கோலிவுட் சினிமா கண்ட முக்கிய முத்து வில்லன்களில் ஒருவர்எஸ்.ஏ.நடராஜன்

கோலிவுட் சினிமா கண்ட முக்கிய முத்து வில்லன்களில் ஒருவர்
உலகில் இதுவரை கூறப்பட்டு வந்திருக்கும் எல்லாக் கதைகளும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டமாக வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. திரைப்படம் பிறந்த பிறகு நன்மையின் உருவமாக வடிக்கப்பட்ட கதாநாயகனின் ஆளுமைகளை நிலைநாட்ட, தீமையின் உருவமாக வடிக்கப்பட்டுவரும் வில்லன் கதாபாத்திரம் தேவைப்படுகிறது. கதாநாயகனைவிட வில்லன் கதாபாத்திரம் உயர்ந்து நின்றுவிடும் பல படங்கள் ஹாலிவுட் உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அதன் தாக்கம் தமிழ் சினிமாவில் 40-களிலேயே தென்பட்டது. பி.யு. சின்னப்பா நடிப்பில் 1940-ல் வெளியான ‘உத்தமபுத்திரன்’ சிறந்த உதாரணம். அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து 1950-ல் வெளியான ‘மந்திரிகுமாரி’யில் கதாநாயகன் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்தை மட்டுமல்ல, அந்தப் படத்தில் மொட்டை அடித்துக்கொண்டு ராஜகுருவாக மிரட்டிய எம்.என்.நம்பியாரையே தூக்கிச் சாப்பிட்ட வில்லன் வேடத்தை அந்தப் படத்தில் ஏற்று நடித்தவர் எஸ்.ஏ.நடராஜன். நாடக உலகிலிருந்து சினிமாவுக்குக் கிடைத்த நல்முத்து. ஆர். நாகேந்திர ராவ், ரஞ்ஜன், எம்.என். நம்பியார், எஸ்.வி. ரங்கா ராவ், எம்.ஆர். ராதா, வீ.கே.ராமசாமி என்று வயதிலும் அனுபவத்திலும் மூத்த பத்துக்கும் அதிகமான வில்லன் நடிகர்கள் கோலோச்சிக்கொண்டிருந்த ஐம்பதுகளில் ‘மந்திரிகுமாரி’ என்ற ஒரே படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தார் இந்த நடராஜன்.
அழகான வில்லன்களில் ஒருவர் எஸ்.ஏ.நடராஜன் என அன்பாக அழைக்கப்பட்டார். அவரின் குரலோ வெண்கலக்குரல் மட்டுமில்லாமல் வசனம் பேசும் விதமே தனித்துவமாக இருக்கும். அவரை போல் சிரித்துக் கொண்டே வசனம் பேசுவது யாரும் இன்று வரை செய்ய முடியாது. தனிச்சிறப்பு. எம்.ஜி.ஆரின் மந்திரி குமாரி , சிவாஜி கணேசனின் மனோகரா படங்களை நினைத்தால் எஸ்.ஏ. நடராஜனை நினைக்காமல் இருக்க முடியாது . கோலிவுட் சினிமா கண்ட முக்கிய முத்து வில்லன்களில் ஒருவர் இவர்.
முப்பதுக்கும் அதிகமான படங்களில் நடித்த நடராஜன், ‘நல்ல தங்கை” (1955) என்ற படத்தைத் தனது ஃபார்வட் ஆர்ட் பிலிம்ஸ் கம்பெணி மூலம் தயாரித்து இயக்கவும் செய்தார். இந்த முயற்சி வெற்றிபெற்றாலும் ஏ.பி.நாகராஜனின் கதை வசனத்தில் நடராஜன் தயாரித்த ‘மாங்கல்யம்’ உள்ளிட்ட சில படங்கள் அவருக்குப் பெரும் பொருள் நஷ்டத்தை ஏற்படுத்தின. அதனால் நொடித்துப்போனவர் அதன்பின் எழவே இல்லை. 90 வயதில் சென்னை வந்த எல்லீஸ் ஆர். டங்கன், தாம் பாதிவரை இயக்கிய ‘மந்திரிகுமாரி’ படத்தில் நடித்த நடிகர்களைப் பார்க்கவிரும்பினார். முக்கியமாக எஸ்.ஏ.நடராஜனை. ஆனால், அவர் அப்போது காலமாகியிருந்தார்.
From The Desk of கட்டிங் கண்ணையா!
