PSG வெற்றிக்கு தேவைப்பட்ட கோலை பதிவு செய்த மெஸ்ஸி: கொண்டாடிய எம்பாப்பே

பிஎஸ்ஜி கிளப் அணிக்காக 95-வது நிமிடத்தில் கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை கோலாக மாற்றி அணியை வெற்றி பெற செய்துள்ளார் நட்சத்திர வீரர் மெஸ்ஸி. இந்தப் போட்டியில் நெய்மர் மற்றும் எம்பாப்பே என இருவரும் கோல் பதிவு செய்திருந்தனர். அதில் எம்பாப்பே 2 கோல்களை பதிவு செய்திருந்தார்.
லீக் 1 தொடரில் ஞாயிறு அன்று LOSC Lille அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணி வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் பிஎஸ்ஜி அணி முதலிடத்தில் உள்ளது. வெவ்வேறு தொடர்களில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளை தழுவிய நிலையில் பிஎஸ்ஜி பெற்ற முதல் வெற்றி இது. அதேபோல பிஎஸ்ஜி அணிக்காக மெஸ்ஸி பதிவு செய்துள்ள 11-வது கோலாக இது அமைந்துள்ளது.
ஆட்டத்தின் பரபரப்பான கட்டத்தில் லாவகமாக பந்தை தனது இடது காலால் வலைக்குள் தள்ளி கோலாக மாற்றி இருப்பார் மெஸ்ஸி. அது இந்தப் போட்டியில் பிஎஸ்ஜி பதிவு செய்தி நான்காவது கோல். அதன் மூலமாக அந்த அணி வெற்றி பெற்றது.
“இது எங்களது சிறந்த ஆட்டம் அல்ல. நாங்கள் சில தவறுகளை செய்தோம். இருந்தாலும் எங்கள் அணி பல்வேறு வீரர்களை கொண்ட ஒரு வித்தியாசமான அணி என்பதை இந்த வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளோம்” என எம்பாப்பே தெரிவித்துள்ளார்.