மலேசியா வாசுதேவனின் 79ஆவது பிறந்தநாள் இன்று

வசீகரக் குரலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடகர் மலேசியா வாசுதேவனின் 79ஆவது பிறந்தநாள் இன்று…
பாட்டு, யாருக்குத்தான் பிடிக்காது? குத்துப்பாட்டு, காதல் பாட்டு, மெல்லிசைப் பாட்டு, சோகப்பாட்டு, தத்துவப்பாட்டு என்று பாடலில் பல ரகங்கள். இவற்றில் இதுஇதுதான் பிடிக்கும் என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள். பாட்டு… அவ்ளோதான். அதுல இப்படியென்ன… அப்படியென்ன… எல்லாமே பிடிக்கும் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி எந்தப் பாட்டு வகையை, எவர் பாடினாலும் பிடிக்கும். அப்படி எல்லா வகைப் பாட்டுகளையும் பாடி, பட்டையைக் கிளப்பியவர்களில்… தனித்துவம் மிக்கவர் மலேசியா வாசுதேவன். மலேசியா வாசுதேவனின் குரல் தனி ரகம். சோகப்பாட்டுக்கு அழ வைப்பார். காதல் பாட்டில் குதூகலப்படச் செய்வார். வீரமான கோபமான பாடலைப் பாடினால், அதைக் கேட்டு நம்மைப் பொங்கியெழச் செய்வார். ’ஓ… ஒரு தென்றல் புயலாகி வருதே’ பாடலை எப்போது கேட்டாலும் அனல் நம் மீது வந்து தெறிக்கும். அதேபோல், கிண்டல் பாடல்களில் இன்னும் விளையாடுவார். சகலகலாவல்லவனின் ‘கட்டவண்டி கட்டவண்டி’ சின்ன உதாரணம்.
மலேசியா வாசுதேவன் தனது இசைப்பயணத்தில் 7 ஆயித்துக்கும் அதிகமான பாடலை பாடியுள்ளார். 80-களில் உச்சம் தொட்ட மலேசியா வாசுதேவன், ரஜினி, கமல் என முன்னணி நட்சத்திரங்கள் பலருக்கும் பாடியிருக்கிறார்.தமிழ்நாட்டில் ஓடும் மினி பஸ், தனியார் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் மலேசியா வாசுதேவன் குரலை கேட்காமல் பேருந்தை விட்டு இறங்க முடியாது. அதுவும் பாரதிராஜா படங்களில் அவருக்கு கிடைத்த பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை.
‘16 வயதினிலே’ படத்தில் கமலுக்காக பாடியதன் மூலம் மிகவும் பிரபலமானார். எஸ்பிபி பாட முடியாத காரணத்தால் அவருக்கு இப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. கொஞ்சம் விளக்கமாகச் சொல்வதானால் 16 வயதினிலே’ படம் தொடங்கிய போது, முதல்நாள் ரிக்கார்டிங் செய்ய பாட்டெல்லாம் ரெடி. ஆனால் எஸ்.பி.பி.க்கு சற்றே நலமின்மை. ‘என்னய்யா இது..’ என்று பாரதிராஜா புலம்ப, ‘ஏன் புலம்பறே? அமைதியா இரு’ என்று சொன்ன இளையராஜா, திரும்பினார். ‘டேய் வாசு. டிராக் ஒண்ணு பாடணும். அதுவும் கமலுக்குப் பாடணும். சரியாப் பாடினா, இந்தப் படத்துலேருந்தே உனக்கொரு வெற்றிப் பயணம் கிடைக்கலாம்டா. நல்லாப் பாடுடா’ என்று மலேசியா வாசுதேவனிடம் சொல்லிப் பாடவைத்தார் ராஜா. எல்லோருக்கும் பிடித்துவிட்டது. ‘செவ்வந்திப் பூ முடிச்ச’ பாடல், ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..’ பாடல். ரெண்டுமே சூப்பர் ஹிட்.
அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கினார் இளையராஜா. அதுவும் எப்படி? ரகம்ரகமாய், தினுசுதினுசான பாடல்களை வழங்க, அந்தப் பாடல்களை வைத்து சிக்ஸர் சிக்ஸராக விளாசித்தள்ளினார் மலேசியா வாசுதேவன். அதுவும் கிராம மக்களின் வாழ்வியலை திரையில் காட்டிய பாரதிராஜாவுக்கு மலேசியா வாசுதேவனின் குரல் பேருதவியாக இருந்தது.
முதல் மரியாதை படத்தில் இடம்பெற்ற பூங்காத்து திரும்புமா, வெட்டி வேர் வாசம்..சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது.என் உயிர் தோழன் படத்தில் இடம்பெற்ற ஏ ராசாத்தி..கிழக்குச் சீமையிலே படத்தில் தென் கிழக்கு சீமையில.. என இவர்கள் காம்பினேசனில் வந்த பாடல்கள் ஏராளம்.கருத்தம்மா படத்தில் ‘காடு பொட்டக் காடு’ என்ற பாடலை பாரதிராஜாவும், மலேசியா வாசுதேவனும் இணைந்து பாடியிருப்பார்கள்…ரஜினி – மலேசியா வாசுதேவன்ரஜினி படப் பாடல்களில் மலேசியா வாசுதேவனின் பங்களிப்பு முக்கியமானது. பொதுவாக என் மனசு தங்கம், ஆசை நூறு வகை, வெத்தலைய போட்டேன்டி என துள்ளல் இசை ஒரு ரகம். ஆகாய கங்கை, அடி ஆடு பூங்கொடியே, வா வா வசந்தமே என மெலோடி ரகங்கள் தனி. ‘மாவீரன்’ படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களையும் மலேசியா வாசுதேவன்தான் பாடினார்.
இளையராஜாவுடன் மட்டும் 500-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார். கட்டிவச்சுக்கோ இந்த அன்பு மனச, சரியோ சரியோ, ஒரு மூனு முடிச்சாலும் முட்டாளா ஆனே, ஊரு விட்டு ஊரு வந்து இப்படி பல பாடல்களைச் சொல்லலாம்.
அதேபோல் மற்ற பாடகர்களோடு இணைந்து இவர் கொடுத்த ஹிட்டுகள் அதிகம். எஸ்பிபியும் மலேசியா வாசுதேவனும் இணைந்து பாடிய ‘என்னம்மா கண்ணு’ பாடல் இன்றளவும் மிகப் பிரபலம். அதேபோல் இதே கூட்டணியில் உருவான ‘தென்மதுரை வைகை நதி’ பாடலும் மாபெரும் ஹிட்.
பின்னாளில் பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் முத்திரை பதித்தவர் மலேசியா வாசுதேவன். காமெடியன், வில்லன், குணச்சித்திர நடிகர் பல்வேறு பரிமாணங்களில் நடித்திருக்கிறார்.
கமலுக்காக பாட்டுப் பாடி பிரபலமான மலேசியா வாசுதேவன், ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் அவருக்கே வில்லனாக நடிக்கும் அளவு நடிப்பில் உயர்ந்திருந்தார். ஊர்க்காவலன், முதல் வசந்தம், ஊமை விழிகள் ஆகிய படங்களும் இவரது நடிப்பை பறை சாற்றுபவை.இதுமட்டுமல்லாது ‘நீ சிரித்தால் தீபாவளி’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
ஆக பாடல், நடிப்பு, இயக்கம் என திரைத்துறை சார்ந்த பல பிரிவுகளிலும் போட்டியிட்ட சிங்கம்தான் நம் மலேசியா வாசுதேவன். அதில் முடிந்த அளவு வெற்றியும் கண்டார். இன்று அவரது 79ஆவது பிறந்தநாளில் சல்யூட் செய்கிறது..