தோழர் சுந்தரய்யா காலமான நாள்

தோழர் சுந்தரய்யா காலமான நாள்
தோழர் சுந்தரய்யா குறித்து நினைவுகளை கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, தொழிலாளர் வர்க்கம், கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் திரளினரும் என்றென்றும் நினைவில் வைத்துப் பூஜித்து வருகிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காகவும், ஏகாதிபத்தியவாதிகள், காலனியாதிக்கவாதிகள், நவீன காலனியாதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடியவர்கள் எப்போதுமே அவரை மறக்க மாட்டார்கள்.
தொழிலாளர் வர்க்கத்திற்காகவும், சமூகப் புரட்சிக்காகவும் பல ஆண்டுகள் போராடி வருகிற எண்ணற்ற தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார்கள். இடுக்கண் வருங்காலங்களில் தங்களுடைய புரட்சிகரத் தன்மையை அவர்கள் நன்கு மெய்ப்பித்தும் இருக்கிறார்கள். இத்தகைய தோழர்கள் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் பெருமிதம் கொள்ளவே செய்யும். ஆயினும் தோழர் சுந்தரய்யா இவர்கள் அனைவரையும் விட மேலானவர்.
அவர் சாமானிய மக்களின் மனிதர். மார்க்சிசம் – லெனினிசத்தின் அடிப்படையில் புரட்சியாளருக்குத் தேவையான அனைத்து ஸ்தாபனத்திறமைகளும் அவரிடம் உண்டு. தேச விடுதலைக்காக, சோசலிசத்திற்காகவும் இறுதியில் கம்யூனிச லட்சியத்தை அடைவதற்காகவும் போராடுவதற்கு நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு அல்ல, ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு உத்வேகத்தை அளித்தவர் தோழர் சுந்தரய்யா.
தெலுங்கானா போராட்டம் என்றால் பெரும்பாலான மக்களுக்கும் சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களும் தெலுங்கானா மாநிலம் உருவானதும்தான் தெரிந்திருக்கும். நாற்பதுகளிலேயே ஒரு வீரமிக்க தெலுங்கானா விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதும், பெண்கள் உட்பட ஆயுதமேந்திப் போராடி கொடூர நிலப்பிரபுக்களிடமிருந்தும் நிஜாமிடமிருந்தும் பெரும்பகுதியை விடுவித்துத் தனியாக ஓர் அரசே நடத்தியதும் தெரிந்திருக்காது. அந்த வீரமிக்க போராட்டத்தின் தளநாயகர், வழிநடத்தியவர் பி. சுந்தரய்யா. இந்தப் போராட்டத்தால் தெலுங்கானா பகுதியில் உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பன உள்ளிட்ட உரிமைகள் செயல்படுத்தப்பட்டன.