🎬From the Desk of கட்டிங் கண்ணையா!🔥
திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த முக்கியத்துவமான பேட்டி விபரம்:
‘‘பொன்னியின் செல்வன் 4 நாட்களாக நன்றாக போனது. முதல் வாரம் வரை கலெக்ஷன் நன்றாக இருந்தது. போக போக தான் வசூல் தெரியும். பொன்னியின் செல்வன் 2ம் பாகம் 200 கோடியை தாண்டி விட்டதாக மணிரத்தினம் கூறினாரா? லைகா கூறியதா? யாரோ ஒருத்தர் கூறியதை எதற்கு நம்ப வேண்டும்? விவாதிக்க வேண்டும்?
அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர்கள் சொல்லும் எண்ணிக்கையே, நம்ப முடியாத அளவிற்கு உள்ளது. தயாரிப்பாளர்களே, 5 கோடி வசூல் ஆன படத்தை 10 கோடி என்கிறார்கள். அந்த வசூலை படித்து பார்த்து சந்தோசப்படலாமே தவிர, உண்மை நிலவரத்தை தயாரிப்பாளர்கள் சொன்னால் மட்டுமே சினிமா உருப்படும்.
சமீபத்தில் ஏஜண்ட் என்ற தெலுங்கு படம் வந்தது. படம் படுதோல்வி, அதன் தயாரிப்பாளர் தெளிவாக பதிவு போட்டிருந்தார். ‘படத்தின் கதை தேர்வில் கோட்டை விட்டுவிட்டோம், அடுத்து வரும் படங்களில் தவறை திருத்தி கொள்வோம்’ என அறிவித்தார். இப்படி தெளிவா பேசினால் தான் சினிமா நன்றாக இருக்கும்.
தமிழில் அப்படி இல்லை. சுமாரான படத்தை கூட வெற்றி என்று கொண்டாடுவது. 100 கோடி ரூபாய் வசூல் ஆனால், 200 கோடி ரூபாய் என சொல்வது, போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஹீரோவை மகிழ்விப்பதற்காக வசூலை உயர்த்தி கூறுகிறார்கள். இதை ஏன் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை.
வியாபாரம் என வரும் போது, வசூலை சொல்லாமல் அமைதியாக இருங்கள்.மணிரத்தினம் சாரை பார்த்தீங்கனா, எப்போதும் வசூலை பற்றி பேசமாட்டார். அந்த மாதிரி அமைதியா இருங்க. வெட்டி பந்தாவுக்கு அந்த படத்தை அவ்வளவுக்கு வித்தேன், இவ்வளவுக்கு வித்தேன் என எதற்கு பந்தா காட்ட வேண்டாம். அடையார் ஆனந்த பவன்காரரோ, ஸ்ரீ கிருஷ்ணா சுவிட்ஸ்காரரோ, தீபாவளிக்கு நாங்கள் இவ்வளவு ஸ்வீட் விற்றோம் என்று எப்போதாவது சொன்னது உண்டா? சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் ஏன் இதை சொல்ல வேண்டும்? எந்த தொழில் செய்பவர்களும் தங்கள் வருவாயை சொல்லாத போது, சினிமா தயாரிப்பாளர்கள் மட்டும் எதற்கு சொல்ல வேண்டும்? சரி, அதிலாவது உண்மையை சொல்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.
இவர் சொல்வது பொய் என்பது என்னைப் போன்று இன்டஸ்ட்ரியில் இருப்பவர்களுக்கு தெரியும். சரி, இவ்வளவு லாபம் வந்திருக்கும் போது எதற்கு 3 ரூபாய் வட்டிக்கு கடன் வாங்குறீங்க? எதுக்கு பைனான்சியர் வீட்டு வாசலில் நிக்குறீங்க? இவர்களை திருத்த முடியாது. அதனால் தான் இனிமேல் வசூல் பற்றி பேசக்கூடாது என நான் முடிவு செய்துவிட்டேன்.
28 நாட்களுக்குப் பின் தியேட்டரிலிருந்து ஓடிடிக்கு படம் வந்துவிடும் என்பதற்காக மக்கள் தியேட்டருக்கு வருவதில்லை. குறிப்பாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் வருவதில்லை. தியேட்டர்களில் கடந்த 2 மாதமாக ஆட்களே கிடையாது. அசுரனுக்கு இணையாக வாத்தி வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால், அசுரனுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் வசூல் கூட ஆகவில்லை. 56 நாட்களுக்கு பிறகு தான் இந்தி படங்கள் ஓடிடிக்கு வருகின்றன. ‘நீங்கள் அதே முறையை ஃபாலோ செய்யுங்க’ என இந்தி திரையுலகினர் எங்களிடம் பேசி வருகின்றனர். இந்தி படங்களை 8 வாரத்திற்கு பிறகு தான் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதே போல தமிழிலும் கொண்டு வர, தயாரிப்பாளர்களிடம் பேச உள்ளோம். இல்லையென்றால், தியேட்டர்களை மூடுவதை தவிர வேற வழியில்லை என்பதை அவர்களிடம் தெரிவிப்போம்,’’