பார்வையை மாற்றிய பாலகுமாரன்

பார்வையை மாற்றிய பாலகுமாரன்
–
மாதா, பிதா, குரு என்று சொல்வார்கள். எனக்கு அந்த மாதாவாகவும் நின்றவர் பாலா சார். ஆழ்மனதில் ஒரு எண்ணத்தை அழுத்தமாகப் போட்டு வைத்தால் அதை நிச்சயம் இந்தப் பிரபஞ்சம் நடத்திக் கொடுக்கும் என்பார்கள். அந்த வகையில் பாலா சார், எனக்கு இந்தப் பிரபஞ்சம் தந்தப் பரிசு. நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும், நல்ல புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பதோடு குருவாய் நின்று வழிகாட்டும் ஒருவர் வேண்டும் என்று விரும்பினேன்.
விளையாட்டுப் பெண்ணாய் பிளஸ் டூ படிக்கும்போது சார் எனக்கு மெர்க்குரிப் பூக்கள் கதை மூலம் அறிமுகம். படித்து நாலு பக்கம் விமர்சனக் கடிதம் எழுதினேன். அதற்கு உடனே பதில் வந்தது. “நீ சின்னப் பெண். இப்போது அந்தக் கதை புரியாது. வளர்ந்த பிற்பாடு அதன் ஆழம் புரியும் என்று” சொல்லியிருந்தார். அதுதான் ஆரம்பம். சின்னப் பெண்ணான என்னை மதித்து பதில் போட்ட அவரின் பண்பு என்னைக் கவர்ந்தது. அவரிடமிருந்து நல்ல விஷயங்களைக் கேட்க வேண்டும் என்று சாரின் கதைகளைப் படித்ததும் என் மனதில் தோன்றுவதை உடனே எழுதி அனுப்புவேன். பதில் வரும்.
நல்ல இலக்கியங்கள், எழுத்தாளர்களின் கதைகளை படிக்கச் சொல்லி எனக்கு அறிவுரை கூறினார். பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என்பதற்காகப் பிறக்கவில்லை என்றவர், வேடிக்கை மனிதர்களைப் போல் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று சொன்ன பாரதியைப் படிக்கச் சொன்னார். அதன் பிறகுதான் தமிழ் இலக்கியங்களைத் தேட ஆரம்பித்தேன். அந்த ஆர்வமே கையெழுத்துப் பத்திரிகையில் எழுத வைத்தது.
ஆனந்த விகடனில் முதல் கதை பிரசுரம் ஆன பொது “சின்ன வழிகாட்டல் போதும், ஜெயித்து வெற்றிக் கொடி நாட்டுவாள்”- என்று அப்பாவுக்கு கடிதம் எழுதினார். அதுதான் பாலாவின் ஆசீர்வாதமாக இன்று வரை இருந்து என்னை வழி நடத்துகிறது.
அவர் தன் கதைகளில் வெளிப்படுத்தும் கருத்துகள், வாழ்க்கையை விட அவரின் பெண் கதாபாத்திங்கள் என்னை ரொம்பவே கவர்ந்தன.
பாலகுமாரனின் பெண் கேரக்டர்கள், எதற்கும் கலங்க மாட்டார்கள். பிரச்சினைகள் வந்தாலும் அதைத் தீரமாக எதிர்த்து நிற்பவர்கள். அவர்களின் மன உறுதி, தைரியம், ஆழ்ந்த சிந்தனையுடன் வெளிப்படும் சொற்கள், எதிர்நீச்சல் போடும் குணம் என்று அவரின் பெண் கதாபாத்திரங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அவரின் ’போராடும் பெண்மணிகள்’ எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஆரம்ப நாட்களில் எழுதிய ’அகல்யா’, ’இரும்பு குதிரைகள்’ ஒருவிதம் என்றால் அடுத்து எழுதிய ’என் கண்மணித் தாமரை’, ’தங்கக்கை’, ‘காலடித் தாமரை’, ‘மகாபாரதம்’ மற்றொரு விதம்.
வாழ்க்கையைத் தன் அனுபவங்களால் அலசி ஆராய்ந்திருப்பார் பாலகுமாரன் சார். அவரின் ஆன்மிக எழுத்துகள் தந்த ஈர்ப்புதான் என்னையும் ஆன்மிகம் எழுத வைக்கிறது. ஒருவிதத்தில் இது அவரின் ஆசீர்வாதமும் கூட. தாயார் அருகில் அமர்ந்து தன் குழந்தைகளுக்கு புத்திமதி சொல்வது போல் அவரின் எழுத்துகள் இருப்பதாகத்தான் நான் உணர்ந்தேன். அது நம்மிடம் சீறும். அன்பு காட்டும். நல்லது சொல்லும். இப்படிப் போ, இதைச் செய்யாதே என்று வழிகாட்டும்.
தன் அனுபவங்கள் மற்றவர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் என்று நினைத்த அவர் தன் மறுபக்கத்தையும் எழுதத் தயங்கவில்லை.
ஒருவிதத்தில் அவர் நன்மை தீமைகளை நமக்கு வாழ்ந்துகாட்டி உணர்த்தியிருக்கிறார் என்றுதான் கூறுவேன். ’முன்கதைச் சுருக்கம்’ படித்து அதை உணர்ந்தேன். நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய அனுபவத் தத்துவங்களை போதித்தது போல் பாலா சார். அவர் எழுத்தில் தெரியும் அந்த தீர்மானம், கனிவு, அன்பு அவரின் பேச்சிலும் காண முடியும்.
