இந்திரன்75

இந்திரன்75
*
கவிஞர் இந்திரன் Indran Rajendran அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
*
மகாகவி பாரதியின் நூற்றாண்டு விழாவையொட்டி 1980களில் கவிஞர் மீரா தன் அன்னம் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட நவகவிதை வரிசைகளில் ஒன்றுதான் கவிஞர் இந்திரனின் ‘அந்நியன்’. முதல் புத்தகத்திலேயே தன்னுடைய முத்திரையைப் பதித்திருந்தார் . அதில் இடம்பெற்றிருந்த கவிதைகளின் பாடு பொருட்கள் வழக்கமானவை அல்ல.
அதன் பிறகு சிறிது காலம் கழித்து வெளிவந்த நூல் ‘அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்’. கருப்பின மக்களின் கவிதை மொழிபெயர்ப்புகள். இந்த நூலைப் படிக்காத நவீன கவிஞர்களே இல்லை என்ற அளவுக்கு அது புகழ்பெற்றது.
“இயேசுவானவர்
மீண்டும் பூமிக்கு வந்தால் ஒரு கருப்பராக வராமல் இருப்பது நல்லது”
என்ற அந்த ஒற்றை வரி மேற்கோள் காட்டப்படாத இலக்கிய மேடைகளே இல்லை.
“என்னால் சுவாசிக்க இயலவில்லை” என்று கருப்பின மக்கள் இன்றுவரை கதறுவதன் இலக்கியக் குரலாக அந்த ஒற்றை வரி திதழ்ந்து வருகிறது. அதைத் தமிழ் உலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் இந்திரன்.
அந்த நூலில் இடம் பெற்ற மற்றொரு வரி:
“இந்தப் பாடப் புத்தகங்கள் எங்கள் மாணவர்களின் விதைகளை நசுக்குகின்றன”
உலகம் முழுவதும் பரவிய ஆங்கிலக் கல்விமுறை காலனி நாடுகளில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை எப்படி மூளைச் சலவை செய்தது என்பதையும் எப்படிச் செயல்திறன் அற்றவர்களாகவும் சிந்தனையற்றவர்களாகவும் மாற்றியது என்பதையும் உக்கிரமாக உணர்த்தியது.
அப்போது ஒரு சிற்றோடையாகக் கிளம்பியவர் இன்று ஒரு நதியாகப் பிரவாகம் எடுத்து ஓடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.
என் கவிதை மொழியை தீர்மானிப்பதற்கு ‘அறைக்குள் வந்த ஆரம்பிக்க வானம்’ பெரிதும் எனக்கு உதவியது.
இது நான் மட்டும் அல்ல…. பல கவிஞர்களும் ஒப்புக் கொள்ளும் ஓர் உண்மை.
உரைநடையின் மூலம் கவிதையை எழுப்ப முடியும் என்ற நம்பிக்கையை அது உருவாக்கியது.
அவரது கவிதை மொழியும், சொல் முறையும் மகாகவி பாரதி கூறியதைப் போல் ‘சொல் புதிது சுவை புதிது’ என்ற வரையறைக்கு முற்றிலும் பொருத்தமானவை.
அலங்காரமற்ற சொற்கள், இயல்பான படிமங்கள் மூலம் வாழ்வியல் உண்மைகளைக் கவிதை செய்வது எப்படி என்பதை அழகாகவும் எளிமையாகவும் அது சொல்லிக் கொடுத்தது.
‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ மராட்டியத் தலித் கவிதை மொழிபெயர்ப்பாகும். அவர் படித்த ரசித்த பல அயல் மொழிக் கவிதைகளை உடனே மொழிபெயர்த்துத் தருவது இளம் தமிழ் கவிஞர்களுக்குச் செய்து வருகிற பேருதவி ஆகும்.
‘முப்பட்டை நகரம்’ (நகர்மயக் கவிதைகள்)
மேசைமீது செத்த பூனை (எதிர்க் கவிதைகள்) எனத்
தொடர்ந்து தன் கவிதைகளில் புதிய பரிசோதனைகளை செய்துபார்த்துக் கொண்டிருப்பவர் இந்திரன்.

