உலகக் காட்டுயிர் நாள்

உலகக் காட்டுயிர் நாள்
உலகில் மனிதர்கள் மட்டுமே தனித்து வாழ்ந்து விட முடியுமா? இயற்கை படைத்த பிற உயிரினங்களோடு சேர்ந்த வாழ்வதுதான் இறைவன் படைத்த நீதி. காடுகளும், வனவிலங்குகளும் இல்லாத பூமியில் மனிதர்களும் அருகித்தான் போவார்கள். காடுகளில் தாவரங்கள் மட்டுமின்றி பல்வேறு உயிரினங்கள் செழிப்பாகவும் சமநிலையுடனும் இருந்தால்தான் இயற்கை வளமாக இருக்கும். அதன்மூலம்தான் நாம் வாழும் இந்தப் பூவுலகும் ஆரோக்கியமாக இருக்கும். ஆக காடுகளையும், காட்டுயிர்களையும் பாதுகாக்கும் கரிசனத்தோடு உலகெங்கும் காட்டுயிர் பாதுகாப்பு நாளாக இன்று கடைபிடிக்கப்படுகிறது.
அது ஒரு பக்கம் இருக்கட்டும், சூழலியலாளரான தியோடர் பாஸ்கரன் சுற்றுசூழல் மாசடைவதற்காக மட்டும் கவலைப்படாமல் சுற்றுசூழல் சார்ந்த தமிழும் வளராமல் தேங்கியே நிற்கிறது என்ற கோணத்தில் பல பிரச்சனைகளை அலசும் இவரைப்பற்றியோ இவரின் படைப்புகளையோ இப்போது எந்த ஊடகமும் கண்டு கொள்வதில்லை என்பதுக் கவலைக்குரிய விஷயம்தான் . ஆம்.. இன்னமும் தமிழ்ச்சூழலில் சூழலியல் சார்ந்த வாதங்கள் தமிழில் நடைபெறாமல் ஆங்கிலத்திலேயே நடைபெறுவதை காரணம் காட்டி அதனால் மட்டுமே சூழலியல் (Environmental) மக்களிடையே பரவலாக அறியபடாமல் அது மேட்டுகுடிக்கானது என்ற மாயை நிலவுகிறது. இந்தக் கூற்றை சில பத்தாண்டுகளுக்கு முன்பே தியோடர் முன் வைத்து இருந்தாலும் நிலைமை இன்னமும் அப்படியே தான் இருக்கிறது என்பது வருத்தப்பட வேண்டிய விசயமே.
ஆங்கிலவழிப் பள்ளி ஒன்றில் அவருக்கு நேர்ந்த அனுபவத்தை உதாரணமாக முன்வைக்கிறார். காட்டுயிரிகள் சார்ந்த வினாடிவினா நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராக கலந்து கொண்ட தியோடர் அங்கு கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருந்தது என்றும் வேங்கைகளும் யானைகளும் என்னவென்றே தெரியாத நிலத்தில் இருந்து வந்த மொழியில் அவற்றைப்பற்றி நடத்தப்படும் வினாடிவினா கேள்விக்குறியானது என்றும் கூறுகிறார். இதனால் காட்டுயிரிகள் சார்ந்த தமிழ் வழக்கு மெல்ல அழியும். அதேசமயம் அத்தனை காட்டுயிர்களுக்குமான தமிழ்ப்பெயர் இன்னமும் கண்டறியப்படவில்லை அதற்கான முனைப்பை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
யானைக்கு பத்துக்கும் மேற்பட்ட பெயர்கள் தமிழில் இருக்கிறது ஆனால் ஒற்றை வார்த்தையை மட்டுமே ஆங்கிலம் கற்றுத் தருகிறது. யானையின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒரு பெயரைச் சூட்டி அழகு பார்க்கிறது தமிழ். இவை வழக்கற்றுப் போகும் போது மொத்தமாக மறைந்து மறக்கபட்டுப் போகும் அபாயம் இருக்கிறது என்பதையும் பதிவு செய்கிறார்.
எப்படி அருவியானது water falls என்ற ஆங்கில தமிழாக்கத்தின் மூலம் நீர்வீழ்ச்சியானதோ அப்படி. யானை, வேழம், களிறு, பிடி, களபம், மாதங்கம், கைம்மா, உம்பர், வாரணம், அஞ்சனாவதி, அத்தி, அத்தினி, அரசுவா, அல்லியன், அறுபடை, ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல் விலங்கு இவை அத்தனையும் யானைக்கான பிறபெயர்கள் இன்னமும் அதிகமான பெயர்களைக் கூட சங்கத் தமிழ் பதிவு செய்துள்ளது என்பதை ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
நமது காடும் காட்டுயிரிகளும் எப்படி வேட்டையாடப்பட்டன பட்டுக்கொண்டுள்ளன என்பதை மிக வருத்ததுடனும் அதே சமயம் வீரியத்துடனும் கூறும் இவர் போன்ற எழுத்துக்களுக்கும் ஒரு நினைவூட்டல் தினம் கொண்டாட வேண்டிய சூழலில்தான் இருக்கிறோம்.