தமிழ் என்றும் அமிழ்தே – குறுந்தொகை : புலவர் கயமனார்.

குறுந்தொகை இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் கயமனார்.
தமிழ் என்றும் அமிழ்தே –
குறுந்தொகை இந்தப் பாடலை இயற்றியவர்: புலவர் கயமனார்.
” ஞாயிறு காயாது மர நிழற் பட்டு
மலைமுதற் சிறுநெறி மணன் மிகத்தாஅய்த்
தண்மழை தலையி ன்றாக நந்நீத்துச்
சுடர்வாய் நெடுவேற் காளையொடு
மடமா வரியை போகிய சுரனே”.
( தலைவனுடன் தலைவி சென்றதை அறிந்த செவிலித்தாய், “என் மகள் போன வழி இன்பத்தைத் தருவதாக அமைக” என்று இயற்கையிடம் முறையிடுவது)
நம்மைப் பிரிந்து, ஒளி பொருந்திய நெடிய வேலையு டைய தலைவனோடு மடப்பத்தையும் மாமையும் உடைய தலைவி, செல்லும் பாலை நிலம், சூரியன் வெயில் வீசாமல் மரத்தின் நிழல் பொருந்தி மலையினிடத்தேயு ள்ள சிறிய வழியின் கண், மணல் மிகப் பரவப் பெற்று, குளிர்ந்த மழை பெய்து இனிதாகுக என இயற்கையிடம் வேண்டுகிறாள் செவிலித்தாய்.
மழை பெய்வதால் பாலை நிலத்தில் வெப்பம் நீங்கும், தலைவனுடன் தலைவிசெல்லும் பாதை குளிர்ந்திடும் என்பதையும், தலைவி போகும் பாதை குளிர்ந்து இருப்பது போல வாழ்க்கையும் குளிர்ந்து இருக்க வேண்டும் என்பதை மிக நயமாகவும், இயற்கையிடம் இனிதாக வேண்டி தம் உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார் புலவர் கயமனார்.
