இலக்கியம்

சுஜாதாவின் பெருந்தன்மை!

சுஜாதாவின் பெருந்தன்மை!

1987 ஜூலை மாதம் விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் மூன்று நாள் பயிற்சி முகாம் தியாகராய.நகர் மீனாட்சி கல்யாண மண்டபத்தில் நடந்தது. முதல்நாள் அமர்வில், முதல் நிகழ்ச்சி எழுத்து எந்திரன் சுஜாதாவுடையது. எல்லோரும் அவரைப் பார்க்கவும் அவருடன் பேசவும் ஆவலாக இருந்தனர். எனக்குள்ளோ வயிற்றில் புளி கரைந்தது. அவர் நிகழ்ச்சி முடிந்து எப்போது கிளம்புவார் என்றே மனம் கிடந்து பதட்டத்தில் அடித்துக்கொண்டது. மனசுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத கலவரப் புயல்.

மிக அழகாகவும் எளிமையாகவும் பத்திரிகையாளன் யார் அவன் தகுதிகள் என்னென்ன என்று குறும்பு கொப்பளிக்கும் விதமாகவும் கேள்வி பதில் பாணியில் பேசினார் சுஜாதா. என்னால்தான் அதனை முழுதாக ரசிக்க முடியவில்லை. அவர் பேசி முடித்துக் கிளம்பிய பிறகுதான் ‘அப்பாடா’ என்றிருந்தது. எனக்கு மட்டும் ஏன் அப்படியொரு பதட்டம்? காரணம் இருக்கவே செய்தது.

1984ம் ஆண்டு நான் கல்லூரியில் படித்தபோது, செய்த விளையாட்டுத்தனமான ஒரு விஷமத்தனம்தான் என் பதட்டத்துக்குக் காரணம். விஷயம் இதுதான். பொதுவாக புதிததாக எழுத வரும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஓர் எண்ணம் உண்டு. அது பிரபல எழுத்தாளர்களின் கதை என்றால் உடனே பத்திரிகையில் வெளியிடுகிறார்கள். புதிய எழுத்தாளர்கள் என்றால் அவர்களது கதைகளைக் குப்பைக் கூடையில் தூக்கிப் போட்டு விடுகிறார்கள் என்பதுதான். எனக்கும் அப்படி ஒரு சந்தேகம் இருக்கவே செய்தது. (ஆனால், உண்மை அதுவல்ல என்பதை பின்னாட்களில் விகடன், குமுதம் இதழ்களில் சிறுகதை தேர்வு செய்யும் பொறுப்பில் இருந்தபோது நான் புரிந்து கொண்டேன்.)

குமுதத்துக்கு நான் ஒரு சிறுகதை அனுப்பியிருந்தேன். அந்தக் கதை பிரசுரத்துக்கு ஏற்கப்படாமல் திரும்பி வந்துவிட்டது. எனக்கு அந்தக் கதை மிகச் சிறப்பானதாகப்பட்டது. அது நிராகரிக்கப்பட்டதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. இதே கதையை ஒரு ஜெயகாந்தனோ சுஜாதாவோ எழுதியிருந்தால் நிச்சயம் பிரசுரமாகியிருக்கும் என்று எனக்குத் தோன்றியது. அப்போதுதான் எனக்கு அந்த போசனை உதித்தது. ஒரு பிரபல எழுத்தாளரின் பெயரில் அந்தக் கதையை மீண்டும் குமுதத்துக்கே அனுப்பி வைத்தால்..?

ஆனால், அது சரியான யோசனையாய்ப் படவில்லை. எழுத்தாளர்களின் கையெழுத்து, பத்திரிகை ஆபீசில் இருப்பவர்களுக்குத் தெரியும். எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். என்ன செய்யலாம்? எனக்குள்ளே இருந்த கிரிமினல் உயிர் கொண்டெழுந்தான். அந்தச் சிறுகதையை ஒரு பிரபல எழுத்தாளர் சொன்னதாக ஒரு துணுக்காக்கி குமுத்த்துக்கு அனுப்ப நினைத்தேன். யார் பெயரில் அனுப்பலாம்? உடனே நினைவுக்கு வந்தவர் எழுத்துப் பிதாமகன் சுஜாதா. அந்தக் கதையை வைத்து இட்டு கட்டி துணுக்குத் தயாரித்தேன். அதனை என் புனைப் பெயரில் அனுப்பிவைத்தேன். அதன் விளைவுகளைப் பற்றிய புரிதல் இல்லாமலேயே. அந்தத் துணுக்கு கீழே…

‘நான் ஏன் ஜெயகாந்தனைப்போல் எழுதவில்லை?

