நா.பா. என்றொரு குறிஞ்சி மலர்…

நா.பா. என்றொரு குறிஞ்சி மலர்…
**
…………………………….
*நா.பா.வின் பாத்திரங்கள் எல்லாம் தரைக்கு அரையடி மேலே நிற்கின்றனவே என நா.பா.விடம் வானொலிப் பேட்டியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நா.பா. சொன்ன பதில் இதுதான்:
`பல எழுத்தாளர்கள் யதார்த்தவாதப் போக்கைப் பின்பற்றி இலக்கியம் படைக்கிறார்கள். அது அவர்கள் பாணி. நான் லட்சியவாதப் போக்கைப் பின்பற்றுகிறவன்.
கம்ப ராமாயணம் ஓர் அற்புதமான இலக்கியம் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்திருக்க இயலாது. அதன் பாத்திரங்கள் பலவும் தரைக்கு ஓர் அடி மேலே நிற்பவைதான். கம்பன் கவிதை காலத்தை வென்று நிற்கிறது.
என் பாத்திரங்கள் லட்சியப் பாத்திரங்களாக இருந்தாலும் காலத்தை வென்று நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
இலக்கியத்தில் யதார்த்தவாதம் என்பது ஒரு போக்கு. லட்சியவாதம் என்பது இன்னொரு வகைப் போக்கு. இந்த இரண்டு போக்குகளும் தமிழுக்குத் தேவைதான்.
இன்னும் சொல்லப் போனால் தமிழில் பொதுவுடைமை சித்தாந்தத்தை மையப்படுத்திப் பல படைப்புகள் வருகின்றன. அவை சிறப்பாகவே இருக்கின்றன. பொதுவுடைமை வாதம் என்பது கூட லட்சிய வாதம் தானே?`
நா.பா.வின் சமூக நாவல்களில் வரும் ஆண்கள் மிகுந்த துணிச்சல் மிக்கவர்கள். அறச்சீற்றம் உடையவர்கள். நேர்மையைப் போற்றுபவர்கள்.
குறிஞ்சி மலர் அரவிந்தன், பொன்விலங்கு சத்தியமூர்த்தி என்றிப்படி அவர் படைத்த எல்லா ஆண் கதாநாயகர்களிடமும் இந்தப் பொதுவான பண்பைப் பாரக்க முடியும்.
நா.பா. தாமே சிறந்த பேச்சாளராக இருந்ததால் தானோ என்னவோ, தாம் படைத்த பல பாத்திரங்களையும் சிறந்த பேச்சாளர்களாகப் படைத்தார். குறிஞ்சி மலர் அரவிந்தனும் அவன் காதலி பூரணியும் மக்க¨ள் ஈர்க்கக் கூடிய தலைசிறந்த பேச்சாளர்களாக விளங்குகிறார்கள்.
அவரது சமூக நாவல்களில் முற்றிலும் வித்தியாசமான கதைக் களனைக் கொண்ட படைப்பு, `நீல நயனங்கள்`. திரைத்துறையை மையமாக வைத்து எழுதப்பட்டது.
வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில் கலைமகள் மாத இதழில் தொடராக வெளிவந்த நாவல் அது.
அதுபோலவே மணியன் ஆசிரியராக இருந்து நடத்திய `இதயம் பேசுகிறது` இதழில் தொடராக வெளிவந்த `சுந்தரக் கனவுகள்` என்ற நாவலும் வித்தியாசமானது.
பத்திரிகை உலகமே அதன் பாடுபொருள். பத்திரிகை உலக ஊழல்கள் முழுவதையும் அதில் வெளிப்படுத்தி எழுதியுள்ளார் நா.பா.
`ஆத்மாவின் ராகங்கள்` என்ற நாவலை தீரர் சத்தியமூர்த்தியின் புதல்வி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டதன்பேரில் நேரடியாக வாசகர் வட்டம் பதிப்பகத்திற்காகப் புத்தகமாகவே எழுதினார் நா.பா.
நா.பா. மிகுந்த ஆன்மிக நம்பிக்கை உள்ளவர். தாம் ஒரு புதிய நாவலை எழுதத் தொடங்கும் முன் சென்னையில் தி.நகரில் உள்ள அகத்தியர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது அவரது வழக்கம்.
குறிஞ்சி மலர் நாவலின் இறுதிப் பகுதியில் தன்னை விட்டு மறைந்த அரவிந்தனின் முகமாகவே முருகக் கடவுளின் முகம் மாறுவதாகப் பூரணி உணர்ந்து ஆறுதல் அடைவதாய் அவர் எமுதுகிறார்.
தாம் ஆன்மிகவாதியாக இருந்தாலும் தனிமனித ஒழுக்கமும் சமூக ஒழுக்கமும் நிறைந்த உயர்தர நாத்திகர்களை அவர் போற்றினார். அத்தகைய நாத்திகர்கள் அவரது நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்.
