இலக்கியம்

ரா.பி. சேதுப்பிள்ளை

ரா.பி. சேதுப்பிள்ளை (மார்ச் 2, 1896 – ஏப்ரல் 25, 1961) தமிழறிஞர், எழுத்தாளர், வழக்கறிஞர், மேடைப்பேச்சாளர், சொற்பொழிவாளர். சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் தமிழ் நூலின் ஆசிரியர்.

ரா.பி. சேதுப்பிள்ளை (ராஜவல்லிபுரம். பி. சேதுப்பிள்ளை) திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம் இராஜவல்லிபுரத்தில் மார்ச் 2, 1896-ல் பிறவிப்பெருமாள் பிள்ளை – சொர்ணம்மாள் தம்பதியினருக்கு பதினோராவது குழந்தையாகப் பிறந்தார். உள்ளூர்த் திண்ணைப் பள்ளியில் தமிழ் நீதி நூல்களைக் கற்றார். இராஜவல்லிபுரம் செப்பறைத் திருமடத் தலைவர் அருணாசல தேசிகரிடம் மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைக் கற்றார். தொடக்கக் கல்வியைப் பாளையங்கோட்டை தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், இடைநிலை வகுப்பை திருநெல்வேலி இந்துக் கல்லூரியிலும், இளங்கலை படிப்பை சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலும் படித்தார். பின்னர் இளங்கலை சட்டம் படித்தார். உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் சுப்பிரமணியம், இந்துக் கல்லூரித் தமிழாசிரியர் சிவராமன் ஆகியோர் சேதுப்பிள்ளையின் தமிழார்வத்தை வளர்த்தவர்கள்.

இளங்கலைப் படிப்பை முடித்தவுடன் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பணியிலிருந்துகொண்டே சட்டப்படிப்பு முடித்த சேதுப்பிள்ளை சென்னையில் நீதிக்கட்சி பிரமுகர்களில் ஒருவரான முத்தையா முதலியாரிடம் வழக்கறிஞர் தொழில் பயின்றார். 1923 முதல் திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிறிது காலம் அரசியலில் ஈடுபட்டிருந்த சேதுப்பிள்ளை 1926 முதல் 1928 வரையிலும் 1928 முதல் 1930 வரையிலும் திருநெல்வேலியின் நகர்மன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டார். திருநெல்வேலி நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கா.சுப்ரமணிய பிள்ளையின் அழைப்பின் பேரில் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த் துறையில் விரிவுரையாளராக சுவாமி விபுலானந்தர் சோமசுந்தர பாரதியார் ஆகிய புலவர்களின் தலைமையில் ஆறு ஆண்டுகள் (1930-1936) பணிபுரிந்தார். 1936 முதல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றினார். எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்து வந்த தமிழ்ப் பேரகராதிப் பணியில் சேதுப்பிள்ளையும் பங்காற்றியுள்ளார். எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஓய்வுக்குப்பின் சேதுப்பிள்ளை தமிழ்த்துறைத் தலைவராகி (1946-1951) பேரகராதி தொகுப்புப் பணியை ஏற்றார்.

மனைவி ஆழ்வார் ஜானகி. அவர்களுக்குக் குழந்தைகளில்லை. ரா.பி.சேதுப்பிள்ளை செல்வ வளம் மிக்க வாழ்க்கையை வாழ்ந்தவர். தன் மறைவுக்குப்பின் உடைமைகளை அறக்கட்டளைகளுக்கு அளித்தார். சென்னை காந்திநகரில் இருந்த இல்லம், கண்டியப்பேரி என்னும் ஊரிலிருந்த நிலங்கள் ஆகியவற்றை அறக்கட்டளைக்கு வழங்கினார். ராஜவல்லிபுரத்தில் இருந்த நிலங்களையும் வீட்டையும் ஊராட்சிமன்றத்திற்கு வழங்கினார். ரா.பி.சேதுப்பிள்ளை அறக்கட்டளைக்கு அறங்காவலராக நீதிபதி மகாராஜன் நியமிக்கப்பட்டார்.

சேதுப் பிள்ளை இளமையிலேயே சொற்பொழிவாற்றும் திறன் கொண்டிருந்தார். நெல்லையில் மாணவர் மன்றம் என்னும் அமைப்பை வீரபத்ர பிள்ளை என்பவர் நடத்திவந்தார். அவருடைய கோரிக்கைக்கு ஏற்ப சேதுப்பிள்ளை திருக்குறள் பற்றி ஒரு தொடர் சொற்பொழிவை ஆற்றினார். தொடர்ந்து அங்கே வாரந்தோறும் தமிழிலக்கியங்கள் பற்றி சொற்பொழிவுகளை ஆற்றினார்.

