கட்டுரை

வண்ணத்தொலைக்காட்சி தோன்றிய நாள்

வண்ணத் தொலைக்காட்சியை ஆர்.சி.ஏ. என்ற நிறுவனம் 1954-ம் ஆண்டு இதே மார்ச் மாதம் 25-ந்தேதிதான் முதன் முதலில் விற்பனைக்கு வெளியிட்டது. அதன் அகலம் 12 இன்ச் ஆகும்.

ரேடியோ அலைகள் மூலம் ஒலியலைகளை 1906-ம் ஆண்டு அலைபரப்பு செய்திருக்கிறார்கள். அதன்பின் 1920-களின் நடுவில், படங்களை ரேடியோ அலைகள் மூலம் அனுப்ப தீவிரமான முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. அதாவது தொலைக்காட்சியின் வயது 100 ஆண்டுகளை இன்னும் தொடவில்லை. ஆனால் தொலைக்காட்சி தொழில்நுட்பம் மிக வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. கடந்த 10 வருடங்களில் அதீத வேகத்தில் வளர்ந்திருக்கிறது. இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது.

முதன்முதலாக 1926-ம் வருடம் ஜனவரி மாதம், சலனப்படம்(Moving Micture) ரேடியோ அலைகள் மூலம் அலைபரப்பப்பட்டு, ரேடியோ அலை ஏற்பிகளால் அது மீண்டும் படமாக மாற்றி திரையில் காண்பிக்கப்பட்டது. இந்த முதல் அலைபரப்பில், திரையில் கிடைக்கப்பெற்ற படம், அத்தனை தெளிவானதாக இருக்கவில்லை. அது ஒரு முகத்தின் சலனப்படம் என்பதை அறியும் அளவுக்கு மட்டும் தெளிவானதாக இருந்திருக்கிறது. 1928-ம் ஆண்டு, முதல் முறையாக லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்துக்கு தொலைக்காட்சி அலைபரப்பப்பட்டு அங்கு மீண்டும் படமாக திரையில் மாற்றப்பட்டது. ஃபிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஐரோப்பிய நாடுகளின் முதல் தொலைக்காட்சி நிறுவனம் 1929-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஐரோப்பாவில் இவ்விதமாக தொலைக்காட்சி தொடர்பான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அமெரிக்காவில் 1925-ம் ஆண்டு ஜூன் 13-ம் தேதி, சார்லஸ் பிரான்ஸிஸ் ஜென்கின் என்பவர், நிழல்படங்களை ஐந்து மைல் தூரத்துக்கு அலைபரப்புதல் செய்து காட்டினார். இந்த அலைபரப்பில், ஒரு காற்றாலை இயங்கும் சலனப்படத்தை அலைபரப்பினார். இதுவும் ஒரு நிழலுருவம் போல தெளிவற்ற படமாகவே தெரிந்திருக்கிறது.

1927-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பெல் டெலிஃபோன் நிறுவனம் முதன்முதலாக படத்துடன் இணைந்த ஒலியையும் அலைபரப்புதல் செய்து காட்டியது. இந்த அலைபரப்புதலில் படங்கள் ஒரு வினாடிக்கு 18 சட்டங்கள் (Frames per Second அல்லது FPS) என்னும் விகிதத்தில் அலைபரப்பப்பட்டது. தற்போதைய தொலைக்காட்சி அலைபரப்புகள், வினாடிக்கு 30 முதல் 60 சட்டங்கள்வரை உள்ளனவாம். இந்த எண்ணிக்கை, நமது கண் மற்றும் மூளையின் பிரித்தறியும் திறனை அடிப்படையாகக் கொண்டது. வினாடிக்கு 18 சட்டங்களுக்குக் குறைவாக இருந்தால், அதை சலனப்படமாக (Moving Micture) மனித மூளையால் அறிய முடியாது. அவை தனித்தனி நிழல் படங்கள் வேகமாக காட்டப்படுவது போல தோன்றும்.1928-ம் ஆண்டு உலகின் முதல் தொலைக்காட்சி நிலையம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், W2XB என்னும் பெயரில் தொடங்கப்பட்டது.

