தத்ரூப ஓவியங்களின் அரசன் ஓவியர் இளையராஜா காலமான நாளின்று!

தத்ரூப ஓவியங்களின் அரசன் ஓவியர் இளையராஜா காலமான நாளின்று!
ஓவியர் இளையராஜாவின் ‘திராவிடப் பெண்கள்’ ஓவியங்கள் பெரும்புகழ் பெற்றவை. அடுப்படியில் சமைக்கும் பெண், வாசலில் உட்கார்ந்து பூ கட்டும் பெண், ஜன்னல் வழியே வெளியே வேடிக்கைப் பார்க்கும் பெண் என கிராமத்துப் பெண்களை மிகத்தத்ரூபமாக வரைவதில் தேர்ந்தவரிவர்
ஆம்.. அரசமரத்தடியில் வெள்ளைப் பிள்ளையார் முன்பு மனமுருகப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது நாமும் அவர்களோடு பிரார்த்திக்கத் தொடங்கிவிடுகிறோம்;
பாவாடைத் தாவணியில் பெண்ணொருத்தி மாவரைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும் ஒருவருக்குத் தன்னுடைய அண்ணன் அல்லது அக்காளின் மகள் முகம் தவறாமல் வந்துசெல்லும்;
திண்ணையில் பூத்தொடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் முகத்தில் இறங்கியிருக்கிறது இளமையின் பூரணம்; கோயில் குளத்தில் இறங்கிப் பூக்களைக் கரைக்கும் பெண் ஒட்டுமொத்த குளத்தையும் தீர்த்தமாக்குகிறாள் – நம் காலத்தின் மகா கலைஞன் ஓவியர் இளையராஜாவின் ஓவியங்களில் வெளிப்படும் தருணங்கள் இவை!
ஓவியமா, ஒளிப்படமா என்று பார்க்கும் எல்லோரையும் ஒரு நொடி திகைப்பிலும் ஆழ்த்தும், வியப்பிலும் ஆழ்த்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா.
ஓவியர் இளையராஜாவை பற்றியாத பலரும் சமூகவலைத் தளங்கில் இளையராஜாவின் ஓவியங்களை கட்டாயம் அறிந்திருப்பார்கள். அப்பள கம்பெனி நிறுவனத்தின் சிறுகதைகளில் இவரின் ஓவியங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில். ஒரு காலகட்டத்தில் இளையராஜாவின் ஓவியங்களுக்கு ஏற்ப சிறுகதைகளை எழுதி அனுப்பும் அளவிற்கு எழுத்தாளர்கள் மத்தியில் இளையராஜாவின் ஓவியம் தாக்கம் செலுத்தியது.
இந்திய கலாசார அமைப்பின் தேசிய ஆய்வுதவிக்கான விருது, தமிழக அரசின் சிறந்த ஓவியருக்கான விருது, விஜய் தொலைக்காட்சியின் சிறந்த பத்திரிக்கை ஓவியருக்கான விருது ஆகியவை இளையராஜவின் ஓவிய திறமைக்கு சான்றாக விளங்குகிறது,
நம் காலத்தின் தனித்துவமான கலைஞனாக இயங்கிவந்த இளையராஜா2021 இதே ஜூன் 6 இல் , ஒரு நள்ளிரவு 12 மணியளவில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்; அப்போது அவருக்கு வயது 43.