சின்னக்குத்தூசி

சின்னக்குத்தூசி காலமான நாளின்று : அவர் குறித்த நினைவலைகள்
திருவல்லிக்கேணி பாரடைஸ் லாட்ஜின் சின்ன அறையில் புத்தகக் குவியல்களின் நடுவே பேரகராதி போல் வீற்றிருக்கும் புன்னகை பூத்த சின்னக் குத்தூசியின் முகம் நெஞ்சை விட்டு அகலாது. புத்தக தூசு பலருக்கு அலர்ஜி, இவருக்கோ அதுவே எனர்ஜி. அப்படி புத்தகங்களூடே வாழ்ந்தார்.
முன்னொரு வரில்லை, பின்னொரு வரில்லை என்று ஆ. கோபண்ணா கூறிய வரிகள் மிகை அல்ல. உண்மை.
காட்சிக்கு எளியர்; பழகுதற்கு இனியர்; கருத்துப் போரில் முனை மழுங்கா குத்தூசி. அவர்தான் அய்யா சின்னக் குத்தூசி.
பிறப்பால் பிராமணர். ஆனால், வாழ்நாள் முழுவதும் பிராமணியத்தின் வைரி. பெரியாரின் கொள்கை முரசம். இவர் வாழ்க்கையும் பயணமும் இன்றைய தலைமுறை அவசியம் அறியவேண்டிய பெரும் செய்தி.
இயற்பெயர் தியாகராஜன். திருவாரூரில் ஏழ்மையான பிராமணக் குடும் பத்தில் பிறந்தவர். வறுமையை சுவைத்தவர். மாணவப் பருவத்திலேயே பெரியாரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டவர். பிராமணர்கள் தி.க வில் உறுப் பினராக முடியாது என்ற அன்றைய விதி காரணமாக உறுப்பினராக வில்லை. ஆயினும் திராவிடர் கொள்கைகளில் தீவிரமாய் செயல்படலானார்.
மணலூர் மணியம்மா என்கிற கம்யூனிஸ்ட் போராளி, இடதுசாரி புத்தகங் களை ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்வார். அவரது உதவியாளராக சிறிது காலம் செயல்பட்ட போது புத்தகங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டார்.
வாழ்க்கைப் பயணத்தில் சிறிது காலம் ஆசிரியராக இருந்தார். அக் காலத்தில் திமுக அரசியலோடு இவரது நெருக்கம் அதிகரித்தது. ஈ.வெ.கி. சம்பத் திமுகவிலிருந்து விலகி தமிழ் தேசியக் கட்சி என தனி ஆவர்த்தனம் செய்த போது அவரைப் பின் தொடர்ந்தார். சம்பத் காங்கிர கட்சிக்குப் போன போது இவரும் காங்கிரஸோடு இணைந்து நின்றார். அப்போதும் பெரி யாரின் பகுத்தறிவுக் கொள்கைகளையும் சமூக நீதி கருத்துகளையும் உரக் கப் பேசிக் கொண்டே இருந்தார். காமராஜருக்குப் பின் திமுக அரசியலில் ஆர்வம் காட்டினார்.
மாதவி என்ற ஏட்டில் எழுதத் துவங்கி தமிழ்ச் செய்தி, அலையோசை, நவசக்தி, எதிரொலி, முரசொலி, நக்கீரன் என பல பத்திரிகைகளில் கூர்மை யான அரசியல் விவாதக் கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வந்தார். இறக் கும் தருவாயிலும் மருத்துவமனையில் இருந்த படி அரசியல் விமர்சனக் கருத்துக்களை இவர் சொல்ல, மற்றொருவர் எழுத, பின்னர் அதுக் கட்டு ரையாக வெளிவந்தது என்பது தாம் மேற்கொண்ட பணியின் மீதான இவரது அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்தும்.
தீக்கதிருக்கும் முரசொலிக்கும் நடக்கும் அரசியல் வாதங்களில் சின்னக் குத்தூசி எழுத்துகள் முக்கிய இடம் பெறும். பொதுவாக ஆதாரமோ மேற் கோளோ காட்டாமல் எதையும் எழுதமாட்டார். பழைய ஏடுகளில் தேடித் துருவி சில செய்திகளை சுட்டிக் காட்டி அரசியல் விவாதம் செய்யும் இவரது பாணி தனித்துவம் ஆனது.
முதல் நாள் இவரைக் கடுமையாக விமர்சித்து எழுதிவிட்டு மறுநாள் நேரில் சென்று பார்க்கும் போது, தோழர் ரொம்ப நல்லா எழுதி இருந் தீங்க எனப் பாராட்டுவார். நமக்குத் தான் கூச்சமாக இருக்கும். கருத்துச் சண்டை மனித உறவுகளைப் பாதிக்கக் கூடாது என்பதில் கறாராக வாழ்ந் தார். தன் நிலைபாட்டில் வழுவ மாட்டார்; ஆனால் எதிராளி சொல்வதை காது கொடுத்துக் கேட்பார்; படிப்பார். இந்த ஜனநாயகப் பண்பு இப்போது எத்தனை பேரிடம் காண முடியும்?
இவரது எழுத்துகள் புதையல் கருவூலம் களஞ்சியம் பவளமாலை வைரமாலை பொற்குவியல் பூக்கூடை இடஒதுக்கீடு அன்று முதல் இன்று வரை என பல்வேறு தொகுதிகளாக நக்கீரனால் வெளியிடப்பட்டுள்ளன.
அவை அவ்வப்போது எழும் அரசியல் தேவையை ஒட்டி அவர் பல ஏடுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே. அவற்றில் பல கட்டுரைகள் அன்றைய சூழ்நிலை சார்ந்தது மட்டுமே. ஆயினும் பாபர் மசூதி இடிப்பு இட ஒதுக்கீடு மாநில உரிமை மதவெறி எதிர்ப்பு தீண்டாமை எதிர்ப்பு சமூக நீதி ஜனநாயக உரிமைகள் நதி நீர் பிரச்சனைகள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் காலத்தை மீறி நிற்கும் என்பதில் யாதொரு ஐயமுமில்லை.
தொகுக்கப்பட்ட இவரது எழுத்துகள் நிகழ்கால திராவிட இயக்க அர சியல் சார்ந்த வரலாற்றை பேசும். அதே சமயம் இடது சாரி இயக்கம் சார்ந்த அரசியலைப் பேசும் வரலாற்று தொகுப்புகள் இதுபோல் இல் லையே என்ற ஏக்கமும் எழுகிறது. பத்திரிகையாளர்கள் உரிமை பறிக்கப் படும் போது, அதனை பாதுகாக்க முன்வரிசைப் போராளியாக நின்றவர் சின்னக்குத்தூசி.
திருமணமே செய்து கொள்ளாமல் கொள்கைக்காக வாழ்நாள் முழு வதும் எழுத்துத் தவம் நோற்ற இவரின் வாழ்க்கை ஒரு வித்தியாசமான வரலாறாகும்.
ஊடக உலகம் தார்மீக விழுமியங்களை இழந்து காசுக்கு விலை போய்க் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், எழுத்துக்காக வாழ்ந்தவரின் இறப்பு உருவாக்கியுள்ள வெற்றிடம் மிகப் பெரியது. ஆயினும்….
சின்னக் குத்தூசியைப் போலவே வளரும் தலை முறை மீது நம்பிக்கை கொள்வோம்.