‘நான் இப்போதெல்லாம் அதிகமாக விஞ்ஞானத்தைப் பற்றியே எழுதுகிறேன் என்றும் ‘உங்களால் ஒரு புதுமைப்பித்தன், ஜெயகாந்தனைப்போல் எழுத முடியாதா?’ என்றும் பலர் என்னிடம் கேட்கிறார்கள்.

அந்தச் சாலையின் வழியாக ஒரு விவசாயி தனது மாட்டு வண்டியில் ஒரு மூட்டை அரிசியை ஏற்றிக்கொண்டுச் செல்கிறான். எதிரே வேகமாக வந்த லாரி அந்த மர்ட்டு வண்டியில் மோதிவிட்டு நிற்காமல் வேகமாகச் சென்று விடுகிறது. அரிசி சாலையில் சிதறுகிறது.

சிறிதுநேரத்தில் பலநாட்களாகப் பட்டினி கிடக்கும் நம்ம பிளாட்பாரப் பிச்சைக்காரன் பெரியசாமி அந்த வழியாக வருகிறான். அந்த விபத்தைப் பார்த்துவிட்டு வண்டிக்காரனுக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்று நினைத்து வேகமாக நெருங்குகிறான்.

ஆனால், அந்த அரிசி சமாச்சாரம் அவன் மனதில் சலனத்தை ஏற்படுத்துகிறது. அரிசியை மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு ஓடத் தொடங்குகின்றான். –இப்படியும் என்னால் எழுத முடியும்.

ஆனால், இதுபோல் எழுதிக் கொண்டிருந்தால் நாளைய தலைமுறைக்காரன் ‘சுதந்திரம் வாங்கி ஐம்பது ஆண்டுக்குப் பிறகும் நமது முன்னோர்கள் பிச்சைக்காரர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்று கேவலமாக நினைத்துவிடுவான். அதனால்தான் நான் நமது இன்றைய வளர்ந்த நிலையையும் நாளைய வளரும் நிலையைப் பற்றியும் எழுதுகிறேன்.’

-விருத்தாசலம் கலைக்கல்லூரி இயற்பியல் மன்றத் துவக்க விழாவில் : சுஜாதா’

துணுக்கை எழுதி முடித்துவிட்டு விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரியில் சுஜாதா அவ்வாறு பேசியதாக்க் குறிப்பிட்டு, குமுதத்துக்கு அனுப்பிவிட்டேன். அடுத்த வாரமே குமுதத்தில் அந்தத் துணுக்கு வெளியானது.

இப்போது யோசிக்கும்போது, அது மிகப்பெரிய சிறுபிள்ளைத்தனம் என்று புரிகிறது. அந்தக் கதைக்காக அந்தத் துணுக்குப் பிரசுரிக்கப்படவில்லை. அதில் சுஜாதாவின் கருத்தாக நான் எழுதியிருந்த அந்த கமெண்ட்டில் ஒரு வம்பு இருந்தது. அதனால்தான் வம்பு என்றதும் குமுதம் அதனைப் பிரசுரம் செய்தது. குமுதம் வெளிவந்த அன்று மதியம், விருத்தாசலம் குமுதம் ஏஜெண்டான செல்லம் ஐயரின் கடைக்குச் சென்றபோது,, அவர் என்னிடம் சூடாக, ‘என்னப்பா எழுதினே குமுதத்தில்? எனக்கு டெலிகிராம் கொடுத்து உன்னைப் பற்றி குமுதம் ஆபீசிலிருந்து கேட்டாங்க… இங்க எல்லோரும் காலேஜ் பசங்கதான் எழுதறாங்கன்னு பதில் அனுப்பிட்டேன்…’ என்றார். அதன்பிறகு அடுத்து என்ன ஆகுமோ என்று வயிற்றுக்குள் திகில் பந்துகள் துள்ளிக் குதித்துக்கொண்டே இருந்தன.

