இரு அணிகளும் நம் இதயங்களை வென்றன

சென்னை vs குஜராத் இடையிலான நேற்றைய இறுதிப்போட்டியில் சென்னை அணி கடைசி நொடிவரை போராடி வெற்றி பெற்றது.
மழையின் குறுக்கீட்டால் மே 28ம் தேதி நடக்க வேண்டிய மேட்ச் அடுத்த நாள் (29ம் தேதி) ‘ரிசர்வ் டே’க்கு தள்ளி வைக்கப்பட்டு பின்னர், ரிசர்வ் டேவின் இரண்டாவது இன்னிங்ஸிலும் மீண்டும் மழை குறுக்கிட, DLS முறைப்படி 15 ஓவர்களில் 171 ரன்கள் என்ற இமாலய இலக்கு சென்னைக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த முதல் இன்னிங்ஸில் குஜராத் அணியின் சாய் சுதர்சன் 47 பந்துகளுக்கு 96 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.
மழைக்குப் பின் தொடர்ந்த இரண்டாவது இன்னிங்ஸில் மோகித் சர்மா, ரஷித் கான், முகமது சமி ஆகியோர் குஜராத் அணியின் தூணாக நின்று பந்து வீச ஆட்டம் சூடுபிடித்து கடைசி பந்துவரை திக்திக் நொடிகளே நீடித்தன. குஜராத் அணிக்கு எதிரான சேஸிங்கில் கான்வே, ரஹானே, ராயுடு, துபே என அனைவரும் முக்கிய பங்காற்ற இறுதியாகக் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டியிருக்க, ஜடேஜா ஒரு சிக்ஸரும் பவுண்டரியும் அடித்து CSK அணியை வெற்றி பெறச் செய்தார்.
அதன்பின் ஜடேஜா உற்சாகத்தில் ஓடிவந்து தோனியைக் கட்டியணைத்தது, தோனி, ராயுடு மற்றும் ஜடேஜாவின் கைகளில் கோப்பையைக் கொடுத்தது, சிஎஸ்கே ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் கண்ணீர் சிந்தியது என மைதானத்தில் நடந்த அத்தனையும் இந்த சீசனின் நினைவில் நீங்கா மொமெண்ட்கள்தான். இதையடுத்து நேற்றைய இரவு முதல், பேட்டிங், பௌலிங் என அனைத்திலும் சிறப்பாக ஆடிய குஜராத் அணிக்கும் மற்றும் 5வது முறையாகக் கோப்பையை வென்ற சென்னை அணிக்கும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் நேற்றைய போட்டி குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இதுவரை நடந்த IPL சீசன்களிலேயே சிறந்த சீசனின் முடிவுரை சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுமே கடுமையாகப் போராடின. தொடக்கம் முதலே இரு அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெற்றியாளரைக் எளிதான கணிக்க முடியவில்லை. கடைசி பந்து வரை இரு அணிகளும் விடாமல் போராடி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தனர்.
ஆனால், நான் முன்பே குறிப்பிட்டது போலவே சென்னையின் பேட்டிங்கின் வலிமை CSK-வின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.
மற்றுமொரு ஐபிஎல் கோப்பையை வென்றதற்காக எம்.எஸ்.தோனி மற்றும் ஒட்டுமொத்த சென்னை அணிக்கும் வாழ்த்துகள். அதுமட்டுமல்லாமல், இந்த நேரத்தில் கடைசி பந்து வரை விட்டுக் கொடுக்காமல் போராடிய குஜராத் டைட்டன்ஸ் அணியினரின் பாராட்டத்தக்க முயற்சிகளையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒரு வெற்றியாளர் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டியிருக்கிறது. இருப்பினும், இரு அணிகளும் நம் இதயங்களை வென்றன!” என்று கூறியுள்ளார்.
நன்றி: விகடன்

All reactions: