மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் இன்றுகாலை நடைபெற்ற மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் மூலவர் அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாராதனை நடந்தது. 9 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவின் இரண்டாவது நாளாக நேற்று காலை 11 மணிக்கு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை மூலவர் அங்காள அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதை அடுத்து உற்சவர் அங்காளம்மனுக்கு பலவித மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை 11.00 மணிக்கு அங்காளம்மன் மயானத்தை வந்தடைந்தார். மயானத்தில் பக்தர்கள் கொழுக்கட்டை சுண்டல் உள்பட பலவித தானிய வகைகளைக் கொண்டு வந்து கும்பலாக வைத்திருந்தனர்.
மயானத்தில் அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் உள்ளிட்ட அறங்காவலர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்து மயானக்கொள்ளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர். பிரம்மாவின் சாபத்தால் பிரம்மஹத்தி தோஷம் பெற்ற சிவபெருமான் மேல்மலையனூருக்கு வந்து சாபவிமோசனம் பெற்றதை நினைவுகூறும் வகையில் இந்த மயானக்கொள்ளை திருவிழா நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் துணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் விஜயராணி, ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் நவதானியங்கள் உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை கொண்டுவந்து மயானத்தில் கொள்ளை விடுவது வழக்கம். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் ஜீவானந்தம், கோவில் அறங்காவல் குழு தலைவர் சந்தானம், அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் செய்துவருகின்றனர். ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.