தமிழ் என்றும் அமிழ்தே/குறுந்தொகை/ புலவர் சேரமானெந்தை

பதிவு
முருக ஷண்முகம்
குறுந்தொகையின் இன்றைய பாடலை எழுதியவர்:
புலவர் சேரமானெந்தை
தமிழ் என்றும் அமிழ்தே –
குறுந்தொகையின் இன்றைய பாடலை எழுதியவர்:
புலவர் சேரமானெந்தை
” நீர்வார் கண்ணை நீயிவ ணொழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனி லஞ்சினை கமழும்
தேமூ ரொண்ணு தனின் னொடுஞ் செலவே”.
(தலைவன் பிரிந்து செல்வானென்பதை குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை நோக்கி ‘தலைவர் நின்னை அழைத்துக்கொண்டே செல்வார் என்று தோழி கூறி ஆற்றுவித்தது)
மலைப்பக்கமானது தனக்கு அழகாகக் கொண்ட வலமாகச் சுரித்த வெண் கடப்ப மலரடையுடைய, வேனிற் காலத்தில் மலர்ந்த அழகிய கிளையினிடத்தில் மணக்கின்ற நன்மணம் பரவிய விளக்கத்தையுடைய நெற்றியையுடையாய் துயரத்தினால் நீர் கண்ணிலிருந்து நீர் வடிக்காதே,இங்கே தனியே தங்க நின்னை பிரிந்து செல்லும் ஆற்றலை உடையவர் யாவர்?
தலைவர் செல்வது உன்னுடனே. நின்னைப் பிரிந்து அவர் செல்ல மாட்டார்.
பதிவு
முருக ஷண்முகம்

விளக்கம் /தே. ஆர்தர்
மலைச் சாரலிலே, அதற்கு அழகு செய்து நிற்கும் வெண் கடம்ப மரங்களில், வலது புறமாகச் சுருண்டு வளர்ந்திருக்கும் மலர்களை உடைய அழகிய கிளைகள், இளவேனிற் காலத்தில் மணம் வீசிக் கொண்டிருக்கும்.
அந்த நறுமணம் பரவிய, பளிச்சென்று துலங்கும் நெற்றியை உடையவளே! நீ கண்ணீர் சிந்தி அழுது கொண்டிருக்குமாறு உன்னை இங்கே தனியே விட்டு விட்டு யார்தான் பிரிந்து செல்வர்?
உன்னை விட்டுப் பிரிந்து செல்ல யாருக்குத்தான் மனம் வரும்?
உன் தலைவர் ஒரு நாளும் உன்னைத் தனியாக விட்டுப் பிரிந்து செல்ல மாட்டார்.
அப்படியே அவர் வெளியூர் செல்ல நேர்ந்தாலும் உன்னையும் அழைத்துக் கொண்டுதான் செல்வார். எனவே, வீணாகக் கலங்கி அழாதே!”
.
இவ்வாறு தலைவியின் கவலையைப் போக்கிட அவளுக்குத் தோழி கூறிய ஆறுதல் மொழிகளை வெளிப்படுத்துவதே “சேரமான் எந்தை” என்ற புலவரின் இந்தப் பாடல்.
”நீர்வார் கண்ணை நீ இவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே, சாரல்
சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து
வேனில் அம்சினை கமழும்
தேம்ஊர் ஒள்நுதல் நின்னொடும் செலவே”
(குறுந்தொகை – 22)
நீ இவண் ஒழிய – நீ இங்கே தனித்திருக்க
யாரோ பரிகிற்பவரே – யார்தான் பிரிந்து செல்வார்
சிலம்பு – மலை
வேனில் – இளவேனில் காலம்
அம்சினை – அழகிய கிளை
தேம் – மணம்
ஊர்(தல்) – பரவு(தல்)
ஒள்நுதல் – பளிச்சென்றுத் துலங்கும் நெற்றி, பளிச்சென்று பிரகாசமாக இருக்கும் நெற்றி, Bright forehead
‘யாரோ பிரிகிற்பவரே’ என்று தோழி கூறிய மாத்திரத்தில், ஆற்றாமை மிக்க தலைவி துயர் நீங்கித் தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.
அப்போது அவளது நெற்றியின் பிரகாசத்தைக் கண்ட தோழி,
‘ தேம்ஊர் ஒள்நுதல்’
என்று கூறுகிறாள்.
சந்தனம் பூசுதல், பொட்டு வைத்தல் முதலியவற்றால் மணம் பரவிய நெற்றி என்பதும் பொருந்தும்.
“சிலம்பு சாரல் அணி கொண்ட வலம் சுரி மராஅத்து”
என்று அடி அமைத்துத் தொடங்கிப் பொருள் கூறப்பட்டது.
தே. ஆர்தர்
