சினிமா

என் கல்யாண செலவைவிட ரெண்டு மடங்கு அதிகமா மொய் வெச்சார் எம்.ஜி.ஆர்!” –

என் கல்யாண செலவைவிட ரெண்டு மடங்கு அதிகமா மொய் வெச்சார் எம்.ஜி.ஆர்!” – பாடகர் டி.எல்.மகராஜன்

“சிவாஜி ஐயாவின் `தூக்கு தூக்கி’ படத்துல, எங்கப்பாவுக்கு எட்டுப் பாடல்கள் பாடுற வாய்ப்பு கிடைச்சது. எட்டுப் பாடல்களுக்கும் சேர்த்து 4,000 சம்பளம் கேட்டார். கடைசியில எங்கப்பாவுக்கு பதிலா அந்த எட்டுப் பாடல்களையும் டி.எம்.செளந்தரராஜன் ஐயா பாடினார். என்ன நடந்துச்சுன்னா…”

தமிழ் சினிமாவில் தடம் பதித்த எண்ணற்ற கலைஞர்களில், சிலரின் புகழ், காலம் உள்ளவரை நிலைத்திருக்கும். அந்த வரிசையில், திருச்சி லோகநாதனுக்கு நிலையான இடம் உண்டு. ஆரம்பகால தமிழ் சினிமாவில் ஜொலித்த எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், டி.ஏ.மதுரம், கே.பி.சுந்தராம்பாள், பானுமதி உள்ளிட்ட திரை ஜாம்பவான்கள் பலரும், தங்கள் படங்களில் தாங்களே பாடி நடித்துப் புகழ்பெற்றனர். அந்த கிளாஸிக் காலகட்ட திரையிசையில் ஏற்பட்ட மாற்றத்தால், பின்னணிப் பாடகர்களுக்கான முக்கியத்துவம் உருவானது. அந்த வகையில் தென்னிந்தியாவில் முழுநேர முதல் பின்னணிப் பாடகராகப் புகழ் பெற்றார் திருச்சி லோகநாதன்.

லோகநாதனின் வருகைக்குப் பிறகே, ஏ.எம்.ராஜா, டி.எம்.செளந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீனிவாஸ் போன்றோர் பிரகாசித்தனர். அவரின் மூத்த மகனும் பின்னணிப் பாடகருமான டி.எல்.மகராஜனிடம் பேசினோம். தன் தாத்தா – பாட்டி காலத்திலிருந்து தந்தையின் நினைவுகள் வரை மூன்று தலைமுறை திரை பந்தத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்…

“கும்பகோணத்திலேருந்து வேலைதேடி எம்.ஜி.ஆர் சென்னை வந்த நேரம். தங்க இடமில்லாம தன் குடும்பத்தினருடன் அவர் சிரமப்பட்டிருக்கார். சென்னை, மயிலாப்பூர்ல ஒரு வீட்டின் திண்ணையில எம்.ஜி.ஆரும் அவர் குடும்பத்தினரும் ஓய்வெடுத்திருக்காங்க. அதுதான் என் பாட்டி சி.டி.ராஜகாந்தம் வீடு. அப்போ பாட்டி பிரபலமான நாடக நடிகை. நாடக வேலை முடிஞ்சு வீடு திரும்பிய பாட்டி, தன் வீட்டுத் திண்ணையில அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர். கிட்ட பேச்சு கொடுத்திருக்காங்க. `பிழைப்பு தேடி சென்னைக்கு வந்திருக்கோம்’னு அவர் சொல்லியிருக்கார். அவங்க எல்லோரையும் தன் வீட்டுக்குள்ளாற அழைச்சு, உணவுக்கும் மாத்து உடைக்கும் ஏற்பாடு செஞ்சு கொடுத்திருக்காங்க என் பாட்டி. மேலும், அவங்களையெல்லாம் சில காலம் தன் வீட்லயே தங்க அனுமதிச்சிருக்காங்க.

