“அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை”

“அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை”
மே 23, இதே நாளில் 1867 ஆம் ஆண்டு இராமலிங்க வள்ளலார் சுவாமிகள், வடலூரில் உள்ள பார்வதிபுரம் என்னும் கிராமத்து மக்களிடம் நிலத்தை தானமாக பெற்று சமரச வேத தர்மசாலையை தொடங்கினார். பின்பு அவரே சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என பெயர் மாற்றம் செய்தார்.
இந்த தர்மசாலையில் மக்கள் வழங்கும் பொருள் உதவியைக் கொண்டு சாதி மத மொழி இனம் உயர்ந்தோர் தாண்டோர் என்று பாகுபாடு வராமல் மூன்று வேளையும் பசித்தவருக்கு உணவளிக்கும் தொண்டு செய்ய தொடங்கியது இந்த நாள்.
பசி என்பது இல்லாத மக்கள் இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்பதே இவருடைய குறிக்கோள். இராமலிங்க சுவாமிகள் பற்ற வைத்த அடுப்பின் நெருப்பு இன்றும் வழிவழியாய் தொடர்ந்து எரிந்து வருகிறது.
அன்னதானம் உணவு தயாரிக்க பக்தர்கள் மூலம் நன்கொடை தொடர்ந்து பெறப்படுகிறது. தினமும் காலை 6:00 மணி, 8 மணி,பகல் 12 மணி,மாலை 5 மணி, இரவு 8 மணி என்ன ஐந்து முறை அன்னதானம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. சிறப்பு நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
உலகில் வேறு எங்கும் இல்லாத தனி பெரும் அமைப்பு அங்கு தினமும் திருவருட்பா பாடல்கள் பாடி பிரார்த்தனை செய்கின்றனர்.
இராமலிங்கர் இளம் வயதில், கல்வி பயில சகோதரர் சபாபதி மூலமாக காஞ்சிபுரத்தில் உள்ள ஆசிரியர் சபாபதி அவர்களிடம் பாடம் படிக்க அனுப்பப்பட்டார்.
ஆசிரியர் சபாபதி அவர்கள், தமது மாணாக்கர்களுக்கு
“ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு செய்ய வேண்டாம்” என பாடி கற்றுக் கொடுத்த போது, இராமலிங்கர் அந்த வரிகளை சொல்ல மறுத்தார்.
ஆசிரியர் காரணம் கேட்டபோது, பாடலின் வரியில் வேண்டாம் என்று அமங்கலமான சொல்லால் முடிகிறது என தெரிவித்தார்.
அப்படி என்றால் நீ சரியாக எப்படி பாடுவாய் என்று என்று கேட்டபோது,
” ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு களவாமை வேண்டும்
பெருமை பெரு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாதிருத்தல் இருக்க வேண்டும் ” என தொடர்ந்து பாடியதை கேட்டு ஆச்சரியப்பட்டார்
ஆசிரியர்.
உனக்குள் ஒரு ஞானம் உள்ளது என்றும், நீ என்னிடம் படிப்பை கற்றுக் கொள்ள தேவையில்லை என்றும், சென்னை மண்ணடியில் அப்போது இருந்த அவருடைய அண்ணனிடம் விட்டுச் சென்றார்.
இராமலிங்க சுவாமிகள், ஆன்மீகத்தில் மேலோங்கி தனது உரைகளால் மக்களை ஈர்த்தார். சுவாமிகளின் கருத்தையும் மக்கள் ஏற்று நடந்தனர்.
1874 ஆம் ஆண்டு தை 19ல் வடலூர் திருச்சபை வளாகத்தில் உள்ள அறைக்குச் சென்று இறையருள் பெற்று ஜோதியோடு இரண்டறக் கலந்தார் என்பது வரலாறு.
வடலூர் செல்பவர்கள், ராமலிங்க சுவாமிகளின் திருச்சபைக்குச் சென்று ,இன்றும் அவரின் அருள்பெற்று, நம்மால் இயன்ற உதவிகளையும் மேற்கொள்ளலாம்.
“அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை”
