தமிழ் என்றும் அமிழ்தே – குறுந்தொகை: புலவர் மதுரைக் கொல்லன் புல்லன்

குறுந்தொகையின் இந்த பாடலை இயற்றியவர்: புலவர் மதுரைக் கொல்லன் புல்லன்
லைவனது நட்பு என்றும் அழியாதது என்று தோழி கூறியது
தமிழ் என்றும் அமிழ்தே – (98)
குறுந்தொகையின் இந்த பாடலை இயற்றியவர்: புலவர் மதுரைக் கொல்லன் புல்லன்.
” நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை யஞ்சிக்
கேடெவ னுடைத்தோ தோழி நீடுமயிர்க்
கடும்ப லூகக் கறை விரலேற்றை
புடைத்தொடு புடைஇப்பூ நாறு பலவுக்கனி
காந்தளஞ் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடனொட மைந்த நந் தொடர்பே ”.
( அலர் மிக்கவிடத்து வருந்திய தலைவியை நோக்கி தலைவனது நட்பு என்றும் அழியாதது என்று தோழி கூறியது ).
நீண்ட முடியும், கூரிய பற்களுமுடைய கருங்குரகினது கறுப்பையுடைய விரல்களையுடைய ஆணானது, பக்கத்திலே தோண்டியதனால் உடைந்து மலரின் மணத்தை வீசும் பலவினது பழம், காந்தளை உடைய அழகிய சிறிய ஊரினிடத்தே மணக்கின்ற ஓங்கிய மலையையுடைய நாடனோடு பொருந்திய நமது நட்பானது உலகம் இடம் மாறினாலும், நீரும், தீயும் தம் இயற்கையினின்று மாறினாலும், விளங்குகின்ற அலைகளையுடைய பெரிய கடலுக்கு எல்லை தோன்றினாலும், வெவ்விய வாயை உடைய மகளிரது பழிச்சொல்லை அஞ்சி,கெடுதல் எவ்வாறு உடையதாகும்?.
(தலைவனோடு அமைந்த தொடர்பு என்றும் கெடாது, நல்ல தொடர்பு எப்போதும் இருக்கும்)