நாடகங்கள்ல நடிக்கவும் எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்திருக்காங்க என் பாட்டி. அதனால, என் பாட்டி மேல அளவுகடந்த மரியாதை வெச்சிருந்த எம்.ஜி.ஆர், `ஆண்டவனே’னுதான் அவரைக் கூப்பிடுவார். நகைச்சுவை நடிகரான என் தாத்தா காளி என்.ரத்தினம், எம்.ஜி.ஆருக்கு நடிப்பு, சிலம்பம், கத்திச்சண்டை உள்ளிட்ட பல பயிற்சிகளைக் கத்துக் கொடுத்தவர். இயக்குநர் ஏ.பி.நாகராஜன் – ராணி ஜோடிக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சது என் பாட்டிதான்” சிலாகித்துக் கூறிய மகராஜன், அடுத்து தந்தையின் புகழ் பாடினார்.

“எங்கப்பா புகழுடன் இருந்த காலத்துல குறைவான எண்ணிக்கையிலதான் சினிமாக்கள் ரிலீஸாகும். அப்பவே பிரபலமான பின்னணிப் பாடகரா ரெண்டாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியிருக்கார். `கப்பலோட்டிய தமிழன்’ படத்துல எங்கப்பா மூணு பாடல்கள் பாடினார். இதுக்கான சம்பளத்தை காசோலையா அப்பாவுக்கு அனுப்பினாங்க. அதை எடுத்துக்கிட்டு அந்தப் படத்தின் இயக்குநர் டி.ஆர்.பந்தலு ஐயாவைச் சந்திச்ச எங்கப்பா, `நான் சுதேசிக்காரன். `வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் உட்பட நிறைய மேடைகள்ல பாடியிருக்கேன். சுதந்திர உணர்வைத் தூண்டியதுக்காக கல்லடியும் பட்டிருக்கேன்’னு பெருமிதத்துடன் சொன்னவர், `சுதந்திர உணர்வைத் தூண்டும் இந்தப் பாடல்களுக்கு ஊதியம் வேண்டாம்’னு அந்தக் காசோலையை அவர்கிட்ட திருப்பிக் கொடுத்துட்டார்.

1950-கள்ல தமிழ் சினிமாவுல அதிக சம்பளம் வாங்கிய பாடகர் எங்கப்பாதான். சிவாஜி ஐயாவின் `தூக்கு தூக்கி’ படத்துல அப்பாவுக்கு எட்டுப் பாடல்கள் பாடுற வாய்ப்பு கிடைச்சது. ஒரு பாட்டுக்கு ஐந்நூறு ரூபாய் வீதம் எட்டுப் பாடல்களுக்கும் சேர்த்து நாலாயிரம் ரூபாய் சம்பளம் கேட்டார் அவர். `நாங்க புது கம்பெனி. இவ்ளோ தொகையை எங்களால கொடுக்க முடியாதே…’னு தயாரிப்பாளர் தரப்பிலேருந்து சொல்லி யிருக்காங்க. `என் ஊதியத்திலேருந்துதான் தானதர்மங்கள் பண்றேன். அதனால, ஊதியத்தைக் குறைச்சுக்க வாய்ப்பில்லையே…’னு அப்பாவும் தன் நிலையை எடுத்துச் சொல்லியிருக்கார். `மதுரையிலேருந்து வந்திருக்கிற புதுப் பாடகர் ஒருத்தர் வாய்ப்பு தேடி கஷ்டப்படுறார். நல்லா பாடுறார். நீங்க அவருக்கு வாய்ப்பு கொடுத்தா, நல்ல இசைக்கலைஞரை வளர்த்துவிட்ட பெருமையும் உங்களுக்குச் சேரும்; அவருக்கும் வறுமை தீரும்’னு அந்த கம்பெனிகாரங்ககிட்ட எங்கப்பா சிபாரிசு பண்ணியிருக்கார்.

அந்தப் புதுப் பாடகர்தான் டி.எம்.செளந்தரராஜன் ஐயா. அந்தப் படத்தின் இசைமைப்பாளர் ஜி.ராமநாதன் சார்கிட்ட டி.எம்.எஸ் பாடிக்காட்டினார். ராமநாதன் சாருக்கும் டி.எம்.எஸ் குரல் பிடிச்சுப்போச்சு. அப்போ சிவாஜி ஐயாவுக்கு எங்கப்பாதான் ஆஸ்தான பின்னணிப் பாடகர். அதனால, புதுப் பாடகரை வெச்சு ரிஸ்க் எடுக்கணுமானு கொஞ்சம் யோசிச்சிருக்கார்.