அப்படியான நாத்திக நண்பர்களில் ஒருவர்தான் பிரபல பத்திரிகையாளரான காலஞ்சென்ற சின்னக் குத்தூசி. அவரது பண்பு நலன்களால் கவரப்பட்ட நா.பா., தாம் எழுதிய `துளசிமாடம்` என்ற சமூக நாவலில் அவரை `இறைமுடிமணி` என்ற பெயரில் ஒரு பாத்திரமாகவும் படைத்துள்ளார்.
அரசியல் ஆர்வம் கொண்டிருந்த நா.பா., பெருந்தலைவர் காமராஜரைப் பெரிதும் போற்றினார். அவரது அணியில் சேர்ந்து ஸ்தாபன காங்கிரஸ் கட்சியின் பேச்சளராகவும் இயங்கினார்.
காமராஜ் வாழ்ந்த காலத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தன், கவிஞர் கண்ணதாசன், பத்திரிகையாளர் சோ இவர்களோடு நா.பா.வும் அரசியல் மேடைகளில் ஸ்தாபன காங்கிரஸ் தொடர்பாக ஒன்றிணைந்து முழங்கிய கூட்டங்கள் பல தமிழகமெங்கும் நடந்தன.
காமராஜ் அவரைப் பெரிதும் கவர்ந்ததால் தாம் எழுதிய `சத்தியவெள்ளம்` நாவலில் காமராஜையே ராமராஜ் என்ற பெயரில் ஒரு பாத்திரமாகப் படைத்தார்.
பெருந்தலைவர் காலமானபோது, தாம் நடத்தி வந்த இலக்கிய இதழான தீபம் மாத இதழின் அட்டையில் பெருந்தலைவரின் படத்தை வெளியிட்டார்.
`இலக்கியப் பத்திரிகையில் ஓர் அரசியல் தலைவரின் படமா!` என்ற கேள்வி எழுந்தபோது, `காமராஜரே ஓர் இலக்கியம்தான்!` என்று அதற்கு பதில் சொன்னார்.
*நா.பா. ஒரு பத்திரிகைக்கு எழுதி அனுப்பிய `குருவி மலைக் கோட்டை` என்ற சரித்திர நாவல் தொலைந்து போயிற்று. பின்னர் அதன் பிரதி கிடைக்கவேயில்லை. அந்த நாவலைப் பிறகு நா.பா. எழுதவுமில்லை.
அவரது அளவில் பெரிய நாவலான `மணிபல்லவம்`, அளவில் சிறிய நாவலான `வஞ்சிமாநகரம்` இரண்டுமே வாசகர்களிடையே பெரும்புகழ் பெற்றன. `பாண்டிமாதேவி, கபாடபுரம்` போன்ற சரித்திர நாவல்களும் அவருக்குப் பெருமை சேர்த்தது.
நா.பா.வின் சரித்திர நாவலான `நித்திலவல்லி`, கோபுலுவின் அழகிய ஓவியங்களோடு ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தது.
நா.பா. கடைசியாக எழுதிய சரித்திர நாவல் `ராணி மங்கம்மாள்`. தினமணிகதிரில் ஆசிரியராக இருந்தபோது, அந்தப் பத்திரிகையிலேயே அதைத் தொடராக எழுதினார் அவர்.
ராணி மங்கம்மாள் தொடருக்கு ஓவியங்களை வரைந்தவர் பிரபல ஓவியர் கோபுலு. நா.பா. மதுரையைச் சார்ந்தவர் என்பதால் மதுரை ராணியான மங்கம்மாவை ஈடுபாட்டோடு மிக அழகிய எழுத்தோவியமாகத் தீட்டியுள்ளார்.
`வலம்புரிச் சங்கு` உள்ளிட்ட பல புகழ்பெற்ற சிறுகதைகளை நா.பா. தொடர்ந்து எழுதிவந்தார். தீபம் மாத இதழில் பொன்முடி என்ற புனைபெயரில் `ஒரு வழிகாட்டிக்குத் தன் வழி தெரியவல்லை` என்பதுபோன்ற செறிவான குறுநாவலக்ளைப் படைத்தார்.
`கங்கை இன்னும் வற்றிவிடவில்லை ` உள்ளிட்ட அவரது பல குறுநாவல்கள் தேசியச் சிந்தனைகளைத் தம்மகத்தே தேக்கி நின்றன. அதனால் அவை தேசியவாதிகளால பெரிதும் கொண்டாடடபபட்டன.
*நா.பா. அதிகக் கவிதைகளை எழுதவில்லை. அவருடைய கவிதைத் தொகுதியாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வெளிவந்துள்ளது.
நா.பா.வுக்கு நிறைய மரபுக் கவிதைகள் எழுதவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நாவல் சிறுகதைத் துறைகளில் கவனம் செலுத்தியதால் அவரால் கவிதைத் துறையில் அதிகம் ஈடுபட முடியவில்லை.
