நரசிம்ம பாரதி மதுரையின் மைந்தர்.

சிவாஜி எனும் மாபெரும் கலைஞனைத் தந்த படம் ‘பாரசக்தி’ (1952). அந்தப் படத்தை விஞ்சும் முயற்சியாக அடுத்த வருடமே கலைஞர்-சிவாஜி கூட்டணியில் வெளியான மற்றொரு திராவிட சினிமா ‘திரும்பிப்பார்’(1953). புராணக் கதையான ‘அகலிகை’யைத் தழுவி, அதைச் சமகாலத்தின் சமூக, அரசியல் நையாண்டிக் கதையாக்கினார் கலைஞர். ‘பராசக்தி’யில் கதையின் நாயகனாக நடித்த சிவாஜி, ‘திரும்பிப்பார்’ படத்தில் வில்லனாக நடித்தார்.
வில்லன் என்றால் மிக மோசமான, முழுமையான வில்லன். பெண் பித்தர் கதாபாத்திரம். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் சிவாஜியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் ஒருவர். அவர் அந்தப் படத்தின் கதாநாயகன் பி.வி. நரசிம்ம பாரதி. நாயகன் என்றால் ‘பொன்முடி’, ‘என் தங்கை’, ‘மாப்பிள்ளை’, ‘ மதன மோகினி’ என வரிசையாக வெற்றிகளைக் கொடுத்துவந்த நாயகன். மார்டன் தியேட்டர் அதிபர் டி.ஆர். சுந்தரத்துக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். எல்லீஸ் ஆர். டங்கன் விரும்பித் தேர்ந்தெடுத்த ஹீரோ.
நானொரு சிங்கம்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘எதிர்பாராத முத்தம்’ குறுங்காவியத்தை நாடகமாக நடத்திக்கொண்டிருந்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். பாரதிதாசனுடன் நல்ல நட்புகொண்டிருந்த மார்டன் தியேட்டர் சுந்தரம் அதைப் படமாகத் தயாரிக்க விரும்பினார். பாரதிதாசனே கதை, வசனம் எழுதிக் கொடுத்தாலும் கதைக்கு மட்டும் பெயர் போட்டால் போதும் என்று கூறிவிட்டார். இயக்குநராக எல்லீஸ் ஆர். டங்கனை அமர்த்தினார் சுந்தரம். திரைக்கதையைப் படித்த டங்கன், தனக்கு அழகான கதாநாயகன் தேவை என்றார். எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.வி. நரசிம்மபாரதி உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான நடிகர்களை ஸ்டூடியோவில் திரட்டி வரிசையாக நிற்கவைத்தார் சுந்தரம். டங்கன் ஒவ்வொருவரையும் கூர்ந்து நோட்டமிட்டபடியே நரசிம்ம பாரதியின் அருகில் வந்து நின்றார். நரசிம்ம பாரதியைப் பார்த்து “யார் நீ?” என்றார் ஆங்கிலத்தில். அதற்கு “நானொரு சிங்கம்” என்று கம்பீரமாக ஆங்கிலத்தில் பதில் சொன்னார் நரசிம்ம பாரதி. “சிங்கத்தால் காதல் வசனம் பேச முடியுமா?” என்று டங்கன் கேட்க, “காதல் வசனம் பேசும்போது நான் ஜோடியைப் பிரியாத பொன்மான்” என்றார் நரசிம்ம பாரதி. “இவர்தான் என் ஹீரோ” என்றார் டங்கன்.
‘பொன்முடி’யின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்தது. சேலம் மார்டன் தியேட்டர் ஸ்டுடியோவில் வண்டி வண்டியாக மணலைக் கொட்டி பிரம்மாண்ட கடற்கரை செட்டை உருவாக்கினார் தயாரிப்பாளர் சுந்தரம். அதில் நாயகன் நரசிம்ம பாரதி, நாயகி மாதூரி தேவி இருவரும் மணலில் ஓய்வாகப் படுத்திருந்தபடியே டூயட் பாடி காதல் செய்யும் பாடல் காட்சியை நெருக்கமாகப் படமாக்கினார் டங்கன். படம் வெளியாகி பெரும் பரபரப்பையும் பதைபதைப்பையும் உருவாக்கியது. “ஒரு வெள்ளைக்கார இயக்குநர், மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ளதுபோல காதல் காட்சிகளைப் படமாக்கி தமிழ்க் கலாச்சாரத்தைக் கெடுக்கிறார்” என்று கண்டனக் குரல்கள் எழுந்தன. பல பத்திரிகைகள் காதலர்களின் நெருக்கத்தைப் படமாக்கிய விதம் ‘அபசாரம்’ எனக் கண்டித்தன. ஆனால் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. “நரசிம்ம பாரதியும் மாதூரி தேவியும் நிஜக் காதலர்கள் போலவே நடித்திருக்கிறார்கள்” என்ற பாராட்டு மழையும் கண்டனத்துக்கு நடுவே கொட்டியது. நரசிம்ம பாரதி மாதுரிதேவியை இணைத்துக் கிசுகிசுக்களும் கிளம்பின. படத்தின் நாயகன் நரசிம்ம பாரதி பெண்கள் விரும்பும் நடிகராக மாறினார்.
நடிகர் திலகத்துடன் மட்டுமல்ல எம்.ஜி.ஆர்., கலைஞர், என்.டி.ராமாராவ் ஆகிய மூன்று முதல்வர்களோடும் கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரோடும், மாதுரிதேவி, ஜமுனா, பண்டரிபாய் போன்ற அன்றைய முன்னணிக் கதாநாயகிகளுடன் நடித்துப் புகழ்பெற்ற நரசிம்ம பாரதி மதுரையின் மைந்தர். 9 படங்களில் கதாநாயகனாகவும் 15 படங்களில் இணை, துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தாலும் மறக்கப்பட்ட நடிகர்களில் ஒருவர்.
-ஆர்.சி.ஜெயந்தன்
நன்றி: இந்து தமிழ் திசை