டி.எம்.செளந்தரராஜன் ஐயாவின் குரல்ல ஒரு பாடலைப் பதிவு செஞ்சு சிவாஜி ஐயாவுக்கு ஒலிப்பரப்பிக் காட்டியிருக்காங்க. அவருக்கும் டி.எம்.எஸ் குரல் பிடிச்சுப்போச்சு. அந்தப் படத்துல எங்கப்பா பாடவிருந்த எட்டுப் பாடல்களையும் டி.எம்.எஸ் ஐயாதான் பாடினார். அந்தக் காலகட்டத்துல டி.எம்.எஸ் முறைப்படி சங்கீதம் கத்துக்கலை. `நீங்க உடனடியா இசை கத்துக்கோங்க. அப்பதான் எல்லாவிதமான பாடல்களையும் பாட வாய்ப்பு கிடைக்கும்’னு அவருக்கு ஆலோசனை கொடுத்திருக்கார் எங்கப்பா.

அதன்படியே முறைப்படி கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டு பாட ஆரம்பிச்ச டி.எம்.எஸ், தன் திறமையால பெரிய பாடகரா உயர்ந்தார். எங்கப்பாவின் மறைவின்போது அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த டி.எம்.எஸ் ஐயா, `பாட்டும் நானே பாவமும் நானே’ போன்ற நான் பாடின பாடல்கள் பலவும் பட்டி தொட்டியெங்கும் பரவியதுக்கு, `சங்கீதம் கத்துக்கொள்’னு லோகநாதன் கூறிய அறிவுரைதான் முக்கிய காரணம்’னு எங்கப்பாவுக்கு நன்றிகூறி அஞ்சலி செலுத்தினார். ஒரு படத்துல ஹீரோவுக்குப் பாடியிருந்தார்னா, அதே படத்துல இன்னொரு கேரக்டருக்கு எங்கப்பா பாட மாட்டார். `பானை பிடித்தவள் பாக்கியசாலி’ங்கிற படத்துல நாயகிக்கு அண்ணனா காமெடி வேஷத்துல நடிச்ச டி.எஸ்.துரைராஜ், அந்தப் படத்தைத் தயாரிச்சு இயக்கினார். அப்பாவும் அவரும் நெருங்கிய நண்பர்கள். படத்துல துரைராஜ் பாடும் `புருஷன் வீட்டில் வாழப் போற பெண்ணே’ங்கிற பாடலுக்கு எங்கப்பா பின்னணி பாடிட்டார். பிறகு, அதே படத்துல ஹீரோவுக்கு பின்னணி பாடுற ஒரு பாடல் வாய்ப்பும் அப்பாவுக்கு வந்திருக்கு.

`ஒரே படத்துல ஹீரோவுக்கும், ஹீரோயின் அண்ணனுக்கும் ஒரே குரல்ல பாடல்கள் இருக்கிறது நல்லாயிருக்காது’னு நினைச்ச எங்கப்பா, ஹீரோவுக்கு பின்னணி பாட மறுத்துட்டார். அடுத்து அவர் செஞ்ச விஷயம்தான் ஆச்சர்யமானது! திரையிசைக்குப் புதுவரவா அறிமுகமாகியிருந்த சீர்காழி கோவிந்தராஜன் ஐயா, `பொன்வயல்’ங்கிற படத்துல ஒரு பாடல்தான் பாடியிருந்தார். `எனக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தர் இருக்கார். நல்லா பாடுவார்’னு துரைராஜ்கிட்ட கோவிந்தராஜன் ஐயாவைப் பத்தி எங்கப்பா எடுத்துச் சொல்லியிருக்கார். உடனே கோவிந்த ராஜனை அழைச்சுகிட்டுப்போய், `சோலைக்குள்ளே குயிலுக்குஞ்சு சும்மா சும்மா கூவுது’ங்கிற ஹீரோவுக்கான பாடலைப் பாட வெச்சு, அவருக்கான ஊதியத்தையும் வாங்கிக் கொடுத்திருக்கார்” தந்தையின் பெருமிதங்களை அடுக்கியவரின் முகம் உற்சாகத்தில் பூரிக்கிறது.