அவர் தம் உரைநடைப் படைப்புகளின் இடையேயும் தம் கவிதைகள் சிலவற்றை எழுதினார். நாவலின் இடையே வரும் கவிதைகளை எழுதியவர் செங்குளம் வீரசிங்கக் கவிராயர் என்பதாக நாவல் பேசும்.
ஆனால் செங்குளம் வீரசிங்கக் கவிராயர் வேறு யாருமல்ல. நா.பா.வேதான். `நிலவைக் குழைத்துச் சிறுகறைகள் துடைத்துக் குறுமுறுவல் பதித்த முகம்` என்று தொடங்கி வளரும் அவரது குறிஞ்சி மலர் நாவலின் இடையே வரும் கவிதை பெரும்புகழ் பெற்றது.
அவர் பல நாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புப் பெற்றர். கல்கி இதழில் அவர் எந்த வெளிநாடு சென்றாலும் உடன் அந்தப் பயணம் குறித்த தொடரை அவர் எழுதுவார்.
`நான் கண்ட நாடுகள், கண்டறியாதன கண்டேன்` எனற தலைப்புகளில் அவரது பயண இலக்கியம் புத்தகங்களாகவும் வந்துள்ளன.
நா.பா. பழந்தமிழ்ப் பயிற்சியும் இலக்கணப் புலமையும் உடையவர். பண்டித நா. பார்த்தசாரதி என்றே இலக்கியக் கட்டுரைகள் எழுதும்போது அவரது பெயர் வெளியிடப்படும்.
பழந்தமிழ் இலக்கிய நயங்களை விளக்கி அவர் எழுதிய கட்டுரைகள் வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்டன.
நா.பா. கையாண்ட உவமைகள் அழகியவை. புதியவை. காலத்திற்கு ஏற்றவை. உதாரணத்திற்கு ஒன்று. அவரது `செய்திகள்` என்ற நாவலில், கதாநாயகன் காதலித்த பெண் இன்னொருவனை மணக்கிறாள்.
பின்னர் திருமணம் முடிந்த சில நாள்களில் மருதோன்றி இட்ட பாதங்களோடு தன் பழைய காதலனைச் சந்திக்க வருகிறாள்.
காதலன் அவள் பாதங்களைப் பார்க்கிறான். அதில் தென்பட்ட சிவப்பு மருதோன்றிப் பதிவைப் பார்த்து அவன், `இவள் சில நாட்களுக்கு முன்பிருந்து, தான் இன்னொருவனுக்குச் சொந்தம் என்பதைச் சிவப்பு மையால் அடிக்கோடிட்டுக் காட்டுகிறாளோ!` என நினைத்துக் கொள்வதாக நா.பா. எழுதுகிறார்.
`தேர்ந்து பழகின கை பூத்தொடுத்த மாதிரி இருந்தது மோகினியின் கையெழுத்து.` என்பது மோகினி என்ற கதாபாத்திரத்தின் கையெழுத்தைப் பற்றி `பொன்விலங்கு` நாவலில் நா.பா. எழுதும் வரி.
இத்தகைய எண்ணி எண்ணி ரசிக்கத்தக்க எண்ணற்ற உவமைகளை அவரது இலக்கியத்தில் நெடுகக் காணலாம். ..
*தன்னை விமர்சித்தவர்கள்மேல் நா.பா. வருத்தப்பட்டதோ கோபப்பட்டதோ கிடையாது. காரணம் தம் எழுத்துப் பாணியில் அவருக்கு நல்ல நம்பிக்கை இருந்தது.
வணிக ரீதியாக சமரசம் செய்துகொண்டு எழுதக் கூடாது என்ற தம் கொள்கையை அவர் கடைசிவரை விட்டுக் கொடுக்கவில்லை.
வல்லிக்கண்ணன், தி.க.சி., சி.சு.செல்லப்பா மூவரும் இறுதிவரை அவரது உற்ற நண்பர்களாக இருந்தனர். தவிர தி.ஜானகிராமன், சிட்டி சிவபாதசுந்தரம், அகிலன் போன்ற எழுத்தாளர்களும் நா.பா. மேல் மிகுந்த மரியாதையும் நேசமும் கொண்டிருந்தார்கள்.
இன்றும் நா.பா.வின் இலக்கிய அன்பர்கள் மதுரையைச் சார்ந்த ஓர் இலக்கியவாதியை இழந்த சோகத்தோடு ஒரு மிக நல்ல மனிதரை இழந்த சோகத்தையும் சேர்த்தே உணர்கிறார்கள்.
நல்லிலக்கியம் படைத்த நா.பா. ஒரு நல்ல மனிதராகவே வாழ்ந்து மறைந்தார் என்பதே அவர் பெருமை.
திருப்பூர் கிருஷ்ணன்