இளம் கவிஞர்களை உற்சாகப்படுத்தி வளர்ப்பதில் அவர் காட்டும் ஈடுபாடு அசாதாரணமான ஒன்றாகும். ஏராளமான இளம் கவிஞர்களுக்கு உரையாடல் மூலமாக நுட்பமான படைப்பாக்க உத்திகளை அவர்
சொல்லிக் கொடுத்திருக்கிறார் . இது அவரது மகத்தான சாதனை.
அவரோடான உரையாடல்கள் நம்மைக் கலை வானத்தில் சஞ்சரிக்கவைப்பவை.
உலகம் முழுதுமான கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலையுலக மேதைகள் அவரது உரையாடலில் மேற்கோளாகத் தலைகாட்டிப்போவார்கள். சில நூற்றாண்டுகளின் பயணத்தை அந்த உரையாடல் நிகழ்த்தி விடும். ஷேக்ஸ்பியரும் வருவார்; மார்க்கோஸூம் வருவார்; கம்பனும் வருவார்; ஜெயகாந்தனும் வருவார்; மைக்கேல் ஏஞ்சேலோவும் வருவார்; மருதுவும் வருவார். கலை, பண்பாடு, அரசியல் எல்லாம் இலக்கியத்தோடு இசைந்தோடும். ஒன்றோடொன்று இணைந்து பயணிக்கும் ஒளிக்கற்றைதான் அவை என்பதை அந்த உரையாடல் உணர்த்தும்.
என் முதல் கவிதை நூலான ‘நடைவண்டி’ யின் இருபத்தைந்தாம் ஆண்டு பதிப்புக்கு அவர் எழுதிய அணிந்ரையை நான் பெற்ற ஓர் இலக்கிய விருதாகவே மதிக்கிறேன்.
கன்னிமாரா நூலக வாசகர் வட்டத்தில் நடைபெற்ற என் ‘எண்ணும் எழுத்தும்’ கவிதை நூல் விமர்சனக் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை என் நெஞ்சில் எப்போதும் நிலைத்திருக்கும் ஒன்றாகும். அவரது உரைகளில் ஓர் உலக இலக்கியக் கண்ணோட்டத்தை நாம் காண முடியும்.
அவரது முன்னுரைகளைத் தொகுத்தாலே தமிழ் நவீன கவிதை அடைந்து வரும் மாற்றங்களையும் பரிணாம வளர்ச்சியையும் நாம் புரிந்து கொள்ள முடியும். இவர் அளவுக்கு இளம் கவிஞர்களோடு தோழமை உணர்வோடு பழகும் மூத்த படைப்பாளிகள் குறைவு. ஏனெனில் இன்னமும் ஒரு இளம் படைப்பாளியின் இதயத்தோடு எழுதி வரும் அவரது ஊக்கம்தான் அதற்கான காரணம். இன்றும் புதிய நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் குறையாமல் எழுதிக் கொண்டே இருப்பவர்.
ஓவியக்கலை, சிற்பக்கலை, திரைப்படம் முதலான கலைத் துறையின் பல்வேறு பக்கங்களையும் ரசித்ததன் விளைவாக அவற்றைப் பற்றிய தன் பார்வைகளை அனுபவக் கட்டுரைகளாக எழுதித் தொடர்ந்து செயல்பட்டு வருபவர்.
‘தமிழ் அழகியல்’ குறித்தான அவருடைய நூல் பரவலான கவனத்திற்கு செல்ல வேண்டிய ஒன்று.
மேற்கத்திய ஓவியங்கள், கலைகள் குறைத்தான பார்வை கொண்ட ஒருவர் தமிழின் தொன்மை மற்றும் அதன் நவீன வளர்ச்சி குறித்த ஆழமான பார்வையோடு ஆய்வுக் கண்ணோட்டத்தோடு வரையறுக்கும் கோட்பாடுகள் ஆய்வுலகமும் படைப்புலகமும் கவனிக்கத் தக்கவையாகும்.
