ஹியுகோ வுட் கல்லறை

கட்டாயமாக பார்தே ஆக வேண்டும்” என்று விரும்பி, வனத்துறையின் அனுமதியோடு குடும்பத்தோடு பார்த்த இடம் ஹியுகோ வுட் கல்லறை.
18, 19 நூற்றாண்டுகளில் அழிக்கப்பட்ட ஆனைமலைக் காடுகளை மறுசீரமைத்து, ஆங்கிலேய அரசு மரங்களை வெட்ட முற்பட்டபோது, அதற்கு அனுமதிக்காமல் மரங்களை வளர்த்து டாப்சிலிப் காடுகளைப் பாதுகாத்த ஹியூகோ பிரான்சிஸ் அன்றேவ் வுட்(1870-1933) என்ற வன அதிகாரியின் பிறந்ததினம்(12.06.1870) இன்று.
18 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாகவும், 1857 ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய்க் கிளர்ச்சியின் காரணமாகவும் ரயில் பாதை அமைப்பதற்கும், கப்பல் கட்டுவதற்கும், தொழிற்சாலைகள், கட்டிடங்கள் கட்டுவதற்கும் மரங்கள் ஆங்கிலேயருக்குத் தேவைப்பட்டது. அதனால் ஆனைமலை டாப்சிலிப் வனப்பகுதிகளில் இருந்து பெருமளவில் தேக்கு மரங்கள் வெட்டி மும்பை மற்றும் இங்கிலாந்து எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டதால்1885 யில் டாப்சிலிப் வனப்பகுதி முற்றிலும் காணாமல் போனது. அப்போது சென்னை மாகாணத்தில் மட்டும் வருடத்திற்குச் சுமார்40,000 மரங்களுக்கு மேல் ரயில் பாதை அமைக்க மட்டுமே வெட்டப்பட்டன. அதன் பிறகு காடுகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஆங்கிலேயர், அடுத்த30 வருடங்கள் அழிந்த டாப்சிலிப் வனப் பகுதியை மீட்டெடுக்கும் முயற்சியில் பல அதிகாரிகளை நியமித்து முயற்சிச் செய்தும் பயன் கிடைக்கவில்லை.
1915 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஐ.எப்.எஸ். படித்த ஹியூகோ பிரான்சிஸ் அன்றேவ் வுட் என்ற வன அதிகாரி டாப்சிலிப் வனப் பகுதியை மறுசீரமைக்க அனுப்பப்படுகிறார். மரங்கள் வெட்டப்பட்ட காடுகளைப் பார்வையிட்டு, உண்ணிச்செடிகளால் மரங்கள் வளர்வதில்லை என அறிந்து அரசுக்குச் செயல்திட்டம் சமர்பிக்கிறார். எல்லாப் பகுதிகளில் முற்றிலும் மரம் வெட்டுவதைத் தடைச் செய்வது, ஒரு மரம் வெட்டினால் நான்கு மரம் நடுவது, 25 வருடங்கள் கடந்த மரங்களை மட்டும் வெட்டுவது, மரத்தை வேரோடு வெட்டாமல் நிலத்திற்கு மேல் சில அடிகள் விட்டு வெட்டுவது, உண்ணிச் செடிகளை அகற்றுவது, வெளியேற்றபட்டப் பழங்குடி மக்களைத் திருப்பி வரவைத்து அவர்கள் உதவிடயுடன் காடுகளை மீட்பது போன்ற திட்டங்களைச் செயல்படுத்தினார். தனக்கு அளித்த பங்களாவில் தங்காமல் காடுகளுக்கு நடுவே ஒரு சிறிய வீட்டில் தங்கிப் பணியாற்றினார்.
தினமும் தனது சட்டைப் பைகளில் மர விதைகளை நிரப்பிக்கொண்டு, காடுகளில் நடந்து, ஊன்றுகோலால் குழித் தோண்டி விதைகளைத் தினமும் விதைத்தார். விதைத் தீர்ந்து போனால், அடுத்த நாள் விதைகளைக் கொண்டுவந்து விட்டுப்போன இடத்தில் இருந்து மறுபடியும் தொடங்குவார். இப்படிப் பல வருடங்கள் தினம்தோறும் நடந்து அவர் வைத்த லட்சக்கணக்கான மரங்களே இன்று டாப்சிலிப் பகுதியில் வானுயர்ந்து நிற்கும் மரங்கள். மேற்குத் தொடர்ச்சி மலைப் பற்றியும், மழைப் பெறுவதற்கும், பருவநிலை மாற்றத்திற்கும் காடுகளும், காட்டுயிர்களும் எவ்வாறு உதவுகின்றன என்று நன்கு அறித்து வைத்து இருந்தார்.
முதல் உலகப்போரின் பொது ஆங்கிலேயருக்குக் கப்பல் கட்ட மரங்கள் தேவைப்பட்டன. மரங்களை வெட்ட ஹியூகோ வுட்டை ஆங்கிலேய அரசு அணுகியபோதும், ஒரு மரத்தைக் கூட வெட்ட அனுமதிக்கமுடியாது என்று கூறி, இந்தக் காடுகளைக் காப்பாற்றியவர். இல்லையென்றால் டாப்ஸ்லிப், பரம்பிக்குளம் பகுதிகளும் எஸ்டேட்களாக மாறியிருக்கும். 25 ஏக்கரில் அவர் ஆரம்பித்த மரம் வளர்ப்பு, அவர் இறக்கும் போது 625 சதுரக் கி.மீட்டராகப் பரந்து விரித்து இருந்தது. தேக்கு மரங்கள் வளர்வதற்கு உண்ணிச்செடிகள் தடையாக உள்ளது என்று, அதனை அழிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டார்.
அழித்துப் போன ஆனைமலைக் காடுகளை மறு சீரமைப்புச் செய்து, அந்தக் காடுகளின் மீது கொண்ட அன்பினால், அதனைப் பாதுகாத்து, தான் இறந்த பின் இந்தக் காட்டிலேயே என் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் ஆசைபடி அவர் வைத்த மரங்களுக்கிடையே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. “என்னைப் பார்க்க விரும்பினால் சுற்றிலும் பாருங்கள்” என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது.
ஆனைமலை டாப்சிலிப் பகுதிகளில் எல்லா உயிரினங்களும் புலி, இருவாட்சி, சிங்கவால் குரங்கு உட்பட இன்றும் இருப்பதற்குக் காரணம் இவரின் பாதுகாப்பு முயற்சியே ஆகும்.
🎼🎼🎼🎼🎼🎼🎼
முருகேசன்
சேலம் இயற்கை கழகம்