ஜிம் பயிற்சியாளர் மிரட்டல்: போலீஸில் நடிகை பாயல் புகார்

பிரபல வங்கமொழி நடிகை பாயல் சர்க்கார் தனது தூரத்து உறவினரான ஜிம் பயிற்சியாளர் மீது பாலியல் தொலை புகார் கொடுத்துள்ளார். இந்தித் திரைப் படங்களிலும் நடித்துள்ள இவர், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் பா.ஜ.கவில் இணைந்த இவர், கொல்கத்தா அருகில் உள்ள பராக்பூர் போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “என் செல்போனுக்கு ஆபாசத் தகவல்கள் அடிக்கடி வந்தது. அந்த எண்ணை சோதித்தபோது அது ஜிம் பயிற்சியாளரான என் தூரத்து உறவினர் என்பது தெரியவந்தது. அவர் நம்பரை பிளாக் செய்தேன். வேறொரு எண்ணில் இருந்து வந்து தொடர்ந்து ஆபாச மெசேஜ்களையும் ஆட்சேபனைக்குரிய புகைப்படங்களையும் அனுப்பினார். பின்னர் தனது விருப்பத்தை ஏற்கவில்லை என்றால் ‘போட்டோஷாப்’ செய்யப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்குவேன் என்று மிரட்டினார்” என்று தெரிவித்துள்ளார்.
அவருடன் நடந்த உரையாடல்களின் ‘ஸ்கிரீன்ஷாட்’டையும் போலீஸில் பாயல் சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.