் அலர் தோன்றியது. ஆனால், அதைக் கண்டு தலைவன் வருந்தவில்லை. அவன் அஞ்சவும் இல்லை. சில நாட்களாக அவன் தலைவியைக் காணவரவில்லை. பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி தன் வருத்தத்தை தோழியிடம் கூறுகிறாள். தலைவி தன் வருத்தத்தைக் கூறும்பொழுது, தலைவன் அவளைக் காணவந்து, ஒருமறைவிடத்தில் நின்றுகொண்டிருக்கிறான். அவன் வரவை அறிந்த தோழி, அவன் காதுகளில் கேட்குமாறு, தலைவிக்கு ஆறுதல் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
” மாரி யாம்ப லன்ன கொக்கின்
பார்வ லஞ்சிய பருவ ரலீர் கெண்டு
கண்டல் வேரளைச் செலீஇய ரண்டர்
கயிறரி யெழுத்திற் கதழுந் துறைவன்
வாரா தமையினு மமைக
சிறியவு முளவீண்டு விலைஞர் கைவளையே “.
மழைக்காலத்து ஆம்பல் மலரைப் போன்ற தோற்றத்தை உடைய கொக்கினது பார்வையை அஞ்சிய துன்பத்தையுடைய, ஈரமான நண்டு தாழைவேரினிடையே உள்ள வளைக்குள் செல்லும் பொருட்டு, இடையராற் பிணிக்கப்பட்ட கயிற்றை அறுத்துச் செல்லும் எருதைப் போல விரைந்து செல்லுற்கு இடமாகிய கடற்று றையையுடைய தலைவன்,இங்கே வராமையால் நின் உடல் மெலிய நின் கைகள் முன் அணிந்த வலைகளை இழப்பினும் பிறருக்கு அம்மெலிவு புலப்படாமல் இருக்க விற்பார் தரும் கைவளைகளுள் சிறிய அளவை உடையனவும் இங்கே உள்ளன.
தலைவனை, தலைவி எதிர்பார்த்த போது வராமல் போனதால் தலைவியின் நிலை குறித்த தோழியின் கூற்று.
முருக சண்முகம்