அவர் அறிமுகம் கிடைத்து பத்து வருடங்கள் கழித்து ’இது நம்ம ஆளு’ பட ஷூட்டிங்கிற்காக வந்தபோது கோபியில் சந்தித்தேன். வீட்டுக்கு அழைத்தபோது நான் இங்கு வேலையாக வந்திருக்கிறேன். வீட்டிற்கு வர இயலாது என்றார். ’’எந்த எழுத்தாளர்களை சந்தித்து என்ன ஆகப் போகிறது? அவர்களின் எழுத்தைப் படி, அவர்கள் சொல்வதைப் புரிந்து நட” என்றார். அதன் பிறகுதான் அவர் புத்தகத்தில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் குறித்து வைக்க ஆரம்பித்தேன்.
“துணை என்று எதுவுமில்லை, நெஞ்சோடு ஒட்டி நின்று நினைவு முழுதும் விழி வழியே புரிந்து கொள்ளும் துணையோ, சிநேகிதமோ யாருக்கும் லயிப்பதில்லை. துணையைத் தேடுவதும், கடவுளைத் தேடுவதும் ஒன்றே.”
“உடம்பு சாகக் கூடாதுன்னு வேண்டிக்க உனக்கு உரிமை கிடையாது. நீ விரும்பியா பிறந்தாய். உன்னை யாரோ இங்கு இறக்கி விட்டார்கள், யாரோ வந்து எடுத்துண்டு போவார்கள்.”
“மரணபயம் ஒரு நோய்”
’’மனிதரை அறிந்துகொள்ள சரித்திரம் படிக்க வேணும்.
தன் கால் இடராதிருக்க மற்றவர் பாதை வேணும்.’’- – – –
———– ———– —————— ————————— —————–
’’அத்தனையும் மண்ணாய்ப் போக அலட்டல்கள் யாவும் அபத்தம்.
“தன்னை மதிக்கிறவனை பெண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும். அவள் காதலிப்பது ஆண்பிள்ளையை அல்ல. அவன் தோழமையை. தன்னால் அவன் உயர்ந்து நிற்க முடியும் என்ற மன உறுதி அவளுக்கு. தன்னை இழப்பது காமத்தால் அல்ல. இதனால் இவன் உற்சாகமாகி, இவன் உயர்ந்து, தன்னை வளப்படுத்துவான் என்ற கணக்கு.”
“எது உயர்ந்ததோ அது தாழும், எது தாழ்ந்ததோ அது உயரும்,”
“நடந்ததை நினைவுக்குக் கொண்டு வந்து யோசனை பண்ணி தன்னை
பக்குவப் படுத்திக்க மனுஷாளால மட்டுமே முடியும். யோசனை பண்ணினதின் விளைவு இன்றைய வாழ்க்கை, வளர்ச்சி.”
“யார் நண்பன்? யார் எதிரி? காலம் காட்டும் மாயை. காலம்தான் எதிரி, காலம்தான் நண்பன்.”……..
சொல்லிக் கொண்டே போகலாம். அவருடைய புத்தகங்கள் ஒவ்வொன்றுமே தத்துவச் சுரங்கம். கருத்துக் கருவூலம். ஊன்றிப் படித்து சிந்தனை செய்தால் வாழ்க்கை வசப்படும். புத்தி சீராகும். சீரான புத்தி மனதை சலனமடையாமல் வைக்கும். அதுவே வெற்றிக்கு வழிகாட்டும்.
அவரை ஷூட்டிங் முடிந்து பதினைந்து வருடங்கள் கழித்து அவர் இல்லத்தில் சந்தித்தேன். என் கை பிடித்து யோகி ராம்சுரத்குமார் நாமம் சொல்லி பிரார்த்தனை செய்தார்.
“அமைதியாய் இரு. உன் மனம், சொல், செயல் எல்லாம் அன்பு நிறைந்ததாக இருக்கட்டும். நீ உன் பெருந்தன்மையான குணத்தை விட்டு விலகாதே”- என்றார். அதுதான் கடைசி. பிறகு அவரைச் சந்திக்கவே இல்லை. முகநூலில் ஒருமுறை “நான் இறப்பதற்குள் ஒருமுறை பிரபாவைப் பார்க்க எண்டும்” என்று எழுதியிருந்தார். பதறி விட்டேன்.
“இது என்ன அன்பு? என்று உள்ளம் உருகியது. இதற்கு நான் தகுதியா என்று மனம் கேள்வி கேட்டது. ஆனால் அதுதான் பாலா சார். தகுதி பார்த்து அன்பு காட்டுபவர் இல்லை அவர். அது அவர் இயல்பு. எனக்கு ’உடையார்’ நாவல்களை பரிசளித்தார். இதை நான் முகநூலில் பகிர்ந்தபோது ஒருவர் விலை அதிகமாக இருக்குமே என்றார். அதற்கு “அன்புக்கு விலை இல்லை. அது விலை மதிப்பற்றது” என்று பதில் எழுதியிருந்தார்.
இந்த அன்புக்கு நான் செய்வது என்ன? பிரதிபலன் எதிர்பார்த்து அன்பு காட்டுபவர் இல்லையே அவர். அவரைப் போலவே நானும் அன்பு மயமாய் மாறுவதுதான் ஒரே வழி. அவரைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். ஆனால் அவரோடு பழகியவர்களுக்கு அவர் கனிவும், அன்பும் நிரம்பியவர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்காது.
எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் அவர் இறக்கவில்லை என்பதுதான் நிஜம். தன் எழுத்தின் மூலம் வழிகாட்டியாய் அவர் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
– எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுநாள் இன்று.
ஜி.ஏ.பிரபா
நன்றி: இந்து தமிழ் திசை