சினிமா

ரங்காராவ் அண்ணா, அற்புதமான நடிகர். நடிப்பு மேதை

இப்போதெல்லாம் இந்த நடிகர் பணக்கார அப்பா, அந்த நடிகர் ஏழை அப்பா என்றெல்லாம் பார்க்கப்படுகிறது. அதன்படியே கேரக்டர்களும் கொடுக்கப்படுகின்றன. ஆனால், ரங்காராவ் இப்படியாக கோடு கிழித்து, எல்லை வைக்கமுடியாத அசுரத்தனமான நடிகர். ஒரு படத்தில் பணக்கார அப்பாவாக இருப்பார். கோட்டும்சூட்டும் போட்டுக்கொண்டு, பைப் பிடித்தபடி வருவார். இன்னொரு படத்தில் அழுக்குச் சட்டையும் பழுப்பு வேட்டியுமாக, குடிசையில் இருப்பார்.

வறட்டு கெளரவம் கொண்ட பணக்காரன், தர்ம சிந்தனையுள்ள பணக்காரன், பாசத்துக்கு ஏங்கும் அப்பா, மோசம் செய்யும் அப்பா, நம்பியவரை ஏமாற்றும் அப்பா, நம்பி ஏமாறும் அப்பா, முசுடாக இருக்கும் அப்பா, காமெடி கலகல அப்பா என்று எந்த வேடமாக இருந்தாலும் அதை ரங்காராவிடம் கொடுத்தால், அவர் பார்த்துக்கொள்வார். அந்தக் கதாபாத்திரத்தை அப்படியே உலவவிட்டுவிடுவார் என்று இயக்குநர்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

‘கல்யாண சமையல் சாதம்’ என்கிற ரங்காராவையும் ரசித்துச் சிரித்தோம். ‘முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக’ என்கிற ரங்காராவையும் பார்த்துக் கலங்கிக் கதறினோம். ‘எங்கவீட்டுபிள்ளை’யில் சரோஜாதேவியின் அப்பாவாக வந்து படம் முழுக்க டைமிங் காமெடியில் அதகளம் பண்ணியதை ரசித்தோம். சிவாஜியுடன் ‘செல்வம்’ படத்தில் ஜாலி டாக்டராக வந்து காமெடிப் பட்டாசுகளைக் கொளுத்திபோட்டுக் கொண்டே இருந்ததையும் ரசித்தோம்.

‘எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நானென்றான்…’ என்று ‘ரங்கன்…’ என்று உருகிப் பாடுகிற ‘படிக்காத மேதை’ செல்வந்ந்தர் ரங்காராவ், காலத்துக்கும் மனதில் நிற்பார்.’வாழையடி வாழை’ படத்தில் அப்படியொரு அற்புதமான பணக்கார மாமனாராக வந்து, ஒவ்வொரு கேரக்டரையும் டியூன் செய்து நல்வழிப்படுத்துவார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் படம் இது. இந்த ரங்காராவின் கேரக்டரின் நீட்சியாகத்தான், விசுவின் கேரக்டர்களும் நாரதர் நாயுடு மாதிரியான கதாபாத்திரங்களும் அமைக்கப்பட்டன என்பதாகத்தான் தோன்றுகிறது.

‘சர்வர் சுந்தரம்’ படத்தில் முக்கியமான கேரக்டரெல்லாம் இல்லை. திரைப்பட இயக்குநராக ஒரு காட்சியில் வருவார். ஆனால், அந்த ஒரு காட்சியாலே நம் மனதில் இடம்பிடித்தார். அதுதான் ரங்காராவ்.

’’ரங்காராவ் அண்ணா, அற்புதமான நடிகர். நடிப்பு மேதை’ என்று சிவாஜி புகழ்ந்து உருகியிருக்கிறார். ‘என்ன பெரிய விருது? சிவாஜி திரையில் சிரித்தால் ரசிகர்கள் சிரித்தார்கள். சிவாஜி அழுதால் ரசிகர்களும் அழுதார்கள். சிவாஜி ஆவேசமானால் ரசிகர்களும் ஆவேசமானார்கள். ஒரு நடிகனுக்கு இவைதான் விருது. இதைவிட வேறு பெரிய விருதுகள் ஏதுமில்லை ஒரு கலைஞனுக்கு. சிவாஜி அப்படி எத்தனையோ விருதுகளை வாங்கிய மகா கலைஞன்’ என்று ரங்காராவ் புகழ்ந்திருக்கிறார்.
‘சபாஷ் மீனா’, ‘தெய்வத்தின் தெய்வம்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என ரங்காராவ் அசத்தி பிரமிக்க வைத்த படங்களின் பட்டியல் நீளம்.

தெலுங்குத் திரையுலகம் நூற்றாண்டு கொண்டாடிய போது, பல நூறு ஆண்டுகளானாலும் மறக்கமுடியாத கலைஞனாகத் திகழும் ரங்காராவுக்கு தபால் தலை வெளியிட்டு தன்னை கெளரவப்படுதிக் கொண்டது. பின்னர், ஆந்திரத்தில் இவருக்கு இரண்டு இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டன.

நன்றி; இந்து தமிழ் திசை

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button