தமிழ் என்றும் அமிழ்தே/குறுந்தொகை/ பாடலை எழுதியவர் ஔவையார்

தமிழ் என்றும் அமிழ்தே
குறுந்தொகையின் இந்தப் பாடலை எழுதியவர் ஔவையார் அவர்கள்.
” அகவன் மகளே அகவன் மகளே
மனவுக் கோப்பு அன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே
இன்னும் பாடுக பாட்டே அவர்
நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே”.
தெய்வங்களை அழைத்துப் பாடுதலைச் செய்யும் கட்டிவிச்சியே, சங்கு மணியினாலாகிய கோவையைப் போன்ற வெண்மையாகிய நல்ல நீண்ட கூந்தலை உடைய மகளே, பாட்டுக்களை பாடுவாயாக, நீ பாடிய பாட்டுக்கள் அவருடைய நல்ல நெடிய குன்றத்தை புகழ்ந்து பாடிய பாட்டை மீண்டும் பாடுவாயாக.
(தலைவியது வேறுபாட்டின் காரணத்தை அறிந்த தாய் நெற்குறி பார்ப்பவளைக் கொண்டு ஆராய்ந்த காலத்தில் தோழி, தலைவனுக்குரிய மலையை நீ பாடுவாயா என்று கூறும் வாயிலாக அத்தலைவியின் வேறுபாடு ஓர் ஆடவனால் உண்டாயிற்று என்பதை புலப்படுத்தியது)
தலைவி காதல் வயப்பட்டதை அறிந்த தாயார் அகவன் மகளாகிய கட்டுவிச்சியை அழைத்துக் கட்டுப் பார்ப்பது வழக்கம்.
கட்டிவிச்சி முறத்தில் நெல்லையிட்டு அதனை எண்ணி அதனாற் போந்த சில நிமித்தங்களை அறிந்து இவள் முருகனால் அணங்கப்பட்டாள் என்று கூறுவாள். அது கேட்ட தாயார் முருகனை யழைத்து வெறியாட்டெடுப்பர்.
இவ்வகவன் மகள் தெய்வமேறிக் குறி கூறுதலும் உண்டு. இவரைப் பிற்காலத்தில் குறத்தி என்று கூறுவர்.