தொலைக்காட்சி என்னும் போது, மூன்று அம்சங்கள் முக்கியமாகக் கொள்ள வேண்டும். முதலில் அலைபரப்ப வேண்டிய காட்சியை அலைபரப்பும் வடிவுக்கு மாற்றுவது. இதை ‘கேமரா’ என்னும் பொது வார்த்தையால் குறிக்கலாம். இரண்டாவது, அலைபரப்பும் வடிவுக்கு மாற்றப்பட்ட காட்சியை மின்காந்த அலைகளாக மாற்றி பொதுவெளியில் உலவ விடுவது. இறுதியாக பொதுவெளியில் அலையும் மின்காந்த அலைகளைப் பிடித்து, அவற்றை காட்சிகளாக மீண்டும் மாற்றுவது.

1937-ம் ஆண்டு முதன்முறையாக பிரிட்டிசு அரச நிகழ்ச்சி ஒன்றை, புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ‘எமிட்ரான்’ என்னும் கேமரா கருவியின் துணைகொண்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த ஒளிபரப்புகள் எல்லாம் கறுப்பு வெள்ளை-யில் மட்டுமே இருந்தன. ஆனால், வண்ணத் தொலைக்காட்சி கருவிகளுக்கான ஆராய்ச்சிகள் இந்த கால கட்டத்திலேயே நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த காலத்தில், வண்ண ஒளிபரப்புக்கு தேவையான அலைக்கற்றையின் (Band width)தேவை, கறுப்பு வெள்ளை ஒளிபரப்புக்கு தேவையானதை விட மூன்று மடங்கு அதிகமாக இருந்தது. இதுவே வண்ணத் தொலைக்காட்சி குறித்த வேகமான ஆராய்ச்சிகளுக்கும் தடையாக அமைந்தது.
வண்ணத் தொலைக்காட்சிகளும் வண்ண ஒளிபரப்புகளும் 1953-ம் வருடத்திலேயே தொடங்கியிருந்தாலும், அதற்கு அப்போது தேவைப்பட்ட அதீத செலவினங்களாலும், வண்ணத் தொலைக்காட்சி பெட்டியின் அதீத விலையாலும் 1960-களின் நடுப்பாதிவரைக்கும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் பெரும்பாலும் கறுப்பு வெள்ளையிலேயே இருந்தன.

தொலைக்காட்சிக்கான ஆராய்ச்சிகள் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு நிகழ்ந்து கொண்டிருந்ததால், தொலைகாட்சிக்கும் ஒளிபரப்புக்கும் ஒரு பொது விதிகள் (Standard) தேவைப்பட்டது. இந்த விதிகளின் தொகுப்பு அமெரிக்காவில் NTSC என்னும் பெயரில் 1941-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டு, பின்னர் 1953-ம் ஆண்டு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, அமெரிக்கா முழுவதும் பின்பற்றப்பட்டது. இந்த NTSC விதிகள், ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களுக்கு பல சிக்கல்களை அளித்தது எனக்கூறப்படுகிறது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நிகழ்ந்த ஆராய்ச்சிகள், வெவ்வேறு தொழில்நுட்பங்களை உபயோகப்படுத்தியதன் காரணமாக இருக்கலாம். அந்த சிக்கல்களைக் கடப்பதற்காக அவர்கள் ஒரு புதிய விதிகளை அறிமுகப்படுத்தினர். இது PAL எனப்பட்டது. இது 1962-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்னர் PAL விதி, அமெரிக்கா தவிர மற்ற பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படும் பொது விதியாக மாறியது.

1990-களின் நடுவில் டிஜிட்டல் தொலைக்காட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்பின்னர் தினம்தோறும் தொலைக்காட்சி தொழில்நுட்பம் புதுப்புது பரிமாணங்களை அடைந்து கொண்டே இருக்கிறது. இன்று அது எங்கு இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button