மகாத்மா காந்தி தனது உப்பு யாத்திரையில் தண்டி கடற்கரையை அடைந்து உப்பு சேகரித்த தினம்!

இதே – ஏப்ரல் 6ம் நாள் (1930) மகாத்மா காந்தி தனது உப்பு யாத்திரையில் தண்டி கடற்கரையை அடைந்து உப்பு சேகரித்த தினம்!
1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார்.
இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், குழுமியிருக்கும் மக்களின் அலையோசையை ஒத்த ஆர்ப்பரிப்புகளுக்கு இடையே மூடிய தன் கைவிரல்களைத் திறந்து அந்த வெள்ளை நிற உப்பை ஒரு பிடி எடுத்து அதனை அனைவரும் பார்க்குமாறு தனது கையை மேலே உயர்த்தி காட்டினார். பிறகு அந்த உப்பினை தனது கையிலிருந்த ஒரு சிறிய பையில் சேகரித்துக் கொண்டார்.
இந்திய சுதந்திர போராட்டத்தின் மகத்தான மற்றுமொரு புதிய அத்தியாயம் தொடங்கியது.