காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள்

கவிஞர் வைரமுத்து கருத்தால் வேறுபட்டிருந்தாலும் உள்ளத்தால் கண்ணதாசனைப்போல் ஒன்றுபட்டவர் என்பதை அவரது கவிதை ஒன்று புலப்படுத்துகிறது. எம்.ஜி.ஆருக்காக அவர் எழுதிய காவியத் தலைவனுக்குக் கடைசி வரிகள் என்ற இரங்கற்பாவில் புரட்சித்தலைவரின் உன்னத தன்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றார்.
“ஒரு பாடகர் ஒரு மேடையில் உங்கள் பழைய பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார். இரண்டு மணி நேரம் கரைந்து போன நீங்கள் இப்போது என் கைவசத்தில் இருப்பது இது மட்டும் தான் என்று உங்கள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைக் கழற்றி அந்தப் பாடகருக்குப் பரிசளிக்கிறீர்கள் ; அது உங்கள் ஈகைக்குச் சாட்சி.
நாற்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்து போன உங்கள் இரண்டாவது மனைவியின் இல்லம் சென்றபோது படுக்கையறையின் கட்டிலைப் பார்த்துக் குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறீர்கள் ; அது உங்கள் ஈரத்திற்குச் சாட்சி.
தி.மு.க மாநாடுகளில் மாநாடு முடிந்ததும் பந்தலுக்கடியிலேயே படுத்துக்கிடக்கும் வெளியூர் மக்களுக்கு அவர்களே அறியாமல் அதிகாலைச் சிற்றுண்டிக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போவீர்களே ! அது உங்கள் மனிதாபிமானத்துக்குச் சாட்சி.
பொதுக் கூட்டங்கள் முடித்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வைகை அணைக்கு வந்து பொன்னாங்கண்ணிக் கீரை இருந்தால் சாப்பிடுவேன் என்று நீங்கள் நிபந்தனை விதிக்க, ஆளுக்கொரு திசையில் அதிகாரிகள் பறக்க, பொன்னாங்கண்ணிக் கீரை தயாராகும் வரை சாப்பிடாமல் இருந்தீர்களாமே ! அது உங்கள் உறுதிக்குச் சாட்சி.
தொலைபேசி இணைப்பகத்திலிருந்த உங்கள் ரசிகர் ஒருவர் உங்கள் குரல் கேட்க ஆசைப்பட்டு இரவு பதினொரு மணிக்கு உங்கள் வீட்டுத் தொலைபேசி சுழற்றப்படுகிற சத்தம் கேட்டு ஆசையாய் எடுத்துக் கேட்க’டொக்’என்ற அந்தச் சின்ன சத்தத்திலேயே தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்பது உணர்ந்து கொண்டு “யாராயிருந்தாலும் தயவு செய்து போனை வையுங்கள்” என்று உடனே உத்தரவிட்டீர்களாமே ! அது உங்கள் கூர்மைக்குச் சாட்சி.
வெளிநாட்டில் கொடுத்த பணத்தை பி.சுசீலா தமிழ்நாட்டில் திருப்பித் தரவந்தபோது “ஏன் என்னுடைய உறவை முறித்துக் கொள்ளப் பார்கிறீர்களா”? என்று உரிமையோடு மறுத்து விட்டீர்களாமே. அது உங்கள் பெருந்தன்மைக்குச் சாட்சி.
என்று சொல்லியிருப்பதிலிருந்து வைரமுத்துவின் உள்ளக் காட்சி வெளிப்படுகிறது. மேலும், தான் தி.மு.க.வின் தீவிர உடையணிந்தவன் என்பதை தெரிந்திருந்தும் எனக்கு தாங்கள் மரியாதை செய்திருப்பதை எண்ணிப்பார்க்கும் நெஞ்சம் நனைகிறதோடு மட்டுமல்ல என் இரத்தமும் உரைகிறது என்கிறார் கவிஞர் வைரமுத்து. இதனை, “என்னைப் பற்றிய கோப்பு ஒன்று உங்கள் பார்வைக்கு வருகிறது. என் ஜாதகம் அறிகிறீர்கள். தேசிய விருது வாங்கிய பிறகு முதலமைச்சரான உங்களைச் சந்திக்காமல் கலைஞரைச் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறேன். கவனிக்கிறீர்கள். இத்தனைக்குப் பிறகும் எனக்கு இரண்டு முறை விருது தருகிறீர்கள். உங்கள் பெருந்தன்மை கண்டு நெகிழ்ந்து போகிறேன். உங்கள் வெற்றியிலிருந்து நாங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒன்றே ஒன்று உண்டு அது தான்- நசிந்து போனவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது. உங்கள் பாடல்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செய்த ரத்ததானம். ஒரு பாடலின் பாடலாசிரியன் காணாமல் போவது பாடலுக்கு வெற்றி ஆகாது என்ற போதிலும், பாடலாசிரியன் முகம் கரைந்து போய் நீங்கள் மட்டுமே முகம் காட்டுவது உங்கள் பாடல்களில் மட்டும் தான். உங்களுக்காகப் படைக்கப்பட்ட பாடல்கள் என்னையும் படைத்திருக்கின்றன. எனக்கு ஒரே ஓர் ஆசை மட்டும். ஆடிக்காற்றில் ஆடும் அகல் விளக்கின் சுடராய் ஆடிக் கொண்டேயிருக்கிறது. நிகழ்விலிருக்கும் எல்லாக் கதாநாயகர்களும் என் பாடலை உச்சரித்திருக்கிறார்கள். உங்கள் உதடுகளைத் தவிர” என்று கூறியிருப்பதிலிருந்து வைரமுத்துவின் ஆசையும் அவரின் பார்வையில் புரட்சித்தலைவர் வீற்றிருக்கும் இடமும் வெளிப்படுகிறது.
முனைவர் மு.கோ.கோவை மணி
இணையத்தில் படித்தது