பரபரவென நகர வேண்டும்; சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்கக் கூடாது;

பரபரவென நகர வேண்டும்; சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்கக் கூடாது; இலக்கியம் வேண்டாம்; லைட் ரீடிங் போதும்… என்று நினைத்தால் கண்ணை மூடிக் கொண்டு எழுத்தாளர் என்.கணேசன் எழுதிய எந்த நாவலையாவது படிக்கத் தொடங்குங்கள்.
யார் என்று தெரியவில்லை; அறிமுகமும் இல்லை. ஆனால், அவரது எழுத்து ஜெட் வேகத்தில் பறக்கிறது.
மாந்த்ரீகம் / குடும்பம் / காதல் இல்லாத எண்டமூரி விரேந்திரநாத்தின் நாவல்கள் நினைவுக்கு வருகின்றன.
ஆங்கில பல்ப் நாவல்களுடன் என்.கணேசனுக்கு நல்ல அறிமுகம் இருப்பதை உணர முடிகிறது. உதாரணமாக அவரது ‘அமானுஷ்யன்’ நாவல். அதில் ராபர்ட் லட்லம் எழுதிய உலகப் புகழ்பெற்ற ‘Bourne Identity’ புதினத்தின் வாசனையை நுகரலாம். என்றாலும் ‘அமானுஷ்யன்’ காப்பி அல்ல.
‘சத்ரபதி’, ‘சாணக்யன்’ என இரு வரலாற்று நாவல்களையும் எழுதியிருக்கிறார். இரண்டுமே அனைவருக்கும் தெரிந்த கதைதான். ஆனால், அறிந்ததை அறியாத கோணத்தில் சொல்ல முற்பட்டிருக்கிறார்; வெற்றியும் பெற்றிருக்கிறார்.
உதாரணத்துக்கு சாணக்யர் செய்த சபதம். அதை தனிப்பட்ட பகையாக குறுக்காமல் தேசத்துக்கான சபதமாக மாற்றியதில் என்.கணேசன் தனித்து தெரிகிறார்.
அவரது அனைத்து புதினங்களுமே நான் ஸ்டாப் ஆக படிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளன.
தொடராக எந்த பத்திரிகைகளிலும் வெளிவராமல் நேரடியாக அச்சு வடிவம் பெறுகின்றன.
ஆம். எந்த தமிழ் வெகுஜன பத்திரிகைகளையும் சார்ந்து இருக்காமல் தன் பாதையில் தனித்து பயணம் செய்கிறார்.
புத்தகக் கடைகளில் இவரது நாவல்களை கேட்டு வாங்குகிறார்கள். நான்கு வாடகை நூலகங்களை அலசி ஆராய்ந்தபோது இவரது ஒவ்வொரு நாவலும் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதிகள் அங்கிருப்பதை காண முடிந்தது. அதுவும் பலர் படித்திருப்பதற்கு அறிகுறியாக கசங்கிய நிலையில்.
கள்ள சந்தையிலோ (பிடிஎஃப்) என்.கணேசனின் பெயரைக் குறிப்பிட்டு அவர் எழுதிய நாவல் இருக்கிறதா என சட்டையை கொத்தாகப் பிடித்து உலுக்குகிறார்கள்!
வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
வாழ்த்துகள் என்.கணேசன். பத்திரிகைகளை எதிர்பார்க்காமல் உங்கள் பாதையில் தொடர்ந்து பயணம் செய்யுங்கள். விடாமல் எழுதுங்கள்.
என்றும் அன்பு