எம்.ஜி.ஆரின் அன்புக்குப் பாத்திரமாகத் திகழ்ந்த தன் இளம் பிராயத்தைப் பகிர்ந்தவர், “கேள்வி ஞானத்துல பாட ஆரம்பிச்ச எனக்கு, `திருவருட்செல்வர்’ படத்துல பாட வாய்ப்பு கொடுத்தார் அந்தப் படத்தின் இயக்குநரான ஏ.பி.நாகராஜன் ஐயா. அந்தப் பாடல் ரெக்கார்டிங்க்கு போறதுக்கு முன்தினம். குண்டடிப்பட்டு ஆஸ்பத்திரியில சிகிச்சையிலேருந்த எம்.ஜி.ஆர் கிட்ட ஆசீர்வாதம் வாங்க என் பாட்டி சி.டி.ராஜகாந்தம் என்னைக் கூட்டிட்டுப்போனாங்க. அப்போ நான் கர்னாடக சங்கீதம் கத்துக்கலை.

நாங்க வந்ததுக்கான விவரத்தைக் கேட்டறிந்த எம்.ஜி.ஆர், ஆஸ்பத்திரியின் டீன், முக்கியமான மருத்துவர்கள், ஊழியர்கள் பலரையும் கூப்பிட்டார். கொஞ்ச நேரத்துல 50-க்கும் மேற்பட்டோர் அந்த அறையில கூடினாங்க. `பையன் சினிமால பாடப் போறான். எல்லோரும் பையனை ஆசீர்வாதம் பண்ணுங்க’ன்னார்.

பிறகு, பக்திப் பாடல் ஒண்ணு பாடச் சொன்னார் எம்.ஜி.ஆர். கண்ணை மூடி என் பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர், எங்கப்பா பாடிய பாடலைப் பாடச் சொன்னார். `ஆசையே அலைபோலே’ பாடலைப் பாடினேன். உட்கார்ந்திருந்த எம்.ஜி.ஆர் எழுந்து நின்னு வாழ்த்த, எல்லோரும் கைதட்டி என்னைப் பாராட்டினாங்க. `பையன் நல்லா பாடுறான். உடனே கர்னாடக சங்கீதம் கத்துக்கொடுங்க. அதுக்கான செலவை நானே ஏத்துக்கிறேன்’னு பாட்டிகிட்ட சொல்லி, உச்சிமோந்து என்னை வாழ்த்தினார்.

முதல்வரா இருந்தப்போ மதுரையில முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய எம்.ஜி.ஆர், அந்த நிகழ்ச்சியில பாட எனக்கு வாய்ப்பு கொடுத்தார். என் கல்யாணத்தின்போது அவர் உடல்நிலை சரியில்லாம இருந்தார். டாக்டர்கள் சொன்னதை மீறி, என் கல்யாணத்தை நடத்தி வைக்க வந்தவர், கல்யாண செலவைவிட ரெண்டு மடங்கு தொகையை அன்பளிப்பா கொடுத்தார்” பசுமையான நினைவுகளைப் புன்னகையுடன் அசைபோட்டவர், தன் குடும்பத்தினர் குறித்தும் சில விஷயங்களைச் சொன்னார்…

“எங்க ஒரே பொண்ணு ஆதிலட்சுமி கீர்த்தனாவை மலேசியால கட்டிக்கொடுத்திருக்கோம். என் மாப்பிள்ளை குகன் சுப்பிரமணியத்தின் குடும்பத்தினர், கிளாங் (கிள்ளான்) பகுதியில மூணு தலைமுறையா நகைக்கடை வர்த்தகம் பண்றாங்க. பேரன் விசாகன் ஒண்ணாவது படிக்கிறார். சென்னை, மலேசியானு ரெண்டு இடத்துலயும் நானும் என் மனைவியும் மாறி மாறி பயணிச்சுகிட்டிருக்கோம்” என்று சந்தோஷமாகக் கூறினார்.

நன்றி: சினிமா விகடன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button