வார்த்தை சித்தர் என்றழைக்கப்பட்ட வலம்புரி ஜான் காலமான தினமின்று


வார்த்தை சித்தர் என்றழைக்கப்பட்ட வலம்புரி ஜான் காலமான தினமின்று
பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டமும் சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டவியல் பட்டமும் பெற்ற தே.கு ஜான், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உவரியில் தோன்றியவர். ‘தினமலர்’ நாளிதழில் துணை ஆசிரியராக பணி புரிந்த ஜான், உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஆனார். மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் தமிழக அரசின் வேளாண்மைத் தொழில் வாரியச் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார்.
திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் கல்லூரி மாணவர்கட்காக நடத்திய பேச்சுப்போட்டியில் ‘‘தென்னாட்டின் பொன்னேடு’’ என்ற பொருள் குறித்துப் பேசி, நாவலர் சுழற் கோப்பை பெற்றார். ‘‘தாய்’’ வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று விழுமிய எழுத்தாளராக விளங்கினார். ‘மெட்டி, மருதாணி’ ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் அமைந்தார். இலக்கிய நலம் நிறைந்த பேச்சாளராகவும் எழுச்சி உரை நடை நல்கும் எழுத்தாளராகவும் உலா வந்த வலம்புரி ஜான், ஆங்கிலத்தில் நான்கு நூல்களையும் தமிழில் ஐம்பது ஏடுகளையும் ஈந்துள்ளார்.
‘ஓர் ஊரின் கதை’ முதல் ‘உலக மகா காதலர்கள்’ வரை அவருடைய எழுத்தோவியங்கள் ‘‘இலக்கியமும் வரலாறும் இரட்டைக் குழந்தைகள்’’ என்னும் அறிஞர் திராவலின், கூற்றை உறுதிசெய்கின்றன. ‘உள்ளதைச் சொல்கிறேன்’ என்னும் மூன்று தொகுதிகளில் பொருளியல் சிக்கல்களையும் சமயச் சிந்தனைகளையும் புலப்படுத்தியுள்ளார். ‘‘சீனம் சிவப்பானது ஏன்?’’ என்னும் ஏட்டில் மக்கள் புரட்சியும் அரசியல் மாற்றங்களும் பற்றி விளம்பியுள்ளார். ‘சுயாட்சியா? சுதந்திரமா?,’’ ‘‘காந்தியா? அம்பேத்காரா?,’’ நாயகம் எங்கள் தாயகம்’’ ஆகிய நூல்களில் உணர்வுப் பிழம்பாகத் தோன்றுவார்.
‘‘பாரதி ஓர் பார்வை,’’ ‘‘புதுவை தந்த போதை’’, ‘‘கண்ணாதாசம்’’, ‘விந்தை மனிதர் வேதநாயகர்’ ஆகிய நூல்களில் இலக்கியப் புலமை நலம் கனிய எடுத்தியம்புவார். ‘‘சமயத்துக்கு அப்பால் சத்தியத்தைத் தரிசிக்கிறேன்’’ என்னும் செய்தியை ‘மூகாம்பிகை அன்னை’ குறித்து ‘‘அந்தக இரவில் சந்தன மின்னல்’’ என விரித்துரைப்பார்.
‘‘நீலம் என்பது நிறம் அல்ல !’’ (1987) என்னும் நூலில், ‘‘என் கிராமத்து இளைஞர்கள் இன்னமும் கடலை உழுகிறார்கள்; கனவுகளை விதைக்கிறார்கள்’’ என்று எடுத்து ஓதியுள்ளார். ‘‘எல்லா இராத்திரிகளும் விடிகின்றன (1986) என்னும் ஏட்டில் ‘‘உழைப்பு நெய்யின் உயிர் இறுக்கமே குழந்தை’’ என்று தத்துவ வித்தகம் கூறுவார். ‘‘ஒரு நதி குளிக்கப் போகிறது’’ (1983) என்னும் புத்தகத்தில் கவிதைக்கு விளக்கம் வழங்கும் போது, ‘‘விலாசத்தை நகத்திலே விட்டுவிட்டு, விவரத்தை சதையிலே சேமிக்கிற ஆதாமின் இரத்தம்’’ என்பார். குரங்கினை ‘ஆதி நாள் அப்பா’ என்றும் தங்கத்தை ‘மஞ்சள் மெளனம்’ என்றும் குறிப்பிடுவார்.
‘மாணவ யானையாகவும் மேடை சிறுத்தையாகவும் கவிதை குழைத்து எழுதும் எழுத்தாளராகவும் வலம்புரி ஜானைப் பார்த்தும் பழகியும் வந்த கவிப்பேரரசு வைரமுத்து, ‘‘ஒரு சீவநதி போன்ற சிந்தனையாளன் என்பதற்காகவே அவரை என் மனதுக்குள் வைத்து மதிக்கிறேன்’’ என்றார். ‘‘வளரும் தமிழில் வலம்புரி ஜான்’’ என்னும் நூல் நல்கிய எதிரொலி விசுவநாதன் இருபது ஆண்டுகளாக வலம்புரியைக் கண்டு மகிழ்ந்து விண்டுரைத்துள்ளார்.
‘‘இதயம் இல்லாதவர்களைத் தொடர்ந்து அவர்கள் நிழல் கூட வராது!’’ என்று தத்துவ முத்துகள் பலவற்றை ‘‘இந்த நாள் இனிய நாள்’’ என்னும் தொலைக் காட்சித் தொடர் மொழியில் தந்துள்ளார். ‘‘கிறித்தவ ஆண்டாளின் கீர்த்திமிக்க கதையே கேரள நிசப்தம்’’ என்று எழுதும் வலம்புரி ஜான், தூய அல்போன்சாவைப் பற்றி எழுதி முடிக்கும் போது, ‘‘அவள் நடந்த இடம் புனிதமானது, அவள் நின்ற இடம் கோவில் ஆனது, அவளை எண்ணும் மனம் இமயமானது’’ என விளம்புவார். ‘‘மின்னலை விழுங்கி மின்சாரத்தைக் கொப்பளிக்கும் சொல் வீச்சு’’ என்று தமிழ் மாறனும் ‘‘வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜான்’’ என்று பாவலர் இளந்தேவனும் போற்றிப் புகழ்வது ஏற்புடையவையாம் என்று எல்லோரும் பாராட்டுவர்