விளையாட்டு

2022ஆம் ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார் மீராபாய் சானு

2022ஆம் ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார் மீராபாய் சானு – BBC News தமிழ்

மீராபாய் சானு 2022ஆம் ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றுள்ளார்.

மக்களின் வாக்குகள் மூலம் அவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான விருதையும் வென்றிருந்தார் மீராபாய் சானு. இதன் மூலம் தொடர்ந்து இரண்டு முறை இந்த விருதினை வென்ற தடகள விராங்கனை என்ற சிறப்பை பெறுகிறார் அவர்.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரைச் சேர்ந்த சானு விறகுக் கட்டை தூக்கி பளு தூக்குதலை கற்றுக் கொண்டவர்.

2020ஆம் ஆண்டு டோக்யோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் சானு. 2022ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இவர் தங்கம் வென்றார். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

விருதைப் பெற்றுக் கொண்ட மீராபாய் சானு, “மீண்டும் இந்த விருதை வழங்கியதற்கு பிபிசிக்கு நன்றி. எனது பயிற்சியாளர், குடும்பம் மற்றும் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.”

“பெண்கள் விளையாட்டில் ஈடுபட்டால் அவர்கள் உடலில் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். இந்த அச்சத்தை நாம் கைவிட வேண்டும்.” என்று தெரிவித்தார்.

மீராபாய் சானுவை தவிர வினேஷ் போகத், சாக்ஷி மாலிக், குத்துச் சண்டை வீராங்கனை நிகத் சரீன் மற்றும் பேட்மின்டன் வீராங்கனை பி. வி. சிந்து ஆகியோரும் இந்த விருதுக்கான பரிந்துரை பட்டியில் இடம் பிடித்திருந்தனர்

இந்த வருடம் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட பிபிசி பாரா ஸ்போர்ட்ஸ்வுமன் ஆஃப் தி இயருக்கான விருதை பவினா படேல் பெற்றார்.

பாரா டேபிள் டென்னிஸ் வீராங்கனையான பவினா 2020ஆம் ஆண்டு டோக்யோவில் நடைபெற்ற கோடைகால பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார் அவர். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் படேல் தங்கம் வென்றார்.

விருது குறித்து பவினா பட்டேல் பேசுகையில், “பெண்களை குறிப்பாக விளையாட்டுத் துறையில் பெண்களை ஊக்குவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இந்த அற்புதமான முயற்சியின் ஒரு அங்கமாக இந்த மதிப்புமிக்க விருதை பெறுவதில் மகிழ்ச்சியாக உணருகிறேன். அதேபோல பிபிசி பாரா விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி, இந்திய விளையாட்டுத் துறையை அனைவரையும் உள்ளட்டக்கியதாக மாற்றுவது பாராட்டிற்குரியது.”

பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது, இந்திய விளையாட்டுத்துறையில் ஆற்றிய பணி மற்றும் இளம் வீரர்களுக்கு உத்வேகமாக திகழ்வதற்காக இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ப்ரீதம் சிவாச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டு பயிற்சியாளர்களை கெளரவிக்கும் வண்ணம் வழங்கப்படும் துரோனாச்சாரியார் விருதை பெற்ற முதல் பெண் ஹாக்கி பயிற்சியாளர் சிவாச் ஆவார்.

இதுகுறித்து பேசிய சிவாச்,”என்னை இந்த விருதுக்காக தேர்வு செய்ததற்காக பிபிசிக்கு நன்றி சொல்கிறேன். கடந்த மூன்று வருடங்களாக சாதனை புரிந்த பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் எனக்கு இந்த விருது கிடைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருது பெண்களுக்கு கொடுக்கப்படுவது மேலும் சிறப்பு வாய்ந்த அம்சம். இம்மாதிரியாக பல விருதுகளை வாங்க இது எங்களை ஊக்கப்படுத்துகிறது,” என்றார்

குத்துச் சண்டை வீராங்கனை நிது கங்காஸ், பிபிசியின் வளர்ந்து வரும் வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் இருமுறை யூத் உலக சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார். குறைந்த எடைப் பிரிவில் 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் அவர் தங்கப்பதக்கம் வென்றார்.

2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் லான் பவுல்ஸ் விளையாட்டில் முதன்முறையாக பதக்கம் வென்ற லல்வி செளபே, ரூபா ராணி டிர்கே, பிங்கி மற்றும் நயன்மோனி சாய்கியா ஆகியோர் அடங்கிய அணிக்கு ‘பிபிசி சேஞ்ச்மேக்கர் ஆஃப் தி இயர்’ விருது வழங்கப்பட்டது.

