அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு

அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்பக் காவியக் கலையே ஓவியமே
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
விண்ணுக்கு மேலாடை
பருவ மழை மேகம்
இப்படி அற்புத பாடல்களைத் தந்தவர் உவமைக் கவிஞர் சுரதா, அவர்கள்.
வாலி கூறுவார் –
அவன் உரைக்காத உவமை இல்லை
அவனுக்குத்தான் உவமை இல்லை
இவரின் பாடல்கள் அனைத்திலும், உவமை தொக்கி நிற்கும்.
ராஜகோபாலன் என்ற மாணவர் , தஞ்சாவூரிலிருந்து புதுவை சென்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களிடம் பணியாளராக சேர்ந்தார். பள்ளி இறுதி படிப்பிற்கு பிறகு, தனியாக தமிழ் இலக்கணம் கற்றார். இரண்டு வருடங்கள் அவருடன் இருந்தார். அப்போது பாரதிதாசன், வாணிதாசன், கம்பதாசன், கண்ணதாசன் என்ற வரிசையில், தனது பெயரையும் சுப்பு ரத்தின தாசன் என்று மாற்றி, சுரதா என்று அழைத்துக் கொண்டார். (மகாகவி பாரதி தன்னை ஷெல்லி தாசன் என்று ஒரு புனைப்பெயரில் உலாவி இருக்கிறார்)
1944ல் மங்கையர்க்கரசி உள்ளிட்ட பல படங்களுக்கு, கதை வசனம் எழுதினார். கவிஞர் கு ச கிருஷ்ணமூர்த்தி இவரை திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். உவமைக் கவிஞர் என்ற பட்டத்தைத் தந்தவர் சிறுகதை எழுத்தாளர் திரு ஜெகசிற்பியன் அவர்கள். பின்னாட்களில், அரசவைக் கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளையிடம் உதவியாளராக இருந்தார்.
முதல் பாடல் வாய்ப்பு ,
1952 ல் என் தங்கை என்ற படத்தில், ஆடும் ஊஞ்சல் போல அலை ஆடுதே. முதல் பாடலிலேயே தனது உவமையைக் கையாண்டார். தியாகராஜ பாகவதர் நடித்த அமரகவி என்ற படத்தில் எழுதினார். தொடர்ந்து, திருமணம் படத்தில்.
‘எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே’ என்ற பாடல் மிக அருமை.
எத்தனை உவமைகள் ஒரு திரைப்படப் பாடலில் ? சஹானா ராகத்தில், இசை வேந்தர் டி எம் எஸ், திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் அவர்கள் இசையில் பாடி இருப்பார்கள்.
மனம் விரும்பும் காட்சியை
கனவினில் கண்டாலும்
மையல் தீருமா நுரை தின்று பசியாறுமா
மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா
முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா….
நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே
நேச முகம் இரண்டும் நெருங்குமா
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா
தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் இடம் பெற்ற பாடல், இவரை புகழ் ஏணியில் அமர்த்தியது – சீர்காழி கோவிந்தராஜன், திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் இசையில் வெளிவந்த அந்தப் பாடல் – இன்னும் கேட்டு மகிழும் பாடல் –
அமுதும் தேனும் எதற்கு
நீ அருகினில் இருக்கையிலே எனக்கு.
நிலவின் நிழலோ நின் வதனம்
புது நிலைக் கண்ணாடியோ
மின்னும் கன்னம் என்றும்
மொழி போலே
சுவையூட்டும் செந்தேனே என்றும், உவமைகள் சொட்டும்.
நாடோடி மன்னன் படத்தில் இடம்பெற்ற, கண்ணில் வந்து மின்னல் போல, பாடலும் மிக பிரபலமானது. டி எம் எஸ் – ஜிக்கி இனிய குரல்களில், அற்புத பாடல்.
மானே – மலரினும் மெல்லியது காதலே என்று எழுதி இருப்பார்.
அத்துடன்
சுடர் மின்னல் கண்டு,
தாழை மலர்வது போலே
உன்னைக் கண்டு
உள்ளம் மகிழ்ந்தேனே என்று எழுதியதற்கு, அவர், கூறுவார்.
தாமரை – சூரியனைப் பார்த்து மலர்கிறது
அந்தியில் மல்லிகை – கருக்கலைப் பார்த்து மலர்கிறது
இரவில் அல்லி – நிலவைப் பார்த்து மலர்கிறது
ஆனால், எப்போதோ மேகம் கறுத்து, மழை பெய்யும்போது, தோன்றும் மின்னல் ஒளியில் (ஓரிரு மணித்துளிதான்)
தாழை மலர்கிறது என்று காதல் பாடலுக்கு, அறிவியல் விளக்கம் சொன்னாராம்.
எவ்வளவு அழகு, பாருங்கள் !
நாணல் என்ற படத்தில், வி குமார் இசையில், ஒரு அற்புத பாடல் –
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
மண்ணுக்கு மேலாடை வண்ண மையிருட்டு
மனதிற்கு மேலாடை வளர்ந்து வரும் நினைவு
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்
என்று அற்புதமாக எழுதி இருப்பார். அதேபோல, மறக்க முடியுமா படத்தில், மெல்லிசை மன்னர் டி கே ராமமூர்த்தி அவர்கள் இசையில், எழுதிய, வசந்த காலம் வருமோ என்ற பாடல் மிக அருமை. நேற்று இன்று நாளை படத்தில் நெருங்கி நெருங்கி என்ற பாடல் இவர் எழுதியது.
புதுக்கவிதை பிரபலமாகுமுன்னே, மரபில் அதைக் கொண்டுவந்தவர் சுரதா அவர்கள்.
யானைத் தந்தம் போலே பிறை நிலா ; நெளியும் பாம்பு போல நதி ; வெற்றிலை போடாமல் வாய் சிவந்த கிளிகள் ; காலில்லாக் கட்டில் பாடை ; தண்ணீரின் வாக்கியம் – ஆறு;
வெண்மையைக் குறிக்க, தும்பைப் பூ போல முயல் என்பார். இவரோ, சலவை முயல் என்பார். நாணத்தால் குனிந்த பெண், என்பதை, பிழிந்ததொரு புடவை போல குனிந்து கொண்டாள் என்பார்.
நடிகைகள் அக வாழ்க்கை பற்றி இவர் எழுதிய கவிதைகள் 70 களில், பரபரப்பாக இருந்தன. நடிகை வாணிஶ்ரீ பற்றி, தீக்குச்சி மருந்து போல தேகம் கறுத்தவள் என்கிறார். சுவடு’ம் சுண்ணாம்பும்’ என்ற அந்த தொகுப்பு இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.
நீர்க்குமிழி படத்தில் இவர் எழுதிய வாழ்க்கையின் நிலையாமை பற்றிய பாடல் மிக அருமை
ஆடி அடங்கும் வாழ்க்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் காலில்லா கட்டிலடா
பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைப்பதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை…
இந்தப் பாடலில், நிறைவுச் சரணம் மிக அழகு மட்டுமல்ல, வாழ்வின் யதார்த்தமும் கூட. அதனால்தான், தனது இறுதி ஆசை என்று அவரே எழுதி வைத்தது – தான் மறைந்த அன்று, வானொலியில் தான் எழுதிய – அமுதும் தேனும் எதற்கு மற்றும் ஆடி அடங்கும் வாழ்க்கையடா என்ற இரண்டு பாடல்களையும் ஒலி பரப்பவேண்டும், அது அப்படியே நிறைவேற்றப்பட்டது.
அவரே கூறினார் – நான் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் திரைப்படப் பாடல்கள் எழுதி உள்ளேன். பற்களைப் போன்று எண்ணிக்கையில் குறைவாகவே எழுதி உள்ளேன் என்றார். அப்படி அவர் கூறி இருந்தாலும், அவர் எழுதியதெல்லாம் நிறைவான பாடல்கள்.
3000த்திற்கும் மேற்பட்ட கவி அரங்கங்கள் – அதிலும், வித்தியாசமாக, ஆற்றுக் கவியரங்கம், நிலாக் கவியரங்கம், கப்பல் கவியரங்கம், விமானக் கவியரங்கம், வீட்டுக்கு வீடு கவியரங்கம் என நிகழ்த்தியவர். பல இதழ்கள் வெளியிட்டார். நூல்கள் மற்றும் கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு விருதுகள் மற்றும் பாராட்டுக்களைப் பெற்ற பெருமை கொண்டவர்.
திருமண வாழ்த்துக் கூறும்போது கூட, தமிழ் இலக்கணத்தை மனதில் வைத்து,
இரட்டைக் கிளவி போல இணைந்தே வாழுங்கள் – பிரிந்தால் பொருள் இல்லை, என்பார்.
இப்படித் தேர்ந்தெடுத்த சொல் மேகங்களால், தேன் மழையாக உவமைகளைக் கவிதையாகத் தந்தவர் சுரதா என்றால் மிகை ஆகாது.
– தென்காசி கணேசன்
நன்றி: குவிகம் மின்னிதழ்