தமிழ் மொழியை உயிர்ப்பூட்டிப் புதுப்பித்தவர் ;

சுஜாதாவின் மரணத்தின் போது இறுதி அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு எழுத்தாளர்கள் யாரும் வரவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. தமிழ் இலக்கிய உலகம் ஒரு நன்றி கெட்ட உலகம். பல விதமான மனநோய்க் கூறுகளைக் கொண்ட உலகம். ஒருவேளை சுஜாதா பட்டினி கிடந்து இறந்திருந்தால் எல்லோரும் வந்திருப்பார்கள். ஆனால் அவரோ ஒரு Celebrity . லட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டவர். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் பெங்களுரில் கமல்ஹாசனுடன் ஒரு உணவு விடுதியில் அமர்ந்திருந்த போது ‘ முப்பது பேர் சுற்றி நின்று எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் சாப்பிடவும் முடியவில்லை ; பேசவும் முடியவில்லை ‘ என்று எழுதியவர். இலக்கிய உலகத்திற்கு இது போதாதா ? தமிழ் இலக்கிய உலகம் என்பது ஓர் இருண்ட பகுதி. இங்கே சுஜாதா போன்ற வெளிச்சங்களுக்கே இடம் கிடையாது. இங்கே யாரும் அயல் இலக்கியத்தைப் படிக்க வேண்டாம்(கூடாது) ; உள்ளுர் சமாச்சாரங்களையும் படிக்க வேண்டாம் (கூடாது) ; 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை 60 பக்க சைஸில் ஒரு சிறுகதைத் தொகுப்பு போட்டால் போதும் ; ‘ சுவரில் விரலை ( nail ) அடித்தான் ‘ என்பது போன்ற மொழி பெயர்ப்புகளைப் படித்து ஞான விருத்தி செய்து கொள்ளலாம் ; எல்லாவற்றுக்கும் மேலாக உங்களுடைய பெயர் 100 சக எழுத்தாளர்களைத் தவிர வேறு யாருக்குமே தெரிந்திருக்கக் கூடாது. இந்த வரைமுறைகள் எதிலுமே அகப்படாத சுஜாதாவை இவர்கள் கண்டு கொள்வார்களா ?
இது ஒரு பக்கம் இருக்க , சுஜாதாவுக்கு இதுவரை எந்தவொரு இலக்கியப் பரிசுமே வழங்கப்படவில்லை என்பது மற்றொரு தகவல். (ஒருவேளை , அதற்குப் பழிவாங்குவதற்காகத்தான் பிராமண சங்கப் பரிசை நேரில் சென்று வாங்கிக் கொண்டாரோ ?) ஆனால் சுஜாதாவுக்கு சிறிதும் சம்பந்தமேயில்லாத சினிமா உலகம் அவரை கௌரவித்தது. என்னுடைய ஆசானின் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்ளும் படி எனக்கு நடிகர் பார்த்திபன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்!
சில திரைப்படங்களுக்கு சுஜாதா வசனம் எழுதினார் என்பதால் அவரை ஒரு சினிமாக்காரர் என்று நான் சொல்ல மாட்டேன். 50 ஆண்டுகளாக எழுத்துலகில் அவர் எழுதிக் குவித்தது கணக்கில் அடங்காதது. அதோடு ஒப்பிட்டால் அவருடைய சினிமா வசனம் வெறும் தூசு. ஆனாலும் சினிமாக்காரர்கள் நன்றி பாராட்டினார்கள்.
எத்தனையோ பெரிய மதிப்பீடுகளைப் பற்றியும் , கலாச்சார விழுமியங்களைப் பற்றியும் கதையளந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் நன்றி என்ற அடிப்படையான மனிதப் பண்பு பற்றி சினிமாக்காரர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அவல நிலை!
மேலும் , சுஜாதாவுக்கு மரியாதை செய்த சினிமாத்துறை நண்பர்கள் யாரும் சுஜாதாவை ஏதோ ஒரு சீனியர் வசனகர்த்தா என்று அடையாளப்படுத்தவில்லை. அவர்களுக்கும் கல்லூரிப் பருவத்திலிருந்தே சுஜாதா பள்ளியிலும் , கல்லூரியிலும் கிடைக்காத ஒரு மாற்றுக் கல்வியையும் , மாற்றுக் கலாச்சாரத்தையும் , மாற்று சினிமாவையும் கற்பித்திருக்கிறார். மேற்கத்திய சினிமா பற்றி அவர் எழுதிய விமர்சனங்கள் அனைத்தையும் படித்தால் ஒரு அற்புதமான சினிமா கலைஞன் உருவாக முடியும். இதன் காரணமாகவே அந்தச் சினிமா நண்பர்கள் அனைவரும் அவருக்கு நன்றி பாராட்டினார்கள்.
* * *
எவ்வளவு எழுதினாலும் சுஜாதா பற்றி இன்னும் எதுவுமே எழுதவில்லை என்ற உணர்வே மேலோங்குகிறது. சில இலக்கியவாதிகள் சுஜாதாவின் எந்தெந்த சிறுகதைகள் , நாவல்கள் இலக்கியமாகத் தேறும்; எதெது தேறாது என்று மார்க் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை விட அசட்டுத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது. ஏனென்றால் , சுஜாதா ஒரு எழுத்தாளர் மட்டும் கிடையாது. 50 ஆண்டுகளாக தமிழ் மொழியின் பல போக்குகளை நிர்ணயித்து வந்தவர் ; தமிழ் மொழியை உயிர்ப்பூட்டிப் புதுப்பித்தவர் ; 50 ஆண்டுகளாக தமிழ்ச் சூழலின் கலாச்சார சக்தியாக விளங்கியவர். யோசித்துப் பார்க்கும் போது பாரதிக்குப் பிறகான தமிழ் வாழ்வின் இத்தனை அம்சங்களிலும் இவ்வளவு வீரியமாக பாதிப்பு செலுத்திய கலைஞன் சுஜாதாவைத் தவிர வேறு யாரும் இல்லை என்றே தோன்றுகிறது.
– சாருநிவேதிதா