1921-ல் திருநெல்வேலியில் டி.கே.சிதம்பரநாத முதலியார் கம்பன் கழகம் அமைப்பை தொடங்கினார். அங்கே கம்பராமாயண உரைகள் நடைபெற்றன. அவற்றை கேட்டும்கூட சேதுப்பிள்ளையின் உள்ளம் அதில் ஈடுபாடு கொள்ளவில்லை. சுப்பையா முதலியார் என்பவர் கம்பனைப் பற்றி பேசும்போது ‘வெள்ளெருக்கஞ்ச் சடைமுடியான், வெற்பெடுத்த திருமேனி…’ என தொடங்கும் பாடலை கேட்டபின் கம்பராமாயணம் மீது ஆர்வம் கொண்டார். சுப்பையா பிள்ளையிடம் கம்பன் கவிநயத்தை பாடம் கேட்டபின் கம்பராமாயணச் சொற்பொழிவுகள் ஆற்றத்தொடங்கினார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது சிதம்பரம் ஆலயத்தில் பன்னிரு திருமுறைகளைப் பற்றி புகழ்பெற்ற தொடர் சொற்பொழிவுகளை ஆற்றினார். 1955-ல் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ரா.பி.சேதுப்பிள்ளை பேசிய உரை புகழ்பெற்ற ஒன்று.

சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் மூன்றாண்டுகள் கம்பராமாயணச் சொற்பொழிவு ஆற்றினார். அச்சொற்பொழிவின் தாக்கத்தால் சென்னை மாநகரில் கம்பர் கழகம் நிறுவப்பட்டது. சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் சிலப்பதிகார வகுப்பைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் நடத்தினார். தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் ஐந்தாண்டுகள் (வாரம் ஒருநாள்) திருக்குறள் விளக்க சொற்பொழிவாற்றினார். கந்தகோட்டத்து மண்டபத்தில் ஐந்தாண்டுகள் கந்தபுராண விரிவுரை நிகழ்த்தினார்.

தமிழின் மேடையுரையின் முன்னோடியான ஞானியார் அடிகள், பெரும்பேச்சாளர்களான திரு. வி. கல்யாணசுந்தரனார், மறைமலை அடிகள் போன்றவர்களின் நீட்சியே ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் முதலியவர்கள்

ரா.பி. சேதுப்பிள்ளை முதன்மையாக இலக்கிய ஆய்வு, சொல்லாய்வு ஆகியவற்றில் ஈடுபட்டவர். தமிழில் மறந்து விட்ட பிறசொற்களை விலக்குவது, தமிழின் தூய சொற்களை புழக்கத்திற்குக் கொண்டு வருவது, தமிழில் புதிய கலைச் சொற்களை உருவாக்குவது ஆகிய பணிகளின் முன்னோடி, வழிகாட்டியான மறைமலை அடிகளை பின்பற்றி பரிதிமாற்கலைஞர், ரா. பி. சேதுப்பிள்ளை, திரு.வி. கல்யாணசுந்தரனார் போன்றவர்கள் செயல்பட்டார்கள். சேதுப்பிள்ளையின் முயற்சியினால் திராவிடப் பொதுச்சொற்கள், திராவிடப் பொதுப்பழமொழிகள் ஆகிய இரு நூல்களை சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

சேதுப்பிள்ளையின் முதல் கட்டுரை நூல் ’திருவள்ளுவர் நூல் நயம்’. சேதுப்பிள்ளை தனது ஆராய்ச்சி அனுபவங்களைக் கொண்டு எழுதிய உரைநடை நூல் “தமிழகம் ஊரும் பேரும்”.

ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பம் நூல் மலேசிய அரசாங்கத்தால் தமிழ் மொழி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் மொழி இலக்கணத்துறையில் ஒரு பாட நூலாக சேர்க்கப்பட்டிருந்தது (1990 – 1998).

ரா.பி. சேதுப்பிள்ளை பதினான்கு கட்டுரை நூல்கள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள் உட்பட 21 நூல்கள் எழுதியுள்ளார். நான்கு நூல்களை பதிப்பித்துள்ளார்.

சேதுப்பிள்ளையின் நூல்களுள் பல தமிழக வானொலி நிலையங்களிலும் இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கியச் சொற்பொழிவுகளின் தொகுப்புக்களாகவும் அமைந்தவை. எனவே உரைநடை மேடைப் பேச்சின் இயல்பினில் அமைந்ததாகவே நூல்கள் இருக்கும்.செய்யுளுக்கு என்றே கருதப்பட்ட அடுக்குமொழி, எதுகை, மோனை, இலக்கியத் தொடர் ஆகியவற்றை உரைநடையிலும் கொண்டுவந்தவர். தருமபுர ஆதீனத்தால் சொல்லின் செல்வர் என்றும், சுத்தானந்த பாரதியால் ‘செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை’ என்றும் போற்றப்பட்டார்.

ரா.பி.சேதுப்பிள்ளை டி.கே.சிதம்பரநாத முதலியாருக்கு அணுக்கமானவர். அ.சீனிவாசராகவன், நீதிபதி மகாராஜன், மீ.ப.சோமு போன்றவர்களுக்கு அணுக்கமானவராக இருந்தார்.

சேதுப்பிள்ளையின் நூல்கள் 2008-ல் நாட்டுடமையாக்கப்பட்டன

thanks https://tamil.wiki/wiki

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button