ஆன்மீகம்

புதுச்சேரியில் இருந்து திருக்காஞ்சிக்கு ஹெலிகாப்டர் சேவை – 80 அடி உயரத்தில் பிராமாண்ட சிவன் சிலை!

புதுச்சேரியில் இருந்து திருக்காஞ்சிக்கு ஹெலிகாப்டர் சேவை – 80 அடி உயரத்தில் பிராமாண்ட சிவன் சிலை!

புதுச்சேரி நகரில் இருந்து 15 கிமீ தூரத்தில் வில்லியனூருக்கு அருகே அமைந்திருக்கும் ஸ்ரீ கங்கைவராக நதீஸ்வரர் கோயில் காசிக்கு இணையான கோயில், ஏன் காசியைக் காட்டிலும் வீசம் அதிகம் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு சென்று வந்தால் பல நன்மைகள் உண்டாகிறது என்பது ஐதீகம். இந்த பிரசித்திப் பெற்ற கோவிலில் நடைபெறும் கங்கா ஆரத்தி, பிரதோஷ வழிபாடு, பௌர்ணமி பூஜைகள், திருக்காஞ்சி மகம் உள்ளிட்டவற்றில் கலந்துக் கொள்ள சுற்று வட்டாரத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்துக் கொள்கின்றனர். ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் புஷ்பகரணி விழாவில் கலந்துக் கொள்ள இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் புதுச்சேரி – திருக்காஞ்சி இடையே ஹெலிகாப்டர் சேவையை தொடங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. பிரசித்திப் பெற்ற இக்கோயிலைப் பற்றிய சிறப்பம்சங்கள் இதோ!

காசியை விட வீசம் அதிகம் கொண்ட கோயில் முன்னொரு காலத்தில் இறந்தவர்களின் அஸ்தியை புனித நதியான கங்கையில் கரைப்பதற்காக சிலர் இந்த வழியாக சென்று கொண்டிருந்தனராம். அவர்கள் திருக்காஞ்சியைக் கடக்கும் போது அவர்கள் வைத்திருந்த அஸ்தி பூவாக மாறியதாம். காசியை விடவும் இந்த ஸ்தலம் வீசம் அதிகம் கொண்டது என அசரிரியும் கேட்டதாம். வடக்கு நோக்கி உத்தரவாகினியாக சங்கராபரணி பாய்வதால், இந்த ஆறு கங்கைக்கு நிகராகவும், இந்தத் தலம் காசிக்கு நிகரான தலமாகவும் போற்றப் படுகிறது. சங்கராபரணி என்னும் வராக நதியின் கரையில் கோவில் கொண்டிருப்பதாலும் இந்தத் திருத்தலத்து இறைவன் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் என்று அழைக்கப் படுகிறார்.

16 செல்வங்களையும் வாரி வழங்கும் லிங்கம் மேலும் இந்த இறைவன் அகஸ்திய மகரிஷியால் பிரதிஷ்டை செய்து வழிபடப்பெற்றவர் என்பதால், இந்தக் கோவில் அகத்தீஸ்வரம் என்னும் பெயரிலும் போற்றப்படுகிறது. கருவறையில் வீற்றிருக்கும் 16 பட்டைகள் கொண்ட ஷோடச லிங்கமாக சிவபெருமான் இங்கு வரும் பக்தர்களுக்கு காசிக்கு சென்று வந்ததற்கான புண்ணியத்தை வாரி வழங்குகிறார். இந்த 16 பட்டைகளும் 16 செல்வத்தைக் குறிக்கின்றன. ஆதலால் இங்கு வந்து கங்கை வராக நதீஸ்வரரை வழிப்பட்டு சென்றால் 16 செல்வங்களும் கிடைக்கப்பெற்று இன்புற்று வாழலாம் என்று கூறப்படுகிறது.

திருக்காஞ்சி கோவிலின் தனிச்சிறப்புகள் o மேற்கு திசை நோக்கி அமர்ந்துள்ள சிவ பெருமான் சென்னையில் உள்ள திருவான்மியூர், ஆந்திர மாநிலத்தில் உள்ள காலஹஸ்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் மற்றும் இந்த ஊரான திருகாஞ்சி ஆகிய தலங்களில் மட்டுமே உண்டு. o இந்தக் கோவிலில் பௌர்ணமி தோறும் அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருமுறை பாராயணங்களுடன் சுவாமி புறப்பாடும் நடைபெறுகிறது. o நவராத்திரி நாள்களில் அம்பிகை இருவருக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், விஜயதசமி நாளில் அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பாரிவேட்டைக்குச் செல்லும் வைபவமும் விமரிசையாக நடைபெறும்.

ஒவ்வொரு மாசி மாதத்திலும் இங்கு மாசி மக பெருவிழா வெகு விமர்சியாக நடைபெறும். இங்கு நடைபெறும் தீர்த்தவாரியைக் காண மக்கள் கூட்டம் அலை மோதும். o மேலும் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கா ஆரத்தி போன்று ஆரத்தி நடைபெறுகிறது. இதனைக் காண சனிக்கிழமையில் அங்கு மக்கள் கூட்டம் குவியும். o 80 அடி உயர பிரமாண்ட சிவன் சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

சங்கராபரணி ஆற்றங்கரையில் புஷ்பகரணி விழா நடைபெறுவதை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரி-திருக்காஞ்சி இடையே ஆன்மிக ஹெலிகாப்டர் சேவைக்கு ஏற்பாடு நடக்கிறது. இந்த விழாவிற்கு உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும் சங்கராபரணி ஆற்றில் ஆரத்தி விழா நடைபெற்று வருகிறது. புஷ்பகரணி திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திருத்தலம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த வேதங்களைக் கொண்ட வேதபுரி என்று போற்றப்படும் வில்லியனூரில் அமைந்துள்ளது. வில்லியனூரை புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஊர்களில் இருந்து எளிதில் அணுகலாம். திருக்காஞ்சி வில்லியனூர் நகரில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பேருந்து, ஆட்டோ மற்றும் டாக்சி மூலம் கோவிலை எளிதில் அடையலாம். வாழ்வில் ஒரு திருப்பம் வேண்டுமா? உடனே இக்கோவிலுக்கு சென்று வாருங்கள்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button