இந்தியத் திரையின் மாபெரும் இயக்குனர் சத்ய ஜித்ரே பற்றி அவர் எழுதிய நூல் திரைப்படக் கலையின் மீதான அவரது தீவிர ரசனைக்கு ஒரு சான்று. அதுமட்டுமல்ல தமிழ்த் திரைப்பட உலகில் அவர் எவ்விதமான படங்களை எதிர்பார்க்கிறாரோ அதை இளம் இயக்குனர்களுக்கு எடுத்துரைக்கும் ஒரு நூல் ஆகும்.
75 வருட வாழ்க்கையில் ஏறக்குறைய ஐம்பது வருடங்கள் கலைத்துறை வாழ்வையே வாழ்ந்திருப்பவர்.
40 -க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிவிட்டார். சிறு பத்திரிக்கை உலகிலும் தன் பங்களிப்பைச் செலுத்தி இருக்கிறார். நுண்கலை குறித்த பார்வைகளை முன்வைத்திருக்கிறார்.
மொழிபெயர்ப்புக்கான சகித்ய அகடமி விருதினைப் பெற்றிருக்கிறார். இன்னுமும் பல விருதுகளுக்குத் தகுதியானவர் இந்திரன்.
அவரைக் கவிஞர் என்பதா ? மொழிபெயர்ப்பாளர் என்பதா? கலை விமர்சகர் என்பதா? ஓவியர் என்பதா? தீராக்காதல் கொண்ட
வாசகர் என்பதா? எந்த ஒன்றிலும் முற்றிலும் அடங்காத ஆளுமை இந்திரன் அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
*
‘அந்நியன்’ நூலிலிருந்து எனக்குப் பிடித்த ஒரு கவிதை
*
சைக்கிள் காதல் / இந்திரன்
என் உடம்பை நேசிப்பது போல்
எந்திரங்களின்
ஒவ்வொரு பகுதியையும் நேசிக்கிறேன்.
சக்கரத்தைக் காட்டிலும்
உன்னதமான ஒரு பூவை
நான் இதுவரையிலும் பார்த்ததில்லை.
சைக்கிளைத் தள்ளிக் கொண்டு
நான் நடந்து செல்கையில்
ஒரு குதிரையை
நீரருந்த அழைத்துச் செல்வதுபோல்
உணர்கிறேன்.
தோலால் செய்த அதன் இருக்கை
தாயின் மடியைக் காட்டிலும்
ஆதரவானது.
திரவமாய் உருகி ஓடும்
ஒரு உலோகச் சிற்பமாய்
சைக்கிள்.
*
சென்ற ஆண்டு டிஸ்கவரி புக் பேலஸ் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்திரன் அவர்களின் கவிதைகள் அனைத்தையும் தொகுத்து முழுத் தொகுதியாக வெளியிட்டது. அவரது கவிதை முகத்தை அறிந்துகொள்ள நல்ல கண்ணாடி அது. அவரது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு ஒன்றும் வந்துள்ளது. அதுவும் இளம் கவிஞர்கள் வாசிக்க வேண்டிய நூல்.
ஒரு முன்னோடிப் படைப்பாளியைக் கொண்டாடுவது என்பது அவரது நூல்களை வாசிப்பதுதும் அவற்றை குறித்து உரையாடுவதும்தான். இன்று அது நிகழ்கிறது.
அவரது நூல்கள் வெளியிடப்படுகின்றன. அவரைக் குறித்து அறிஞர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆவணப் படம் வெளியிடப்படுகிறது. இதுதான் ஒரு கலைஞனைக் கொண்டாடும் முறை. விழா ஏற்பாடு செய்துள்ள நண்பர்கள் பாராட்டுக்குரியவர்கள்
பன்முகத் தன்மை கொண்ட படைப்பாளர் இன்றைய விழா நாயகன் இந்திரன் அவர்கள் பல்லாண்டு நலமாக வாழ்ந்து தமிழ்க் கலை உலகை வளமாக்க என் அன்பான வாழ்த்துக்கள். 💐💕
அன்புடன்,
பிருந்தா சாரதி