அடுத்த இதழ் குமுதத்தில் சுஜாதாவின் மறுப்பு வெளிவந்திருந்தது. ‘குமுதம் 22.11.1984 இதழில் 65‘ம் பக்கத்தில் ‘நான் ஏன் ஜெயகாந்தனைப்போல் எழுதவில்லை?’ என்ற தலைப்பில் பிரசுரித்திருந்தத்தைக் கண்டு திடுக்கிட்டேன். விருத்தாசலம் பக்கம் தலைவைத்துக் கூட படுத்ததில்லை நான். அங்கே கலைக்கல்லூரி இயற்பியல் மன்றத்திலோ துவக்க விழாவிலோ எப்படிப் பேச முடியும்? இம்மாதிரி விஷமச் செய்திகளைப் பிரசுரிக்கும்முன் என்னிடம் ஒரு வார்த்தை கேட்டுப் பிரசுரிக்கலாம். அவசியமில்லாத controversy-களைத் தவிர்க்கலாம்’

-பெங்களூர்-13, சுஜாதா’

இந்தத் துணுக்குக்குப் பிறகு என் புனைப்பெயரில் எழுதுவதை நிறுத்திவிட்டேன். ஆனால், சுஜாதாவுக்கு என் மீது கோபம் இருக்கும் என்ற உறுத்தல் மனதில் இருந்துகொண்டே இருந்தது. அந்தத் துணுக்கைப் பத்திரிகையாளர்கள் யாராவது பார்த்திருந்தால் மற்ற பத்திரிகைகளிலும் என் படைப்புகள் வெளிவர இயலாமல் போவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு என்பதால்தான் அந்த முடிவு. விகடன் மூன்றுநாள் முகாமுக்கு சுஜாதா வந்திருந்தபோதும் என் பதட்டத்துக்குக் காரணம் அதுதான்.

சென்னையில் விகடனில் வேலைக்குச் சேர்ந்தபிறகு பலமுறை சுஜாதாவைச் சந்தித்திருக்கிறேன். என்றாலும் அந்தச் சந்திப்பின் போதெல்லாம் நான் பதற்றமாக உணர்ந்ததே அதிகம்.

ஒருநாள் சுஜாதாவிடம் அந்தத் துணுக்கை எழுதியவன் நான்தான் என்று நேரில் சொல்லி வருத்தம் தெரிவித்து விடவேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவ்வப்போது மனதில் ஓடும். ஆனால், அதற்கான தைரியம் இல்லாததால் அந்த எண்ணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன்.

குமுதத்தில் பணியில் இருந்தபோதுதான் சுஜாதாவை அதிகம் சந்திக்க முடிந்தது. அவரது இயல்பான தோழமை எனக்குப் புரிந்தது. பொதுவாக யார் மனதையும் துன்புறுத்தி அறியாதவர் சுஜாதா. மனிதர் ஜாலியாகக் கலாய்ப்பார். மற்றபடி யாருக்கும் எந்தவித உறுத்தலும் ஏற்படாதவாறு, பேசக் கூடியவர். இதனை சில அனுபவங்கள் மூலம் நான் நேரில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், அவற்றை இங்கு எழுத முடியாது. அவை இங்கு தேவையும் இல்லை.

இருந்தாலும் அவருடனான சில சம்பவங்கள். ஒரு நாள் குமுதம் அலுவலகத்துக்கு வந்து அவர் ஆசிரியர் குழுவினரைச் சந்தித்தார். அந்த வாரம் நான் எழுதியிருந்த கதையைப் பற்றிக் கூறியவர், ‘இடுப்பில் வேட்டி கட்டலாம். கைக்குட்டையைக் கையிலதான் வெச்சிக்கணும். ஒரு கைக்குட்டையை வேட்டியாகக் கட்டக் கூடாது…’ என்று சிரித்துக் கொண்டே கூறினார். அதாவது, அது ஒரு சிறிய கதைக்கரு. அதை வைத்துக்கொண்டு நான் ஐந்து பக்கக் கதையாய் இழுத்திருந்தேன். அதைத்தான் அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