95 வயது பாக்வானி தேவி மற்றும் 106 வயது ராம்பாய் ஆகியோருக்கு கூட்டாக அவர்களின் சாதனைக்கான விருது வழங்கப்பட்டது. ஃபின்லாந்து, டாம்பரேவில் நடைபெற்ற வேல்ர்ட் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தேவி 100மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர். 35வயதுக்கு மேற்பட்டோருக்கான இந்த போட்டியில் தேவி ஷாட் புட் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றிருந்தார். நேஷனல் ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ராம்பாய் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றவர்.

பிபிசி நியூசின் துணை சிஇஓ மற்றும் செய்தி இயக்குநர் ஜோனத்தன் முன்ரோ, இந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து, பிபிசி இந்திய வீராங்கனை விருதை வென்ற மீராபாய் சானுவிற்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும், “குறிப்பாக இந்த வருடம் பிபிசி பாரா வீராங்கனை விருதை நாம் சேர்த்திருப்பது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்தார்.

பிபிசி நியூஸ் சர்வதேச சேவைகளின் சீனியர் கண்ட்ரோலர் மற்றும் பிபிசி உலக சேவையின் இயக்குநர் லிலியன் லாண்டர்,”இந்த விருதிற்காக பரிந்துரைக்கப்பட்ட அத்தனை பேரும் இந்திய விளையாட்டுத்துறையில் பல மகத்தான வழிகளில் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். அவர்களின் சாதனைகளை கொண்டாடுவதில் நான் பெருமையடைகிறேன். அவர்களின் விளையாட்டில் அவர்கள் மிகுந்த திறமை, எழுச்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தி இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ஒளிமயமான எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்,” என்றார்.

நான்காவது ஆண்டாக
நான்காவது ஆண்டாக இந்த விருது வழங்கும் விழாவை பிபிசி நடத்துகிறது.

சிறந்த நடுவர் குழு 5 வீராங்கனைகளின் பெயர்களை இந்த விருதுக்கான பட்டியலில் தேர்வு செய்தது. அவர்களின் பெயர் பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அந்தப் பட்டியலில் பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக் மற்றும் வினேஷ் போகாட், பேட்மின்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை நிகத் ஜரீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை மக்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீராங்கனைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதிக வாக்குகளைப் பெற்ற வீராங்கனை வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

கடந்த காலங்களில் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி ஆகியோர் பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றுள்ளனர்.

அனைத்து விளையாட்டுத் துறைகளிலும் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் உலகளாவிய சாதனைகளை வெளிப்படுத்துவதும், அவர்களுடைய பிரச்னைகளை, சவால்களை முன்னிலைப்படுத்துவதுமே இந்த நிகழ்வின் நோக்கம்.

பல்வேறு துறைகளில் உலகளாவிய வெற்றியைப் பெற்ற பெண்கள் மீது கவனம் செலுத்துவது பிபிசியின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.

விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்த மற்றும் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய வீராங்கனைகளுக்கும் பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பிபிசி கௌரவப்படுத்தி வருகிறது. தடகள வீராங்கனைகள் பி.டி. உஷா, அஞ்சு பாபி ஜார்ஜ் ஆகியோர் இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளனர்.

பரிந்துரை பட்டியலில் இருந்த வீராங்கனைகள்

மீராபாய் சானு
பளு தூக்குதல் சாம்பியனான சாய்கோம் மீராபாய் சானு 2021ஆம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் விளையாட்டு வரலாற்றில் தனது பெயரைப் பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து 2022இல் உலக பளுதூக்கும் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

2016ஆம் ஆண்டு ரியோ விளையாட்டுப் போட்டிகளில் குறிப்பிட்ட எடையைத் தூக்கத் தவறியதில் இருந்து மீராபாயின் பயணம் நெடுந்தூரம் வந்துள்ளது. கிட்டத்தட்ட அவர் விளையாட்டில் இருந்து விடை பெற்றுவிட்டார். ஆனால், 2017 உலக பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், அவர் தனது திறமையை நிரூபித்தார்.

இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், ஒரு தேநீர் கடை உரிமையாளரின் மகளாகப் பிறந்தவர் மீராபாய். அவர் தனது விளையாட்டு வாழ்க்கையின் ஆரம்பக் கட்டங்களில் அதிகமான நிதி நெருக்கடிகளைச் சந்தித்தார். ஆனால், அனைத்து சோதனைகளையும் சமாளித்த அவர், ஒலிம்பிக் பதக்கம் வென்றார். மீராபாய் சானு 2021ஆம் ஆண்டிற்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button