இலக்கியம்

கதை சொல்லி என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர்

இன்று எத்தனையோ கதைச் சொல்லிகள் இருந்தாலும்… கதை சொல்லி என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் இவர் தான்…

கதைச் சொல்வதில் இவர் தனித்துவமானவர், இலக்கிய ஆளுமைகளில் மிக முக்கியமானவர், அனைவராலும் அறியப்படுபவர்…

இன்றும் இவர் கதை சொல்கிறார் என்றால் “பல நூறு கிலோ மீட்டர்கள் கடந்து வந்து இவரை நேரில் பார்த்துக் கதைக் கேட்டுப் செல்ல அத்தனை மனிதர்கள் இருக்கிறார்கள்”.

தன்னுடைய பணிகளை எல்லாம் விட்டு இவரின் குரலுக்காகவே எத்தனை தூரமிருந்தும் வர தயாராக இருக்கும் ஏராளமான வாசக உள்ளங்களை, நல்ல மனிதர்களை சம்பாதித்திருப்பவர் தான் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நடிகர் மற்றும் கதைச் சொல்லி திரு. பவா செல்லதுரை.

திருவண்ணாமலையில் வசிக்கிறார். இவரின் இணையர் கே.வி.சைலஜா (மொழிபெயர்ப்பாளர்), மகன் வம்சி, மகள் மானசி. இவர் கதை சொல்லி மட்டுமல்லாமல் எழுத்தாளரும் கூட, நிலம், நட்சத்திரங்கள் ஒளிந்துக்கொள்ளும் கருவறை, 19 டி.எம். சாரோனிலிருந்து, எல்லா நாளும் கார்த்திகை, பங்குக்கறியும் பின்னிரவுகளும் போன்ற குறிப்பிடத்தக்க புத்தகங்களை எழுதியுள்ளார்.

நடிகராக “ஜோக்கர், பேரன்பு, சைக்கோ, வால்டர், ஜெய்பீம்…” போன்ற திரைப்படங்களில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். எழுத்தாளர், பதிப்பாசிரியர், நடிகர் என இவருக்கு எத்தனை முகங்கள் இருந்தாலும் மக்களிடம் அறியப்படுவது “கதை சொல்லி” பவா’வாகத் தான்.

அதுமட்டுமல்லாமல் திருவண்ணாமலையை நோக்கி வரும் இலக்கியவாதிகள், படைப்பாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், இலக்கியத்தை நேசிப்பவர்கள், வாசகர்கள் என அனைவருக்கும் தாய்வீடாக மாறிக்கொண்டிருக்கிறது பவா செல்லதுரையின் “பத்தாயம்”. (பவா அவர்களுடைய வீடு இருக்கும் நிலத்தின், இடத்தின் பெயர் தான் பத்தாயம்). பத்தாயத்திற்கு யார் வந்தாலும் மனசும், வயிறும் நிறையாமல் திரும்பியதேயில்லை.

விடிய விடிய இலக்கிய உரையாடல்கள், கதை சொல்லும் நிகழ்வுகள், நாடகங்கள் என எப்பொழுதும் படைப்புகள் சூழ் நிலமாக திகழ்கிறது “பத்தாயம்”.

ஆரம்பத்திலிருந்தே இவருடைய வீடு இலக்கியவாதிகள் வந்து போகும் வேடந்தாங்களாகவே இருந்திருக்கிறது. ஜெயகாந்தன், லா.ச.ரா.வில் தொடங்கி ஜெயமோகன், கோணங்கி, வேல ராமமூர்த்தி , எஸ்.ராமகிருஷ்ணன், இமையம் போன்ற ஏராளமான இலக்கிய ஆளுமைகளும்…

பாலுமகேந்திரா, பாரதிராஜா, எடிட்டர் லெனின், மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மிஷ்கின், ராம், பாலா, சங்கர், ஹாரிஸ் ஜெயராஜ், பார்த்திபன், நாசர், லிங்குசாமி, கே.வி.ஆனந்த், மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜெனநாதன், ராஜு முருகன், மாரி செல்வராஜ் போன்ற திரை ஆளுமைகள் என பிரபலங்கள் முதல் எளியவர்கள் வரை அனைவரும் அவ்வபோது வந்து போகும் நிலமாக படைப்பாளர்கள் உருவாகும் பட்டறையாக தன்னை அர்ப்பணித்து அடையாளப்படுத்தி நிற்கிறது பவா செல்லதுரை அவர்களின் “பத்தாயம்”.

வீடும் வயலும்வீடும் வயலும்

சரி கதைச் சொல்லி பவா செல்லதுரைக்கு வருவோம். பவா செல்லதுரை, மைக் முன்னால் நின்றுக் கொண்டு ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நிற்கும் அழகிற்கும், ஒவ்வொரு கதைக்கும் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு கதையை பக்குவமாக சொல்லும் நேர்த்திக்கும், எளியவர்களின் மனதைக் தொடும் இவரின் வசீகரிக்கும் குரலுக்கும் மயங்காத ஆட்களே இருக்க முடியாது.

இவர் கதைச் சொல்லும் பாணியும், யுக்தியும், ஆற்றலும் அட்டகாசமானது. இவர் கதை சொல்லும் போது தான் “அந்த எழுத்தாளர் இவ்வளவு சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறாரா… என்ற எண்ணம் வரும்.

சில நேரங்களில் இவர் சொல்லும் கதையை கேட்ட பிறகு அக்கதையை எழுதிய எழுத்தாளரின் பெயரையே மறந்து அது பவா செல்லதுரையின் கதையாகவே மாறிவிடும். அந்த அளவுக்கு ஒரு கதையை அந்த கதையின் சாரம்சத்தை, அணு அணுவாக, ரசித்து ரசித்து சொல்லி கதைக் கேட்பவர்களை கட்டிப் போட்டு விடுவார் பவா செல்லதுரை.

விரக்தியில் இருப்பவர்கள் இவரின் கதையைக் கேட்டு உற்சாகமடைந்திருக்கிறார்கள், தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் மீண்டு வந்திருக்கிறார்கள்.. இவரின் கதைகள் மூலம் இதுபோன்று இன்னும் சில மாற்றங்களும், மாயங்களும் ஏராளமானோர் வாழ்வில் நிகழ்ந்துள்ளது… ஏனெனில் இவர் சொல்வது வெறும் கதைகள் மட்டுமல்ல வாழ்வியலை, மனிதத்தை, நம்பிக்கையை, கொண்டாட்டத்தை, தான் வாழ்கிறேன் என்று ஒரு மனிதன் உணரக் கூடிய ரசனையை இன்னும் இன்னும் பலவற்றை..!

யூடியூப்பில் தட்டினால் இவர் கதை சொல்லும் வீடியோக்கள் ஆயிரம் கிடைக்கும். இருந்தாலும் இன்றும் பல கிலோமீட்டர்கள் கடந்து, பல மைல்கள் கடந்து தூக்கம் தொலைத்து இரவு பகல் பயணித்து பத்தாயத்தைத் தேடி மனிதர்கள் வருகிறார்கள் என்றால் வெறுமனே கதைகளுக்காக மட்டுமல்ல இவரின் உபசரிப்பிற்காக, இவரின் மனதிற்காக, இவரின் முகத்திற்காக, இவரின் குரலுக்காக, இவரின் புன்னகைக்காக இத்தனையும் தாண்டி “பவா” என்ற ஒற்றைச் சொல்லுக்காக. பவா செல்லதுரை ஆளுமை அல்ல நம்மில் ஒருவர்… பவா செல்லதுரை நம்மில் ஒருவர் மட்டுமல்ல இந்த தலைமுறையில், சமகாலத்தில் கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கியமான ஆளுமை..!

-கோ.ராஜசேகர், தருமபுரி

நன்றி: விகடன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button