அவரிடம் உரையாடும்போது ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடும். ஒருமுறை குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன், மறைந்த கிருஷ்ணா டாவின்சி, ரஞ்சன், மணிகண்டன், நான் எல்லோரும் சுஜாதாவை அவரது இல்லத்தில் சந்தித்தோம். நிறைய, நிறைய பேசினார். அரைமணிநேரச் சந்திப்புக்குப் பிறகு எங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு புத்தகம் அன்பளித்தார். அவையெல்லாம் உலக இலக்கியங்கள் அல்ல. அதேநேரம் அவர் படிக்க வேண்டும் என்பதற்காக புதிய புதிய படைப்பாளிகள் எல்லாம் தாங்கள் எழுதிய புத்தகங்களை அவருக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அந்தப் புத்தகங்களைத்தான் தன்னைச் சந்திக்க வரும் நண்பர்களுக்கு அவர் அன்பளிப்பார். அந்த வகையில் எங்களிடமும் அவர் அந்தப் புத்தகங்களைக் கொடுத்தார்.

நாங்கள் கிளம்பும்போது, அவர் கூறினார், ‘நீங்க போன பிறகு நான் பின்னாடியே வந்து பார்ப்பேன். நான் உங்கக்கிட்டே கொடுத்த புத்தகம் ஏதாவது வழியில் கிடந்துதுன்னா ஆபீஸ்க்கே வந்து உங்களை பெண்டு கழட்டுவேன்…’ – சிரிக்காமல் சொன்னார் அவர். நாங்கள் அவரது நகைச்சுச்சுவையில் வயிறு குலுங்கச் சிரித்தோம். அதுதான் சுஜாதா.

ஒருநாள் துணிந்துவிட்டேன். இன்று அவரிடம் அந்தத் துணுக்கைப் பற்றி எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று முடிவு கட்டி அவருக்கு போன் செய்தேன். “சார்… உங்களைப் பார்க்கணும்…” என்றேன்.

”என்ன விஷயம்யா?” என்றார்.

“ரொம்ப நாளா மனசுக்குள்ளே கிடந்து உறுத்திக்கிட்டிருக்கிற விஷயம். அதைச் சொல்லி உங்கக்கிட்டே மன்னிப்பு கேட்கணும்…” என்றேன்.

“பரவாயில்லே… போன்லேயே சொல்லுங்க…” என்றார்.

நான் ஏகப்பட்ட தயக்கங்களுக்குப் பிறகு, திக்கித் திணறி விஷயத்தைச் சொல்லி முடித்தேன். எதிர்முனையில் அவர் சூடாவார் என்று இனம்புரியாத திகிலுடன் எதிர்பார்ர்த்தேன்.

ஆனால், அவரிடமிருந்து மென்மையாக ஒரு பதில் வந்தது. “அப்படியா? அப்படி எனக்கு எதுவும் ஞாபகமில்லையே…” என்று கூறிவிட்டு, தொடர்பைத் துண்டித்தார். அவரது இந்தப் பதிலால் பல்லாண்டுகளாக மனதை அறுத்துக் கொண்டிருந்த ஒரு முள் கழன்று காலுக்குக் கீழே விழுந்ததாய் ஓர் உணர்வு. மனசு லேசானது. என்றாலும் எனக்கு இன்னும் அந்தச் சந்தேகம் உண்டு.

சுஜாதாவின் நினைவுச் சக்தி அபாரமானது. எனக்கு எதுவும் ஞாபகமில்லையே என்று அவர் சொன்னதில் எனக்கு இன்று வரை முழு நம்பிக்கை இல்லை. உண்மையிலேயே மறந்துதான் போனாரா? அல்லது, இவன் பல வருடமாக ஒரு விஷயத்தை மனதில் வைத்துப் புழுங்கிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து இவனை விடுவிக்க வேண்டும் என்று அப்படி ஒரு பொய்யைச் சொன்னாரா?

இரண்டாவதுதான் சரியாய் இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், அதுதான் சுஜாதா. அவர் யார் மனதையும் துன்புறுத்தி அறியாதவர். யாருக்கும் எந்தவித உறுத்தலும் ஏற்படாதவாறு, பேசக் கூடிய பண்பாளர்!

பெ. கருணாகரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button